1998ஆம் ஆண்டு மே மாதம். புத்தர் மீண்டும் சிரித்தார்!
ஆம், இந்தியா இரண்டாவது முறையாக நடத்திய அணு குண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தது என்பதை நமது விஞ்ஞானிகள் இப்படித்தான் பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் கூறினார்கள்.
ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. மே மாதம் 14ஆம் தேதி புத்த பூர்ணிமா நாளன்றுதான் 1974ஆம் ஆண்டு இந்தியா முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளை தேர்ந்தெடுத்து முன்பு நடத்தியதைவிட சக்தி வாய்ந்த அணு (ஹைட்ரஜன்) குண்டை வெடித்து சோதனை செய்தது. அடுத்த நான்கு நாட்களில் மீண்டும் சில சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தது.
தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டாலும், இந்தியாவின் நோக்கம் அமைதியே என்பதை உலகத்திற்குக் கூறவே புத்த பூர்ணிமா நாளை தேர்ந்தெடுத்து அணு ஆயுத சோதனையை நமது விஞ்ஞான சமூகம் மேற்கொண்டது.
இந்தியர்கள் அனைவரும் பெருமை கொண்ட அந்த நிகழ்வு இந்தியாவை தனிமைப்படுத்தியது. அமெரிக்கா உள்ளிட்ட பல அணு ஆயுத தொழில் நுட்ப நாடுகள் இந்தியாவுடன் அணு சக்தி தொழில் நுட்பம் தொடர்பான எந்த உறவும் கொள்வதில்லை என்று அறிவித்தன.
நமது விஞ்ஞானிகள் கொடுத்த பதிலடி!
அதோடு நிற்கவில்லை அமெரிக்கா, நாம் நடத்தியது அணு குண்டு சோதனையே அல்ல என்றும், நடத்த முயற்சித்த சோதனை தோல்வியடைந்துவிட்டது என்றும் தனது செல்வாக்கிற்கு உட்பட ஊடகங்களைக் கொண்டு செய்தி (வதந்தி) பரப்பியது. அதற்கு சில ஊடகங்கள் சொன்ன காரணம்: மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நிகழ்த்தப்பட்டிருந்தால் அது உருவாக்கியிருக்கும் அதிர்வு பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலுள்ள நில நடுக்க ஆய்வு மையங்களில் பதிவாகியிருக்கும், அப்படி ஏதும் பதிவாகவில்லை, எனவே இந்தியா சோதனை நடத்தவில்லை என்பதோ அல்லது அது நடத்திய சோதனை உண்மையல்ல என்பதோதான் உண்மையாயிருக்க முடியும் என்று மிகவும் ஆய்வு (!) செய்து செய்திக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.
இந்திய மக்களின் மனதில் சந்தேகத்தை விதைக்கவேண்டும் என்பது நோக்கம். அதனை திட்டமிட்டு செய்தன. அதற்கு பலனும் இருந்தது.
மற்றொருபுறத்தில் இந்த சோதனை தேவைதானா? நமது நாடு இருக்கும் நிலையில் அணு சோதனை நடத்த என்ன அவசியம் ஏற்பட்டது? என்றெல்லாம் மார்க்ஸிஸ்ட்களும், சீன, அமெரிக்க விரும்பிகளும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.
அந்த வேளையில்தான் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு நமது அணு விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்தனர். இதழியலாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய அந்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
பிபிசி, சிஎன்என், ராய்டர், ஏபி போன்ற பன்னாட்டு செய்தி நிறுவனங்களுடன் நமது நாட்டின் அனைத்து ஊடகங்களின் செய்தியாளர்களும் குழுமியிருக்க, இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனை குறித்து ஆழமாக விளக்கினார் பிளாஸிட் ரோட்ரிக்ஸ்.
ரோட்ரிக்ஸின் சாமர்த்தியமான பதில்கள்!
தாங்கள் பெரிய விவரதாரிகள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை தனது அபார விளக்கங்களால் ஊதித் தள்ளினார் ரோட்ரிக்ஸ்.
இந்தியா செய்த அணு ஆயுத சோதனை எந்த வகையானது, எப்படிப்பட்டது என்பதை விளக்கும் ஒரு புத்தகத்தையே அச்சிட்டு அனைவருக்கும் வழங்கி, அணு ஆயுத தொழில்நுட்பத்தில் இந்தியா எங்கிருக்கிறது என்பதையும் மிக சாதுரியமாக எடுத்துச் சொல்லி விளக்கியிருந்தனர். அதுவே பல கேள்விகளுக்கு பதிலாகிவிட்ட நிலையில், அதற்கும் மேல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரோட்ரிக்ஸ் அளித்த பதில் சுவாராஸ்யமாக இருந்தது.
இந்த சோதனை நடத்தப்பட்ட போது அதன் அதிர்வு எங்கும் பதிவாகவில்லையே? என்பது கேள்வி. “நாங்கள் செய்தது பியூஷன் டிவைஸ் (ஹைட்ரஜன் அணுகுண்டை Fusion Device என்று கூறுவார்கள்) சோதனையே, நாங்கள் சப் கிலோ டன் (பொதுவாக அணு ஆயுதங்கள் மெகா (Mega ton) டன் சக்தியை வெளிப்படுத்தும் அளவிற்குத்தான் சோதிக்கப்படும்) சோதனைதான் செய்து உறுதி செய்துள்ளோம். இது பதிவாகாததற்கு காரணமாக இருக்கலாம்” என்று பதிலளித்தார்.
