சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத்திட்டுகள் இராமர் பாலம்தானா என்பதை தொல்லியல் துறையின் ஆய்விற்கு உட்படுத்தி, அதனை ஆய்வு செய்யும் சாத்தியம் உள்ளதா என்று பரிசீலிக்கும்படி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள அந்த நிலத்திட்டுகள் இயற்கையாய் அமைந்தவையா அல்லது இராமர் பாலமா என்பதை புவியியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து ஓராண்டிற்கு முன்னர் (2007 மே 11ஆம் தேதி) வெப்உலகம்.காம்-ல் வெளியிட்ட கட்டுரை கீழே தந்துள்ளோம்.
- ஆசிரியர்
தமிழகத்தையும், இலங்கையையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்றும், எனவே சேது சமுத்திர நீர் வழித் திட்டத்திற்காகக் கடலை ஆழப்படுத்தும் போது அதற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் கூறி ஒரு புதிய பிரச்சனையை பா.ஜ.க. உள்ளிட்ட மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும், இயக்கங்களும் உருவாக்கி வருகின்றன!
webdunia photo
FILE
கடலில் மூழ்கியுள்ள அந்த நிலத் திட்டுக்களின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல் இதுதான் ராமர் கட்டிய பாலம் என்று மதவாத இயக்கங்கள் கூறி வருகின்றன. புராணத்தைத் தவிர, வேறு எந்தவிதமான ஆதாரமும் இன்றி பிரச்சனையை உருவாக்கிய இந்த இயக்கங்கள், தற்பொழுது நாடாளுமன்றத்திலும் அதனை "முக்கிய" பிரச்சனையாக்கியுள்ளன.
பா.ஜ.க., சிவ சேனா, சங்கராச்சாரிகள் ஆகியோர் எழுப்பியுள்ள இப்பிரச்சனையை நோக்குவதற்கு முன்பு, தமிழகத்தையும், இலங்கைத் தீவையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள அந்த நிலத் திட்டு மனிதரால் உருவாக்கப்பட்ட பாலம்தானா என்பதை ஆராய வேண்டும்.
புவியியல், பூகோளவியல் ஆகியவற்றை படித்த மாணவர்களுக்கு இப்படி பெரும் நிலப் பகுதிகளை இணைத்திடும் நிலத் திட்டுக்கள் குறித்து படித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, தென் அமெரிக்க கண்டத்தையும், வட அமெரிக்க கண்டத்தையும் மெல்லியதாய் இணைக்கும் நிலப்பகுதியே இன்றைக்கு பணாமா நாடு என்று குறிக்கப்பட்டிருப்பதை உலக வரைபடங்களில் பார்க்கலாம். இந்த பணாமா நாட்டிற்கு இடையேதான் பணாமா கால்வாய் (நீர் வழி) வெட்டப்பட்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலிற்குச் செல்லும் கப்பல்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
webdunia photo
FILE
பணாமா கால்வாய் மட்டும் இல்லாமல் போனால், பசுபிக் கரையோரப் பகுதியில் உள்ள அமெரிக்க துறைமுகங்களில் இருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதியில், அதாவது அட்லாண்டிக் கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டிய கப்பல்கள் தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக்கொண்டுதான் சென்றிருக்க வேண்டும். அதாவது, பல்லாயிரம் மைல்கள் கூடுதலாக பயணம் செய்திருக்க வேண்டும். அதனைத் தவிர்க்கத்தான் பணாமா நீர் வழி வெட்டப்பட்டு கப்பல்களின் பயண தூரமும், நேரமும் சுறுக்கப்பட்டது.
