சேது சமுத்திரம்: வழக்கறிஞர் வாதமும் அரசியல் திசைதிருப்பலும்!
சனி, 26 ஜூலை 2008 (21:50 IST)
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்கவேண்டும் என்ற ‘உன்னத’ நோக்கோடு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் வழக்கறிஞர்கள் எடுத்த வைத்த வாதத்தை தங்களின் மத-அரசியலிற்காகவும், தேர்தல் வசதிக்காகவும் சில அரசியல் தலைவர்கள் மிக லாவகமாக முறுக்கி, திருத்தி அறிக்கை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயன்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் நடந்த விசாரணையின்போது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் கடற்பகுதியில் உள்ள
மணல் திட்டுக்கள் இராமர் கட்டிய பாலமே என்று அத்திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவர்களின் சார்பாக ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பராசரண், புராணங்கள் சிலவற்றிலிருந்து மேற்கோள்களைக் காட்டி வாதிட்டார்.
அவருடைய வாதங்களுக்கு பதிலளித்து மத்திய அரசின் சார்பாக ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமேன், வழக்கறிஞர் பராசரண் குறிப்பிட்டுக் காட்டிய புராண ஆதாரங்களில் இருந்தும், கம்ப இராமயணம் உள்ளிட்ட புராணத்தை அடிப்படையாக்க் கொண்ட காவியங்களில் இருந்தும் பல ஆதாரங்களை எடுத்துரைத்து எதிர்வாதமிட்டார்.
இராமர் வாழ்ந்து உண்மையே என்றும், அவர் கடலைக் கடந்து இலங்கை சென்று தனது மனைவியை மீட்க அமைத்த பாலமே இராமர் சேது என்றும் வழக்கறிஞர் பராசரண் வாதிட்டத்தை மறுத்து வாதிட்ட வழக்கறிஞர் நாரிமேன், புராணங்களின்படியே எடுத்துக்கொண்டாலும் தான் கட்டிய பாலத்தை தனது மனைவி சீதையை மீட்டுக் கொண்டுவந்தப் பிறகு இராமரே ஒரு வில்லைச் செலுத்தி அதனைத் தகர்த்துவிட்டார் என்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றம் தெரிவித்த ஆலோசனை!
இரண்டு நாட்கள் நடந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணையில்,
சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கடலை ஆழப்படுத்தும் பணி நடைபெறும் 6வது பாதையிலிருந்து (6th Alignment), அதற்கு மாற்றாக 4வது பாதையில் (4th Alignment) நிறைவேற்றுவது குறித்து யோசிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்ற அமர்வு ஆலோசனை வழங்கியது. நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து, அதே நேரத்தில் திட்டத்தையும் நிறைவேற்றிட இந்த ஆலோசனையை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் ஆலோசனையை பரிசீலித்து வரும் 29ஆம் தேதி அரசின் முடிவை அறிவிப்பதாக வழக்கறிஞர் நாரிமேன்
நீதிபதிகளுக்குத் தெரிவித்தார்.
இதுவே இவ்வழக்கைப் பொறுத்தவரை இன்றுள்ள நிலை.
இராமர் மீது அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்த மதவாதிகளும், அதே கொள்கையை கடைபிடித்து ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்று சிந்திக்கும் அரசியல் தலைவர்களும் நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை அளித்திருந்தால் அதில் தவறேதும் காணுவதற்கில்லை. ஏனென்றால் சேது சமுத்திரத் திட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படக்கூடாது என்பதுதான் இவர்களது கொள்கை என்பது இப்பிரச்சனை எழுப்பப்பட்ட நாள் முதல் தெரிந்த நிலைப்பாடுதான்.
ஆனால் இவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனை என்னவென்றால், “வழக்கறிஞர் நாரிமேனின் வாதத்தின் மூலம் இராமர் இருந்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதனை இராமரே பிறகு இடித்தார் என்று கூறியிருப்பதன் மூலம் இதுவரை அது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்று கூறிவந்த அரசு, அந்த நிலத்திட்டுக்கள் இராமர் பாலமே என்று ஏற்றுக்கொண்டுவிட்டது” என்று கூறி அறிக்கை வெளியிடுகிறார்கள்.
உண்மையை முழுமையாக மறைத்து முன்வைக்கப்பட்டுள்ள இந்த வாதம் எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பது வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த வாதத்தினை (முழு விவரத்தையும் வெளியிட்ட நாளிதழ்களிலிருந்து) படித்தவர்களுக்குத் தெரியும்.
அது இராமர் பாலம்தானா? என்ற கேள்விக்கு விடை கூற முற்பட்ட வழக்கறிஞர், தனது வாத்ததிற்கு ஆதாரமாக சில விவரங்களை எடுத்து வைக்கிறார். அதனை மறுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் அதே ஆதாரத்திலிருந்தும், மற்ற சில ஆதாரங்களில் இருந்தும் சில விவரங்கள் எடுத்துக் கூறி எதிர்வாதம் செய்கிறார். இந்த வாதத்தின் நோக்கமென்ன? நீங்கள் ஆதாரமாகக் கூறும் புராணங்களில் இருந்தே உங்கள் கூற்றிற்கு எதிரான விவரங்கள் (அதாவது இராமர் பாலம் இராமராலேயே தகர்க்கப்பட்டது என்பது) உள்ளது என்று சுட்டிக்காட்டுவதற்குத்தானே தவிர, அதற்காக அந்த ஆதாரங்களின் தகவல்களை ஏற்றுக்கொண்டதாக எந்தவிதத்திலும் அர்த்தம் கொள்ள முடியாது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களைப்பற்றி அறிந்த எவருக்கும் இது தெரியும், புரியும்.
