உண்மையையும், நியாயத்தையும் மறைக்க நினைப்பவர் எதையும் கூறுவர். உண்மையை பொய்யாக்குவர், பொய்யை மிகச் சாதுரியமாக நியாயப்படுத்தி உண்மையெனக் காட்டி நம்பவைப்பர். தங்களின் மீதும், தங்களுடைய பிரச்சாரத்தின் மீதும் இவர்கள் அளப்பரிய நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்குக் கூறவேண்டுமெனில் கோயபல்ஸ் என்று வரலாற்றாளர்கள் கூறுவார்கள்.
அந்தப் பிரசித்திப் பெற்ற ‘பாரம்பரியம்’ கோயபல்ஸூடன் முடியாததுதான் துரதிருஷ்டம். தாங்கள் நினைப்பதையே உண்மையாக்கி, நியாயமாக்கி தங்களிடமுள்ள ஊடக பலத்தின் வாயிலாக அதனை மக்களின் கருத்தில் திணித்து, அவர்களுக்குள் ஒரு சந்தேகதப் புகை மூட்டத்தை உருவாக்குவார்கள். பிறகு, பலமாக அதனை ஊதி நெருப்பு மூட்டவும் முயற்சிப்பார்கள். சாதாரணமாக அல்ல, பலமாக, நம்பிக்கையுடன் முயற்சிப்பார்கள்.
தங்களுடைய செயல்களால் ஏற்படும் பாதிப்பை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தாங்கள் எந்த அளவிற்கு வெற்றி பெற்றோம் என்பதே அவர்களுக்கு முக்கியம்.
இப்படிப்பட்ட ‘உன்னத’ பணிதான் இம்மாத துவக்கத்திலிருந்து தமிழ்நாட்டு அரசியலிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஓரிரு பாரம்பரிய ஊடகங்களும் செவ்வனே செய்து வருகின்றன. திட்டமிட்ட அந்தத் தீவிரப் பணியின் உச்சக் கட்டம் கடந்த திங்கட்கிழமை அரங்கேறியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் நினைத்துபோல் அந்த பொய்யை உண்மையாக்கும் ‘நாணய’ நாடகத்திற்கு மக்கள் வரவேற்பில்லாமல் போய்விட்டது. எதிர்பாராத இந்தத் திருப்பம் அவர்களை கோவப்படுத்தியுள்ளது. மிகவும் கோவப்படுத்தியுள்ளது.
தமிழர்களின் உரிமையை ராஜபக்சே கொடுப்பார்!
webdunia photo
WD
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கத்தான் சிறிலங்க அதிபர் இந்தப் போரை நடத்தி வருகிறாராம். இதனால் தமிழ் சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் தற்காலிகமானதுதானாம். விரைவில் எல்லாம் முடிவிற்கு வந்துவிடுமாம். பிறகு தமிழர்களின் பிரச்சனைக்கு நியாயமான, நீடித்த அரசியல் தீர்வை பெற்றுத் தர ராஜபக்சே உறுதியுடன் உள்ளாராம்.
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு எழுந்துள்ள குரலிற்கு பதிலாக அவரிடம் இருந்து தொலைபேசியின் மூலம் ஒரு பேட்டியைப் பெற்று அதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தனது நன்றிக் கடனை ஆற்றியுள்ளது அந்த நூற்றாண்டுக்கால பாரம்பரியம்.
எப்படிப்பட்ட நாடகம் இது? தங்களைத் தவிர மற்றவர்களுக்கு எள்ளளவும் சிந்திக்கத் தெரியாது என்று மூட நம்பிக்கையில்தான் எவ்வளவு உறுதிப்பாடு. தமிழர்களுக்காக, சிறிலங்க அரசின் 30 ஆண்டுக்கால இன ஒடுக்கல் நடவடிக்கையை எதிர்த்து, தமிழர்களை காக்கும் கேடயமாக விடுதலைப் புலிகள் உள்ளனர் என்பதும், அவர்களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் காரணமாகத்தான் சிறிலங்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது என்பதும், விடுதலைப் புலிகளோடு பேசித்தான் தமிழர் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீ்ர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி, அவ்வாறு பல சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட எதையும் சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்த முன்வராததும், போர் நிறுத்தத்தை மீறிய இராணுவ நடவடிக்கைகளால் மோதல் அதிகரித்ததும், அதன் பிறகு வெளிப்படையாகவே போர் நிறுத்தம் முறிந்துவிட்டதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்துவிட்டு தமிழர்களின் மீது முழு அளவிற்கு முப்படைத் தாக்குதலை மேற்கொண்டதும், அதன் விளைவாக இன்று இரண்டரை இலட்சித்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் மண்ணிலேயே உணவின்றி, உறைவிடமின்றி, அடிப்படை தேவைகளின்றி அல்லலுறும் நிலை ஏற்பட்டது.
webdunia photo
WD
தமிழர்களின் நிற்கதியற்ற இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. ஓரிரு கட்சிகளைத் தவிர தமிழ்நாடு அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டே நிற்கிறது என்பது உறுதியானவுடன், தனது இனத்திற்கு அது வெளிப்படுத்திய இரக்க உணர்வை, அவர்களுக்கு எதிரான தாக்குதலை எதிர்க்கும் கண்டனக் குரல் ‘வெறித்தனம்’ என்று சித்தரித்து எதற்கு கட்டுரை எழுதப்பட்டது. தமிழர்களிடையே உள்ளபடியே அப்படிப்பட்ட வெறித்தனம் இருந்திருக்குமானால், இப்படியொரு கட்டுரையை எழுதி இங்கு அதனை விற்றிருக்க முடியுமா?
