இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-1 விண்கலத்தின் முக்கிய இலக்கு நிலவில் உள்ள ஹீலியம் 3 எனும் அணுப் பொருள் இருப்பை ஆய்வு செய்வதே என்று கூறியிருந்தோம்.
உலகம் முழுவதும் அணு மின் சக்தி உற்பத்திக்கு அடிப்படையாக இருந்துவரும் அணு எரிபொருளான யுரேனியத்தில் உள்ள சிக்கல், அதனை அணு உலைகளில் பயன்படுத்தியதற்குப் பிறகு கிடைக்கும் கழிவில் உள்ள கதிர் வீச்சு அபாயமாகும். முதல் தலைமுறை அணு உலைகள் என்றழைக்கப்படும் கடின நீர் உலைகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் யுரேனிய அணுக் கழிவில் இருந்துதான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான புளூடோனியம் கிடைக்கிறது. அதனால்தான் யுரேனியம் அளிக்க முன்வரும் நாடுகள் அதனை மறு சுழற்சி செய்து தொழி்ல் நுட்ப ரீதியாக அடுத்தத் தலைமுறை அணு உலையான வேக ஈனுலையில் (Fast Breeder Reactor) பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கக்கூடத் தயங்குகின்றன.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட யுரேனிய அணுக் கழிவை வேரொரு இடத்திற்கு கொண்டு செல்லவதோ அல்லது மிக பாதுகாப்பாக அதனை கையாள்வதோ கூட ஆபத்து நிறைந்ததே. இது ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. ஆனால், இந்தியா பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தை மறு சுழற்சி செய்து அதனை வேக ஈனுலையில் பயன்படுத்தவும், அதன்மூலம் அணு கதிர் வீச்சு அபாயத்தை ‘0’ அளவி்ற்கு குறைத்தும் சாதனை புரிந்துள்ளது.
ஆயினும் பாதுகாப்பான அணு சக்தி என்று இப்புவியில் ஏதுமில்லை என்ற நிலையில்தான், நிலவில் ஏராளமாகவுள்ள ஹீலியம் 3 அறிவியலாளர்களின் கருத்தைக் கவர்ந்தது. நமது புவியில் மிக மிகக் குறைவாகவே கிடைக்கும் (இல்மனைட் என்ற கனிமத்துடன் கலந்துள்ளது) ஹீலியம் 3, நிலவில் ஏராளமாகக் கிடைக்கிறது. சூரியனில் இருந்து வீசும் புயல்களில் பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்படும் ஹீலியம், அப்புயல்கள் நிலவுப் பரப்பைத் தாக்கும்போது அதன் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு புவியில் ஏற்படாமல் புவியின் மீது கவிந்துள்ள வளிமண்டலம் காத்துவிடுகிறது. அதனால்தான் புவியில் இது பெரிய அளவிற்கு கிடைக்கவில்லை.
நிலவின் மேற்பரப்பில் (Regolith) உள்ள பாறைகள், மண்ணில் கலந்துள்ள ஒரு மில்லியன் டன் ஹீலியத்தைக் கொண்டு புவியின் எரிசக்தித் தேவையை 1,000 ஆண்டுகளுக்கு குறைவின்றி தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்த காலம் முதல் நிலவின் மீதான மனிதனின் கவனம் (அரசுகளின் கவனம் என்று கொள்க) அதிகரித்தது. அதுமுதல் நிலவை அவன் நோக்கிய பார்வையே மாறியது.
21ஆம் நூற்றாண்டின் மத்திய கிழக்காசியா (எண்ணை வளத்தைப் பெற்ற அரபு நாடுகளைப் போன்று) நிலவுதான் என்று கூற ஆரம்பித்தனர். 2004ஆம் போட்ட ஒரு மதிப்பீட்டின்படி, இன்றைக்கு 5.7 மில்லியன் செலவு செய்து உருவாக்கக் கூடிய எரிசக்தியை ஒரு கிலோ ஹீலியம் 3ஐக் கொண்டு உருவாக்கலாம் என்று ஒப்பிடப்பட்டது.