ஆனால் இப்பிரச்சனையில் மத-அரசியல் குளிர்காய்பவர்கள், இராமர் என்றொருவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை என்று முதலில் கூறிய அரசு, வழக்கறிஞரின் வாத்தத்தின்மூலம் அவர் வாழ்ந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது என்று அறிக்கை விடுகின்றனர். மக்களின் சிந்தனைத் திறனை இந்தத் தலைவர்கள் அந்த அளவிற்கு ‘எடை போட்டு’ வைத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, அது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான், மனிதரால் கட்டப்பட்ட ஓன்று அல்ல என்று வாக்குமூலம் தாக்கல் செய்து பின்னர் திரும்பப்பெற்ற மத்திய அரசு, இப்பொழுது அது இராமர் கட்டியதே என்று ஒப்புக்கொண்டுவிட்டு, அவரே இடித்துவிட்டார் என்று பொய்யுரைக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்.
அரசு வழக்கிறிஞரின் வாதத்தில் இப்படிப்பட்ட உண்மை வெளியாகியிருப்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உணரவில்லையா? நாரிமேனின் வாதம் இவர்கள் கூறுவதுபோல அந்த உண்மையை தொடுகிறது என்று தெரிந்திருந்தால், “அப்படியானால் நீங்கள் (அரசு) இராமர் இருந்ததை ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். அது இராமர் கட்டியதே என்பதையும் சொல்லி விட்டீர்கள். இனி இந்த வழக்கில் வாதிப்பதற்கு ஒன்றுமில்லை” என்று கூறியிருப்பார்களே?
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு தெரியாத உண்மைகள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவிற்குத் தெரிகிறது. என்னே ஞான திருஷ்டி!
இரண்டு நாள் விசாரணையில், வழக்கறிஞர்கள் இருவரும் செய்த வாதங்களுக்கு இடையே குறுக்கிட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. இரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு பல கேள்விகளைக் கேட்டது.
இது ஒரு வழிப்பாட்டுத் தலம் என்கிறார் வழக்கறிஞர் பராசரண், அதற்கு நீதிபதி இரவீந்திரன் குறுக்கிட்டு 25 கி.மீ. நீளமுள்ள வழிபாட்டுத்தலம் வேறு எங்காவது உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமா? நாம் பூமியை வணங்குகிறோம்,
அதற்காக நிலத்தைத் தோண்டி எதையும் செய்யக்கூடாது என்று அர்த்தமா? இமயமலையை வணங்குகிறோம், எனவே அதனைத் தொடக்கூடாதா? கோவர்த்தன மலையை வணங்குகிறாம் என்பதற்காக அதன் மீது எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாதா? இராமர் பாலம் என்று நீங்கள் குறிப்பிடும் அந்த நிலத்திட்டிலிருந்து சில பிடி மண்ணை எடுத்து வேறொரு இடத்தில் போட்டால் அதனால் அதன் புனிதம் போய்விடுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு முன்னர் இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணிய சுவாமி வாதிட்டபோது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, இராமர் பாலம் என்பது வழபாட்டிற்குரியது என்கீறீர்களா, கடலில் முழ்கியுள்ள அதனை நடுக்கடலிற்கு சென்று யார் வணங்கியுள்ளார்கள்? என்று கேள்வி எழுப்பினார். பதில் சொல்ல முடியாத சுவாமி, தான் ஒவ்வொரு ஆண்டும் படகில் சென்று வழிபட்டு வந்ததாகக் கூறி மழுப்பினார்.
இப்படி ஏராளமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
அவைகளுக்கு பதில்கள்தான் இல்லை. நடந்ததும், உண்மையும் இவ்வாறிருக்க, “தனது வாதத்திற்கு வலு சேர்க்க இராமரை அழைக்கிறது அரசு” என்று கூறுகிறார் ஜெயலலிதா.
சேதுக் கால்வாய் திட்டத்தை அடியோடு புதைக்க வேண்டும் என்று கூறிவரும் இந்தத் தலைவர், அத்திட்டத்தை அனுமதித்து நாட்டில் மதக் கலவரம் ஏற்பட தான் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய மிரட்டல். சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் மதக் கலவரம் வெடிக்கும் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்!
“கோடானு கோடி மக்களின் வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரிய புராதனச் சின்னமான இராமர் பாலத்தை உடைப்பதென்பது, கோடானு கோடி இந்து மக்களின் இதயத்தைத் தகர்ப்பதற்கு ஒப்பான செயலாகிவிடும்” என்று ஜெயலலிதா கூறுகிறார்!
வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரிய அந்தப் புராதனச் சின்னத்தைப் பற்றி சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை துவக்கும்வரை ஜெயலலிதா அறியாமல் இருந்தது எப்படி? அத்திட்டத்தை 2004ஆம் ஆண்டுவரை ஆதரித்தது மட்டுமின்றி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்தது எதற்காக? கடந்த ஆண்டுவரை இத்திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்பதற்காக தான் எதிர்க்கத் துவங்கியதாகக் கூறிவந்த ஜெயலலிதா, இன்றைக்கு பா.ஜ.க.வை விட அதிகமாக உரத்த குரலில் எதிர்பாட்டுப் பாடுவது ஏன்?
காரணம் அரசியல். இது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் கோடானு கோடி மக்களுக்கும் புரிந்துதான் உள்ளது.
இந்த உண்மையை அறியாமல் அறிக்கை விடுவதுதான் அறியாமை. தலைவர்கள் கூறுவதெல்லாம் வேத வாக்கு என்று நினைத்து நமது நாட்டு மக்கள் ஏமாந்த காலமெல்லாம் கடந்துபோய் ஆண்டுகள் பலவாகிவிட்டன. அரசியல் தலைவர்கள் அதனைப் புரிந்துகொண்டால், அவர்களின் அரசியலிற்கு எதிர்காலம் இருக்கும்.