தனது நன்றி விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள தமிழருக்கு அரணாக நின்று போராடி 20,000 வீரர்களை இழந்த இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று வார்த்தைக்கு வார்த்தை வசைமாறி பொழியும் இந்த கருத்துச் சுதந்திரக் காவலர், தனது நோக்கும் பார்வையும் நேர்மையானதாக இருந்திருந்தால், கடந்த பல ஆண்டுகளாக கொழும்புவிலும், மற்ற இடங்களிலும் எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரே, அன்றைக்கு குரல் கொடுத்திருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை.
அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்பதில் தனக்கு வேறுபட்ட கருத்தில்லை என்று ராஜபக்சே கூறுவதை வெளியிடும் அந்த நாளிதழ், இவர் சிறிலங்க அதிபரான பிறகு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைப் பேர் கொல்லப்ப்பட்டனர் என்கின்ற பட்டியலையும் வெளியிட்டிருந்தால் அதன் நியாய உணர்வை, கருத்துச் சுதந்திரத்தில் அதற்கு இருக்கும் பற்றை அறிந்துகொள்ளலாம். அந்தப் படுகொலைகளைப் பற்றி செய்திகள் வெளியிட்டதோடு நிற்காமல், தனது கொழும்பு செய்தியாளர் வாயிலாக அதன் பின்னனிகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கட்டுரைகளை எழுதியிருந்தால் இன்றைக்கு இவர்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் புலம்புவதற்கு ஒரு அடிப்படை இருந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யவில்லையே, ஏன்?
தமிழர்களின் உரிமைக் குரல் நசுக்கப்பட்டப் பிறகுதான் ஈழத் தமிழினம் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானது. அது அவர்களின் உரிமையின் வெளிப்பாடு. அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ராசபக்சே கூறும் வார்த்தைகள் அல்ல. இதெல்லாம் தமிழர்கள் கேட்டு கேட்டுப் புளித்துப்போன சொத்தை வார்த்தைகள். தமிழர்கள் பிரச்சனைக்கு ‘அரசியல் தீர்வு காண்பேன்’ என்று சொல்லிக்கொண்டு ராஜபக்சே அதிபராகவில்லை. தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரக்கூடாது என்று வெறித்தனத்தோடு அரசியல் நடத்திவரும் ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமையா போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் அவர் வெற்றி பெற்றார். இதெல்லாம் தமிழர்கள் - இங்கும் சரி, அங்கும் சரி - மறந்துவிடவில்லை.
‘இராணுவ நடவடிக்கையின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான வழி பிறந்துவிட்டது’ என்று கூறித்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக ராஜபக்சே அறிவித்தார். இன்று அவர் நீடித்த அரசியல் தீர்வு என்று பேசுகிறார், அதனை தென் இலங்கை ஏற்கச் செய்வேன் என்று கூவுகிறார். ஈழத் தமிழினத்தின் மீது திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுவரும் ஒரு ‘அரச பயங்கவாதியை’ தூயவனாக சித்தரிக்க படாது பாடுபட்டுவரும் இந்த கருத்துரிமைக் காவலர்கள், சிங்கள இராணுவத் தளபதி சனத் பொன்சேகா, இலங்கை சிங்களவர்களுக்குத்தான் சொந்தம், அது பெரும்பான்மை இனம், அதனை சிறுபான்மை மக்களான தமிழர்கள் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும் என்று இனவெறியுடன் பேசியபோது, அதனை ‘சிங்கள ஷவனிசம்’ என்று கட்டுரை தீட்டாதது ஏன்? உங்களது தளபதி இப்படி கூறியதற்கு அதிபரான உங்களின் பதிலென்ன என்று கேட்டு வெளியிடாதது ஏன்?
ஏனென்றால் வலிமையான எழுத்தால் உண்மையையும் நியாயத்தையும் மறைத்துவிடலாம் என்று அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைப்படுத்த வேண்டும் என்ற மறைமுக சித்தம்.
ஆனால் இதெல்லாம் நிறைவேற வேண்டுமே? சிந்திக்கத் தெரியாதவர்களா தமிழர்கள்?
‘பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பயனில்லே அதனை மையில நனைச்சு பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே”
என்ற தமிழ் திரைப்படப் பாடல் இன்றைக்கு விற்காது. அந்தக் காலம் மலையேறிவிட்டது.
தமிழினம் நீண்ட தூரம் நடந்துவிட்டது. வெளிச்சம் வெகு தூரத்தில் இல்லை.