பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: வெற்றியா? தோல்வியா?
வியாழன், 11 செப்டம்பர் 2008 (22:19 IST)
இந்தக் கேள்விக்கு அமெரிக்க அரசிடம் பதில் கேட்டால், “முழுமையான வெற்றி கிட்டவில்லை, அந்தப் போர் இன்னமும் முடிந்துவிடவில்லை. ஆனால், பயங்கரவாதம் பெருமளவிற்கு ஒடுக்கப்பட்டுவிட்டது” என்றுதான் கூறும்.
இதே கேள்வியை அமெரிக்க மக்களிடம் கேட்டால், தோல்விதான் என்று கூறி, ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் இழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை நினைத்து வருத்தத்துடன் பெரு மூச்சு விடுவார்கள்.
7 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்களின் மீது இரண்டு விமானங்களை மோதி நடந்த தாக்குதலில் 3,300 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் மீதும் தாக்குதல் நடந்து 800 பேர் வரை கொல்லப்பட்டனர்.
உலகையே அதிர்ச்சியால் உலுக்கிய அந்த பயங்கரவாதத் தாக்குதல் இன்றல்ல, இனி வரும் காலத்திலும் உலக சமூகத்தால் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத நிகழ்வாகும்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒடுக்க, இத்தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியதாகக் குற்றம்சாற்றப்பட்ட ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் கய்டா அமைப்பினை ஒழிக்க, பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று நேட்டோ கூட்டமைப்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் அதனுடன் இணைந்து போரில் குதித்தன.
அல் கய்டாவை அழிக்கவும், அதன் தலைவன் ஒசாமா பின் லேடனை கொல்லவும் தனது போர்படைப் பலத்தை முடுக்கிவிட்ட அமெரிக்காவும், நேச நாட்டுப் படைகளும், அதன் புகலிடமான ஆஃப்கானிஸ்தானில், அதற்கு ஆதரவளித்துவந்த தாலிபான் இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து பெரும் தாக்குதலை நடத்தின.
ஆஃப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் ஒசாமாவும், தாலிபான் தலைவர் முல்லா உமரும் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் அதுவரை உலகம் காணாத மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்தது
அமெரிக்கா. ஆனால் அந்தத் தாக்குதலில் இருந்து ஒசாமாவும், முல்லா உமரும் தப்பி விட்டதாகக் கூறப்பட்டது!
இதன்பிறகு உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. பயங்கரவாதம் என்பது இன்னதென்று இதுவரை ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் சக்தி வாய்ந்த அமைப்பான பாதுகாப்புப் பேரவையோ வரையறை செய்யவில்லை என்றாலும், அரசு மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் எவ்வித தொடர்பும் அற்ற அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதல்களையே - அது தீவிரவாதிகள் செய்தாலும், அரசுகளின் பாதுகாப்புப் படைகள் செய்தாலும் - பயங்கரவாத நடவடிக்கையே என்று உலகம் ஏற்றுக்கொண்டது.
இந்த அடிப்படையில், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இரயில், இரயில்வே நிலையங்களில் நடத்தப்பட்டத் தாக்குதல்களில் பல நாற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.
லண்டன் நகரில் - இரயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பெருமளவிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடந்தது.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் கடுமையான பாதிப்பிற்குள்ளான நமது நாட்டின் தலைநகர் டெல்லியில், தீபாவளிக்கு முன்னர் பல சந்தைகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
மும்பை இரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 200 பேருக்கும் அதிகமாக உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கில் படுகாயமுற்றனர். கர்நாடகத் தலைநகர் பெங்களுருவில் குண்டுகள் வெடித்தது.
இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தது. உத்தரப்பிரதேசத்தில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. கடைசியாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்தன. இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் ஒவ்வொன்றிலும் பல பேர் கொல்லப்பட்டனர்.
இப்படி இடைவெளியின்றி, அப்பாவிப் பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சிறிய அளவிற்குக் கூட வெற்றி பெறவில்லை என்பது நிரூபணமானது.
ஈராக் மீதான போர்!
பயங்கரவாதத்திற்கும், பேரழிவு ஆயுதங்களின் கிடங்காகவும் ஈராக் உள்ளது என்று கூறி அமெரிக்காவும், நேச நாட்டுப் படைகளும் அந்நாட்டின் மீது படையெடுத்தன.
அந்நாட்டு அதிபர் சதாம் உசேனை பிடித்து, தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி (!) தூக்கிலும் போட்டன. ஆனால் பேரழிவு ஆயுதங்களும் கிட்டவில்லை. அங்கு அமெரிக்காவால் வெற்றி பெறவும் முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவு செய்து ஈராக் போரை நடத்திய அமெரிக்க, இன்று புதை சேற்றில் சிக்கிய யானையாக தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஈராக்கில் இதுவரை - அமெரிக்கா படையெடுத்த 2003ஆம் ஆண்டு மார்ச் முதல் - 11,24,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆபரேஷன் ரிசர்ச் பிரோ என்கின்ற ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. ஈராக்கை சதாம் பிடியில் இருந்தும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தும் விடுவிக்க நடத்தும் போர் என்று அமெரிக்கா பிரகடனம் செய்து மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இப்படித்தான் சென்றுக் கொண்டிருக்கிறது.
அதற்கும் பேரிழப்புதான். அமெரிக்க இராணுவ வீரர்கள் 4,155 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேச நாட்டுப் படையினர் 314 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பல நாட்டுப் படைகள் ஈராக்கிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசே ஒப்புக்கொண்டுள்ள காயமடையந்த இராணுவத்தினரின் கணக்கு 30,568. உண்மையில் இது ஒரு லட்சத்திற்கும் அதிகமிருக்கும் என்று மதிப்பிடப்படுவதாக இந்த ஆய்வு அமைப்பு கூறுகிறது.
ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 584. மற்ற நாட்டுப் படையினரின் எண்ணிக்கை 376. இவர்கள் மட்டுமின்றி அந்நாட்டை புனரமைக்கச் சென்று அல் கய்டா, தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் - நமது நாட்டு பொறியாளர்கள் உட்பட - மேலும் பல நூறுப் பேர்.
7 ஆண்டுக்காலமாக நடந்துவரும் இந்தப் போர் சாதித்தது இதுதான். இதனை எந்த விதத்தில் வெற்றி என்று கூற முடியும். பயங்கரவாதிகளை ஒடுக்கிவிட்டதாக எந்த விவரத்தின் அடிப்படையில் ஒப்புக்கொள்ள முடியும்? இந்தப் போர் தோல்வியடையக் காரணம் என்ன? நாளுக்கு நாள் உலக வாழ்வின் பாதுகாப்புத் தன்மை பயங்கரவாதத் தாக்குதல்களால் நிலைகுலைந்து வருவதை தடுப்பது எப்படி?