அணு சக்தி பேரத்திலிருந்து ஆட்சியைக் காப்பாற்றும் பேரம் வரை!
திங்கள், 21 ஜூலை 2008 (21:30 IST)
இந்திய ஜனநாயகம் இதுவரை எதிர்கொள்ளாத அளவிற்கு நாடு தழுவிய சர்ச்சையை எழுப்பிய இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, தனது அரசிற்கு நான்காண்டுக் காலமாக வெளியில் இருந்து ஆதரவளித்த இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையுன் மீறி, நடைமுறைப்படுத்த முற்பட்டதால் மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்த மன்மோகன் அரசு, ஆட்சியைக் காப்பாற்ற படாத பாடுபட்டு வருகிறது.
ஆட்சிக்கு அளித்தவந்த ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று இடதுசாரிகள்
கெடு விதித்த அடுத்த கனமே அதுவரை அரசை எதிர்த்துவந்த மூன்றாவது அணியின் முக்கிய அங்கமாக இருந்தகொண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துவந்த சமாஜ்வாடிக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்துகொண்டது.
உத்தரப்பிரதேச அரசியலில், முதலமைச்சர் மாயாவதிக்கு தொல்லை கொடுக்க மத்திய அரசை நாட, இடதுசாரிகளின் கெடுவால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட, காங்கிரஸூம், சமாஜ்வாடியும் நண்பர்களானார்கள். ‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என்று அரசியல்வாதிகள் வரித்துக்கொண்ட அற்புத கொள்கையின் அடிப்படையில், தேச நலனைக் காப்பாற்ற ‘ஒருவருக்கு மற்றவர் ஒத்தாசையாக இருப்பது’ என்று ஒன்றிணைந்தனர்.
அரசியல் ஆலோசகரான தேச ஆலோசகர்!
இந்த நலன் போற்றும் நட்பின் காரணமாக இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தை சமாளிக்கும் திறனைப் பெற்றது காங்கிரஸ் கட்சி.
ஆட்சிகளைக் கவிழ்ப்பதிலும், தனது ஆட்சியாக இருக்கும் பட்சத்தில் அதனை ‘எப்பாடுபட்டாவது’ காப்பாற்றிக் கொள்வதிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஈடான ஒரு கட்சி இந்தியாவில் இல்லை.
webdunia photo
FILE
அதனால்தான், சமாஜ்வாடிக் கட்சியை தனக்கு ஆதரவாகக் கொண்டுவருவதைக் கூட வெறும் அரசியலாகக் காட்டாமல் மிகச் சாமர்த்தியமாக காய் நகர்த்தியது காங்கிரஸ். அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்துவந்த சமாஜ்வாடிக் கட்சி, ஏதோ பேரத்தின் வாயிலாக தங்கள் பக்கம் வந்ததாக தெரிவிடக்கூடாது என்பதற்காக, தேச பாதுகாப்பு ஆலோசகரை அவர்களிடம் அனுப்பி அணு சக்தி ஒப்பந்தத்தின் ‘நன்மைகளை’ விளக்கி, அதன்மூலம் அது தேச நலனிற்காகவே என்பதை உணரவைத்து ஆதரவைப் பெற்றது காங்கிரஸ்!
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக நமது நாட்டின் மூத்த அணு சக்தி விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பியபோது அவர்களுக்கு விளக்க தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அனுப்பி வைத்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காதே?
சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவு உறுதியானதும், ஆளும் கூட்டணியில் இருந்தும் பதவி தரப்படாத்தால் பிணக்கில் இருந்த ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சாவை சரிகட்டும் பேரத்தில் இறங்கியது காங்கிரஸ். 5 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சிக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் (அதில் ஒன்று காபினெட்), அக்கட்சியின் தலைவர் சிபு சோரனின் மகன் ஜார்க்கண்ட் மாநில துணை முதலமைச்சர் பதவி! இதனை செய்தியாளர்கள் கூட்டத்திலேயே சிபு சோரன் அறிவிக்கிறார். எல்லாம் தேச நலனைக் கருதிதான்!
மாயா(வதி) ஜாலம்!
அப்பாடா... ஆட்சியைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கை பெற்ற காங்கிரஸ் தலைமை, அடுத்த கட்டமாக அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியுடனும், தேவே கவுடாவின் மதச் சார்ப்பற்ற ஜனதா தளத்துடனும் பேரம் பேசத் துவங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் ஈடுபட்டார். தேச நலனைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?