நீங்கள் நடத்திய அணு குண்டு சோதனை தோல்வி அடைந்துவிட்டது என்று கூறப்படுகிறதே என்பது மற்றொரு கேள்வி. “தோல்வியடைந்துவிட்ட சோதனைக்கு ஏன் பிறகு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? எதற்கு தொழில்நுட்பத் தடை அறிவிக்கப்படுகிறது? என்றெல்லாம் பதில் கூறி சிந்திக்க வைத்தார் ரோட்ரிக்ஸ்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த நான் இரண்டு கேள்விகளை வைத்தேன். 1. அணு குண்டு சோதனை நடத்திவிட்டீர்கள், இது நமது பாதுகாப்பிற்காகவே என்று கூறுகிறீர்கள். ஆனால் அணு ஆயுதமில்லாத காலத்தில் போர்கள் எல்லைகளில்தான் நடந்துகொண்டிருந்தன, அணு ஆயுதத்தால் அந்த பேராபத்து நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் அல்லவா உள்ளது? என்று கேட்டேன்.
போர் என்று வந்துவிட்டால் எதிரி நம் மீது குண்டு வீசுவான், அவன் எங்கு வேண்டுமானாலும் வீசலாம். ஆனால் பதிலடி கொடுக்க நம்மிடம் பலமான ஆயுதம் உள்ளது என்று தெரிந்திருந்தால் அவன் யோசிப்பான். நாம் ஒரு முறை தாக்கினால், நமது எதிரி இரண்டு முறை தாக்குவான், அதற்கான பலம் அவனிடம் உள்ளது என்று
அறிந்தால்? அப்பொழுது அவன் பலமுறை யோசிப்பான் அல்லவா? என்று கூறியவர் நமது ஆயுத பலமே நமது பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வல்லது என்று பதிலளித்தார்.
அணு உலைகளுக்கு கொண்டு செல்லப்படும் கடல் நீர் (வெப்பத்தைத் தணிக்க) பயன்படுத்தப்பட்டு மீண்டும் கடலிற்குள் திறந்துவிடப்படும்போது, அந்த நீர் கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்கிறது, குறிப்பாக மீன்கள் பாதிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறதே என்று கேட்டேன்.
இதற்கு பதிலளித்த ரோட்ரிக்ஸ், “நான் மீனை மிகவும் விரும்பிச் சாப்பிடுபவன். கல்பாக்கத்தில் பிடித்து விற்கப்படும் மீன்களைத்தான் அடிக்கடி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன். எனக்கு ஒன்றும் ஏற்படவில்லை. நீங்கள் வேண்டுமானால் கல்பாக்கம் வந்து என்னோடு சில நாட்கள் தங்கியிருந்து பாருங்கள். நாம் இருவரும் மீன் சாப்பிடுவோம், என்ன ஆகிறது என்றும் பார்ப்போம், என்றார்.
கேட்ட கேள்விக்கு அவர் இப்படி சாமர்த்தியமாக பதிலளிக்கிறார் என்று நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டேன். அதன் பிறகு இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த முனைவர் சிதம்பரம், கல்பாக்கத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும், எதிரும் புதிருமாக வந்தபோது ரோட்ரிக்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தேன். என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். நன்றாக நினைவில் உள்ளது. நீங்கள்தான் மறந்துவிட்டீர்கள் என்றார். புரியவில்லை என்றேன். கல்பாக்கத்திற்கு வருமாறு அழைத்தேன், வந்து தங்கி மீன் சாப்பிடுவோம் என்று கூறினேன், நீங்கள்தான் வரவில்லை, மறந்துவிட்டீர்கள் என்று அவர் கூறியபோது ஆச்சரியத்தால் பேச்சற்றுப் போனேன். ஆராய்ச்சியே தனது கடமை என்று மூழ்கியிருக்கும் ஒரு விஞ்ஞானி இப்படி ஒரு சாதாரண நிகழ்வைக் கூடவா நினைவில் வைத்திருப்பார்.
அதன் பிறகு அவரை என்னால் மறக்க முடியவில்லை. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் சர்ச்சைக்குறியதான நேரத்தில் பிரபல ஆங்கில நாளேட்டில் ஒரு விரிவான கட்டுரை எழுதிய ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் அணு உலைகளை (எதிர்காலத்தில்) இயக்குவதற்கு இந்தியாவில் பயிற்சி பெற்ற இளம் விஞ்ஞானிகள் அவர்களுக்குத் தேவைப்படுவார்கள் என்று எழுதியிருந்தார். இந்த இருதரப்பு ஒப்பந்தம் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று கூறியவர், எந்த விதத்திலும் இந்தியாவை அமெரிக்கா நிர்பந்திக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
கல்பாக்கத்தில் மாதிரி வேக ஈனுலை கட்டுமானப் பணி துவக்க விழா நடைபெற்றபோது அதில் ரோட்ரிக்ஸ் கலந்துகொண்டார். தன்னை பார்த்த பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஒரு மாபெரும் விஞ்ஞானியை மட்டுமல்ல, மிகச் சிறந்த பண்பாளரையும் இழந்துவிட்டது.