இப்படி இரண்டு பெரிய கண்டங்களை அல்லது நிலப்பகுதிகளை இணைக்கும் மெல்லியதான நிலப்பகுதியைத்தான் புவியியலிலும், பூகோளவியலிலும் இஸ்மஸ் (Isthmus) என்று அழைப்பார்கள். இப்படி இஸ்மஸ் என்றழைக்கப்படும் பெரும் நிலப்பகுதிகளை இணைக்கும் மெல்லிய நிலப்பகுதிகள் உலகில் ஏராளம் உள்ளன. அவைகள், கடலில் மூழ்கியோ அல்லது சற்று மேலே நிலத் திட்டுக்களாகவோ அல்லது ஒன்றிணைந்து கோர்வையாக தீவுகளாகவோ உள்ளன.
webdunia photo
FILE
பணாமா போலவே, ஓரளவிற்கு படித்தவர்கள் அறிந்த மற்றொரு நீர் வழி சூயஸ் கால்வாய் ஆகும். மத்தியத் தரைக்கடலையும், செங்கடலையும் இந்த நீர் வழி இணைக்கிறது. இந்தக் கால்வாய் ஐரோப்பிய கண்டத்தையும், ஆப்ரிக்க கண்டத்தையும் மெல்லிய நிலப்பகுதியாய் இணைக்கும் நிலத்திட்டில் வெட்டப்பட்டே உருவாக்கப்பட்டதாகும்.
நியூ ஸீலாந்தின் வட பகுதியில் உள்ள ஆக்லாண்டு தீவின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியில் உள்ள கிரேட்டர் ஆக்லாண்டுடன் இணைக்கும் பகுதியும் ஒரு சின்ன நிலத்திட்டுப் பகுதிதான். அது கடலில் மூழ்கியுள்ளது.
கனடா நாட்டில் நியூ ஃபவுண்ட் லாண்ட் என்றழைக்கப்படும் தீவுப் பகுதியை கனடா நாட்டுடன் இணைப்பதும் இப்படிப்பட்ட நிலத் திட்டுதான். ஃபால்க்லாண்டை போரை யாரும் மறந்திருக்க முடியாது. அர்ஜெண்டினாவின் கடல் பகுதியில் உள்ள அந்தத் தீவின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியில் உள்ள தீவு இப்படிப்பட்ட நிலத் திட்டுகளால்தான் இணைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் டாஸ்மானியா பகுதியை ஒட்டியுள்ள புரூனி தீவுகள் ஒரு சிறு நிலத் திட்டுப் பகுதியால் டாஸ்மீனியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுதான் டீ‘எண்ட்ரி கேஸ்ட்டியக்ஸ் சேனல் என்றழைக்கப்படும் நீர் வழி உள்ளது.
இப்படிப்பட்ட பெரும் நிலப்பகுதிகளுடன் சிறு நிலப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிலத்திட்டுக்கள் உலகில் ஏராளம் உள்ளன. அப்படித்தான் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டு உள்ளது. இது பாலம் அல்ல. அப்படியென்றால், இப்படிப்பட்ட நிலத்திட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டது?
புவியியல், பூகோளவியல் படித்த மாணவர்களுக்கு இந்த உலகம் கடந்து வந்த பரிணாம வளர்ச்சி குறித்தும் படித்திருப்பார்கள். ஒரு நேரத்தில் (முன்னொரு காலத்தில் என்பதுபோல) அதாவது, பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இன்று தனித்தனி கண்டங்களாகப் பிரிந்துள்ள நமது புவியின் நிலப்பகுதி ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக இருந்தது. அதனை பாங்கியா என்று புவியியலாளர்கள் அழைக்கின்றனர்.
புவியின் மையப் பகுதியில் இறுகாமல் அதிக வெப்ப நிலையில் உள்ள நெருப்புக் குழம்பாய் உள்ள மையப் பகுதி இறுக ஆரம்பித்ததால் அதன் மேற்பகுதி சுருங்க ஆரம்பித்ததன் காரணமாக ஒன்றாய் இருந்த அந்த நிலப்பகுதி பலவாய் பிளந்து நகர ஆரம்பித்தன. இதனைத்தான் கண்டங்களின் விலகல் (காண்டினெண்டல் டிரிஃப்ட்) என்று கூறினார்கள். வேகனர்ஸ் காண்டினெண்டல் டிரிஃப்ட் தியரி என்பது நிலவியல் பாடத்திற்கும், நிலவியல் மாற்றங்களுக்கு அடிப்படையான நிலநடுக்கம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும்.
நிலநடுக்கம் என்பதே, பெரும் கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் தாங்கி நிற்கும் புவிப் பரப்பின் பெரும் பாறைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும், ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதனாலும் ஏற்படும் நிகழ்வுகளே.