அந்த நிலையில்தான், அமெரிக்கா மீண்டும் தனது நிலவு ஆய்வை வேகப்படுத்தும் என்றும், 2020இல் நிலவில் மனிதனை மீண்டும் இறக்கும் பணியில் நாசா ஈடுபடும் என்றும் அதிபர் புஷ் அறிவித்தார். செவ்வாயை நோக்கிய அதன் ஆய்விற்குப் பிறகு மீண்டும் நிலவை நோக்கி தனது கவனத்தைத் திருப்பப் போகும் அமெரிக்கா, நமது சந்திரயான் திட்டத்திலும் தனிக் கவனமும், பங்கும் செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
2014ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஒரு தானியங்கி கிராமத்தை (Lunar Robotic Village) உருவாக்குவது என்று 17 நாடுகளைச் சேர்ந்த 200 அறிவியலாளர்கள் முடிவு செய்துள்ளனர். 2024ஆம் ஆண்டு அங்கு மனிதன் நிரந்தரமாக தங்கவும் (தங்கி சுரங்கம் அமைத்துத் தோண்டத்தான்) இலக்கும் நிர்யித்துள்ளனர். சீனாவும் இப்பணியில் தீவிரமாக இருந்து வருகிறது. சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டத்தின் பொறுப்பாளரான புவிவேதியியல் அறிவியலாளர் ஓயுயாங் ஜியுவான், வருடத்திற்கு மூன்று முறை விண்கலத்தை அனுப்பி நிலவின் மணலைக்கு கொண்டுவந்து எரிசக்தித் தயாரிக்கத் தேவையான ஹீலியத்தை பெறவதே தங்களுடைய திட்டத்தின் இலக்கு என்று கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் எரிசக்தித் தேவைக்கு உகந்த ஆதாரமாக ஹீலியத்தைக் கருதுவதாகவும், அதனை நிறைவேற்ற நிதி தொகுப்பை உருவாக்குதில் தீவிரம் காட்டி வருவதாகவும் அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆர்.கே.கே. எனர்ஜியா தெரிவித்துள்ளது. ஆக எல்லா நாடுகளும் எரி சக்தி கண்ணோட்டத்தில்தான் நிலவை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன.
நியூக்ளியர் ஃபயூஷன் (Nuclear Fusion) எனப்படும் அணுச் சேர்க்கையின் மூலம் பாதுகாப்பாக அணு மின் சக்தி பெற ஹீலியம் 3 வழிகாட்டுகிறது.
நிலவில் அபரிதமாகக் கிடைக்கும் ஹீலியத்தையும், கடலில் இயற்கையாகவே அதிகம் கிடைக்கும் கன ஹைட்ரஜன் (heavy hydrogen) என்றழைக்கப்படும் டியூட்டரியத்தை (Deuterium -H2 - ஒரு புரோட்டானையும், ஒரு நியூட்ரானையும் கொண்டது) ஹீலியம் 3றுடன் (2 புரோட்டான்களையும், ஒரு நியூட்ரானையும் கொண்டது) சேர்க்கும்போது ஏற்படும் கிரியையில் சக்தி வாய்ந்த புரோடானுடன் கூடிய ஹீலியம் 4 உருவாகிறது. பாசிடிவ் சக்திமிக்க இந்தப் புரோட்டானின் சக்தியை நேரடியாக மின் சக்தியாக மாற்ற முடியும். புரோட்டான் சக்தியை வெப்ப சக்தியாக மாற்றி பிறகு மின் சக்தியாக்க வேண்டிய அவசியமில்லை.
அதுமட்டுமின்றி, அணு சேர்கை அடிப்படையிலான அணு மின் நிலயங்கள் அமைப்பதற்கான செலவு, மற்ற அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கான செலவுடனும், அதனை இயக்குவதற்கான செலவுடனும் ஒப்பிடுகையில் குறைவானது என்று கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் மூலம் ஒரு சில நியூட்ரான்களே உருவாகும் என்பதால் (ஒரு விழுக்காடு மட்டுமே) அணு மின் உலையை மிகப் பெரிய நகரத்தின் நடுவே கூட, ஒன்றல்ல, தேவைப்பட்டால் மூன்று அணு மின் நிலையங்களை அமைக்கலாம் என்று கதிர் வீச்சு ஆபத்தற்ற இதன் தன்மை பற்றிக் கூறியுள்ளார் ஜெரால்ட் குல்சின்ஸ்கி - இவர் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைச் சேர்ந்த ஃபயூஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர். இத்தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவர்.
ஆனால், நிலவின் மண்ணில் பொதுந்துள்ள ஹீலியத்தை எடுக்கவேண்டுமெனில், ஒரு டன் ஹீலியம் வாயுவைப் பெற 15 ஆயிரம் டன் நிலவு மண்ணை கொண்டுவந்து அதனை 800 முதல் 900 டிகிரி செண்டிகிரேட் அளவு வெப்பத்தைக்கொண்டு சூடேற்ற வேண்டும். அதற்கு எவ்வளவு செலவழித்தாலும் கூட, அதிலிருந்து கிடைக்கூடிய எரிசக்தி அளவு இன்று மானுடத்தின் பயன்பாட்டிலுள்ள எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின் சக்திக்கு ஆகும் செலவை விட மிக மிகக் குறைவாக இருக்கும், அதாவது மேலே நாம் குறிப்பிட்டபடி, இன்று நாம் ஒரு பேரல் எண்ணைக்குக் கொடுக்கும் விலை 62 டாலர்கள் (3 மாதத்திற்கு முன்பு 140 டாலர்கள் என்பது வேறு கதை), அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்தால் ஒரு டன் ஹீலியத்தில் இருந்து கிடைக்கும் எரி சக்தியை நாம் இந்த விலைக்கு கச்சாவைப் பெற்றுப் பயன்படுத்தி மின் சக்தி தயாரித்தால் அதற்கு 8.5 மில்லியன் டாலர்கள் செலவு ஆகும்.
எனவேதான், இன்று உலகளாவிய அளவிற்கு நிலவும் எரிசக்தி பிரச்சனைக்குத் தீர்வு காணவே இந்தியா அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.