ஹெட்ஜ் ஃபண்ட் என்பது முறைபடுத்தப்படாத, தனியார் நிதித் தொகுப்பாகும். அங்கீகரிக்கப்பட்ட பெரும் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், தனியார் வங்கிகள், ஓய்வூதிய நிதிகள் ஆகியவற்றின் நிதிகளைக் கொண்டு உருவாகும் நிதித் தொகுப்பைக் கொண்டதாகும்.
சாதாரண மக்களின் முதலீடுகளைத் திரட்டி, பங்குச் சந்தையிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளைப் போன்றதே இதுவும், ஆனால் பெரும் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டு பெரிய அளவில் வரவை எதிர்பார்த்து பங்குகளிலும், பண்டகச் சந்தைகளிலும், நிதி மற்றும் நாணயச் சந்தைகளிலும் முதலீடு செய்யப்படும் நிதியே ஹெட்ஜ் ஃபண்ட் என்றழைக்கப்படுகிறது.
முன்பேர வர்த்தகத்திலும், பங்குகளிலும் குறைந்த கால முதலீட்டில் போடப்பட்டு ஏற்ற இறக்கத்திற்கேற்ப விற்று இலாபம் பார்க்கும் இந்த நிதியை முறைப்படுத்தப்படாத நிதி என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இந்நிதி கையாளும் முதலீடுகள் - குறிப்பாக பங்குச் சந்தையில் சரிந்துக்கொண்டிருக்கும் விலைகொண்ட பங்குளில் முதலீடு செய்யப்படுவதால் - பெருத்த நட்டத்தையும் ஏற்படத்தக்கூடியவை.
பண்டக சந்தைகளில் முன்பேர வர்த்தக ஒப்பந்தங்களை வாங்குவதிலும், அன்றாட ஊக வணிகத்திலும் இந்நிதி முதலீடு செய்யப்படுவதுண்டு. கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகத்தில் இப்படிப்பட்ட நிதிகள் மிக அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டதே அதன் தொடர் விலையேற்றத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.