இவ்வாறு ஒன்றாய் இருந்த அந்த நிலப்பகுதி, பெரும் நிலப்பகுதிகளாக (கண்டங்கள்) தனித்தனியாக பிரிந்து விலகியபோது, விலகிய அப்பகுதிகளுக்கு இடையே இருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகளின் முனைகள்தான் இப்படி இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே தெரியும் நிலத்திட்டுக்களாகும்.
அதுபோலவே, இப்படிப்பட்ட புவியியல் மாற்றங்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு (2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் சுமத்ரா அடுத்த கடற்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உருவான சுனாமி போன்று) சில நிலப்பகுதிகள் கடலால் அரிக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவதும் உண்டு. அப்படிப்பட்ட பெரும் கடற்பேரழிவுகள் நமது தமிழ்நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை புவியியலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறியுள்ளனர். அது பாடங்களாகவும் உள்ளது.
இன்றைய தமிழ்நாடும், இலங்கைத் தீவும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்த நிலப்பகுதிகளே. மிகப் பெரிய பூகம்பமும், கடல்கோளும் ஏற்பட்டு அதனால் பிரிந்த பகுதியே இன்றைய இலங்கைப் பகுதியாகும் என்பது புவியியலாளர்கள் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
webdunia photo
FILE
அவ்வாறு கடல்கோளால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பின் சில பகுதிகளே தமிழக, இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் தீவுகளாகவும், நிலத் திட்டுக்களாகவும் உள்ளன. இப்படி இயற்கைச் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போன நிலப்பகுதியை ராமர் பாலம் என்று கூறுவது உண்மை கலப்பற்ற பிதற்றலாகும்.
நாசா இந்த நிலப்பகுதியை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிடும் வரை, இதே மதவாதிகள் என்ன கூறிக்கொண்டிருந்தார்கள் என்பது ராமேஸ்வரம் சென்று வந்தவர்களுக்குத் தெரியும். அங்குள்ள ஒரு கோயிலில் ஒரு தொட்டியில் பவழப்பாறை என்றழைக்கப்படும் மிதக்கும் கல்லை காட்டி, இப்படிப்பட்ட கற்களைக் கொண்டுதான் ராமர் படை மிதக்கும் பாலம் கட்டி கடலைக் கடந்து இலங்கை சென்று ராவணன் படையுடன் போரிட்டது என்று அங்குள்ள பூசாரி கூறுவார்.
ஆக, சில மாதங்களுக்கு முன்பு வரை ராமர் பாலம் தொடர்பான கதை இப்படித்தான் இருந்தது. நாசா செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிட்டவுடன் இந்த மதவாதிகள் புதிய பாலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இப்புவியின் தோற்றம் முதல் அதன் பரிணாம வளர்ச்சி வரை ஒவ்வொரு கட்டத்தையும் ஆய்ந்து அதற்கான ஆதாரங்களைக் கண்டு ஒவ்வொரு உண்மையாக விஞ்ஞான உலகம் நமக்கு மெய்ப்பித்துத் தருகிறது. தனது முடிவிற்கான ஆதாரத்தையும் மக்கள் முன் வைக்கிறது விஞ்ஞானம்.
விஞ்ஞானம் கண்டு புலப்படுத்திய ஒரு இயற்கை உண்மையை தனது இதிகாச, புராண கதைக்கு ஆதாரமாக்கி மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தையே பாழடிக்க முயற்சிக்கிறது மதவாதம்.
தமிழர்களுக்கு கடவுள் பக்தியும் உண்டு. சிந்தித்து ஆராயும் புத்தியும் உண்டு. ஆதாரமற்ற கட்டுக்கதைகளை நம்பி அவர்கள் தங்களை இழந்துவிடுவார்கள் என்று மதவாதிகள் நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது நாட்டின் கடல் வழிப் போக்குவரத்திற்கும் ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படும் உன்னதத் திட்டமாகும். இத்திட்டத்தை, உள்நோக்கத்துடன் மதச்சாயம் பூசி கெடுக்க முனையும் சக்திகளை மக்கள் இனம் கண்டு புறந்தள்ள வேண்டும்.