PTI Photo
PTI
இவர்களுடன் நடத்த பேரம் படியவில்லை. காரணம் மாயாவதி. தனக்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகத்தை ஏவிவிட்டு நெருக்குதல் கொடுக்கத் துவங்கிய மத்திய அரசிற்கு தன்னாலும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று நிரூபிக்க களமிறங்கிய மாயாவதி அஜீத் சிங்கையும், தேவே கவுடாவையும் தன்பக்கம் இழுத்து மூன்றாவது அணி செத்துவிடவில்லை என்று தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து சிறிய கட்சிகளை தன்பக்கம் இழுக்கும் தேசப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆதரவு கொடு அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொள் என்ற அடிப்படையில் நடந்த பேரத்தில் மேலும் சில உதிரி கட்சிகளை வயப்படுத்தியுள்ளது காங்கிரஸ். மக்களவையில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீரின் தேச மாநாட்டுக்(National Conference) கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அமர்நாத் கோயிலிற்குச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்ல அக்கோயிலின் நிர்வாகத்திற்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்த்தைக் கண்டித்து, மதவாத நிலையெடுத்து தனது தொண்டர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி, காங்கிரஸ் தலைமையிலானஆட்சியைக் கவிழக் காரணமான
webdunia photo
FILE
தேச மாநாட்டுக் கட்சி, மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படமாட்டோம் என்று கூறி, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவை எடுத்து மன்மோகன் அரசை காப்பாற்ற முன்வந்துள்ளது.
பாஜ.க., சிவ் சேனா கட்சிகளிலுள்ள உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எவ்வளவு வாக்குகள் தங்களுக்கு ஆதரவாக (276) கிடைக்கும் என்பதையும் நாடாளுமன்றத்திலேயே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்!
அதற்கு ஒரே ஒரு நெருடல், சமாஜ்வாடி கட்சிதான். அதன் எத்தனை உறுப்பினர்கள் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதில்தான் காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றில் புளிகரைத்துக் கொண்டிருக்கிறது. 39 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடியின் பலம், சற்றுமுன் வந்த செய்தியின்படி 33 ஆக குறைந்துள்ளது. இது மேலும் எவ்வளவு குறையும் என்பது மாயாவதியின் ‘கைத்திறனில்’ உள்ளது.
ஆயினும் இதையெல்லாம் காங்கிரஸ் சமாளித்துவிடும் என்பது அக்கட்சியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
காங்கிரஸ் நலனே தேச நலன்!
அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி அது கலைக்காத மாநில அரசுகள் இல்லாத மாநிலமே இல்லை என்று கூறுமளவிற்கு கவிழ்த்துத் தள்ளியக் கட்சி
காங்கிரஸ். மத்தியிலும் அது ஆடிய திருவிளையாடல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வட மாநிலங்களில் துடைத்தெறிந்து வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் சிறப்பான ஆட்சியைத் தந்த ஜனதா ஆட்சியை (கட்சியையும்தான்) சரண் சிங்கிற்கு ஆசை காட்டி உடைத்து ஆட்சியைக் கவிழ்த்து, பிறகு சரண்சிங்கை பிரதமராக ஆதரவு தந்து அவர் நாடாளுமன்றத்தை சந்திப்பதற்கு முன்னரே ஆதரவை விலக்கி அவமானப்படுத்தி பதவிறக்கி, தனது அரசியல் வித்தகத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், 1990இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் வி.பி. சிங் தலைமையில் அமைந்த ஆட்சியை, சந்திரசேகரைத் தூண்டிவிட்டுக் கவிழ்த்து, பிறகு அவரைப் பிரதமராக்கி 3 மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்து தேர்தலுக்கு கொண்டு சென்றது.
1996இல் தேவே கவுடா ஆட்சி, அடுத்த 6 மாதத்தில் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஆட்சி என அடுத்தடுத்துக் கவிழ்த்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது.
1992இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இதேபோல நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது இதே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டது.
நரசிம்மராவ்
webdunia photo
FILE
அரசில் நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங், எனவே அப்போது கடைபிடிக்கப்பட்ட சித்துவேலைகள் அனைத்தையும் அறிந்தவர். எனவே இவரும் தனது அரசை தக்கவைத்துக் கொள்வதில் தோற்றுவிட மாட்டார் என்று நிச்சயம் நம்பலாம்.
ஏனென்றால் காங்கிரஸ் நலனே தேச நலன். தங்களது ஆட்சி தொடர்வதே தேசத்திற்கு நல்லது என்று மக்களை நம்பவைக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டுவரும் காங்கிரஸ் கட்சி எதைச் செய்தாலும் அது தேச நலனே என்று நாமும் நம்புவோமாக!