செர்பியாவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடாக கொசோவோ பிரகடனம் வெளியிட்டதற்கு சிறலங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, எதிர்காலத்தைப் பொறுத்த அதன் அச்சத்தையும், அப்படி ஒரு நிலை தனது நாட்டில் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவருவதையும் சொல்லாமல் சொல்லுவதாக உள்ளது.
webdunia photo
FILE
“கொசோவோ தன்னிச்சையாக சுதந்திர பிரகடனம் செய்திருப்பது சர்வதேச உறவுகளிலும், நாடுகளின் இறையாண்மை அடிப்படையிலான உலகளாவிய உறவுகளிலும் மாற்றவியலாத ஒரு முன்னுதாரனத்தை ஏற்படுத்திவிட்டது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் ஆபத்து உள்ளது” என்று சிறிலங்க அரசின் அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
“கொசோவோ சுதந்திர பிரகடனம் செர்பிய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறாதது மட்டுமின்றி, உறுப்பு நாடுகளின் இறைமையையும், ஒற்றுமையையும் உறுதி செய்யும் ஐ.நா. பிரகடனத்தை மீறியதாகும்” என்றும் சிறிலங்க அரசு கூறியுள்ளது.
கொசோவோ பிரச்சனைக்குத் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்ற ஐ.நா.வின் தீர்மானத்தையும் (1244/1999) சிறிலங்க அரசு தனது நிலைப்பாட்டிற்கு சாதகமானதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கொசோவோ சுதந்திர பிரகடனத்திற்காக சிறிலங்க அரசு இவ்வளவு கவலைப்பட்டு, இத்தனை ‘தெளிவான’ அறிக்கையளிக்கக் காரணம் என்ன? என்ற ஒரு கேள்விக்கு விடை காண முற்பட்டால், அதில் அதன் ‘நலம்’ எந்த அளவிற்கு உள்ளது என்பது விளங்கிவிடும்.
யூகோஸ்லாவியா என்ற பெயரில் ஒரு நாடாக (கம்யூனிய ஆட்சியின் கீழ்) இருந்த காலத்தில் இருந்து இன்றைய செர்பிய நாட்டின் ஒரு அங்கமாக இருந்த காலம் வரை கொசோவோ என்ற அந்நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்துவரும் அல்பானிய இன மக்கள், சற்றேறக்குறைய கால் நூற்றாண்டு காலத்திற்கு எப்படிப்பட்ட இன ஒடுக்கலுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் அனைவரும், அம்மக்கள் தாங்கள் வாழும் பகுதியை தனி நாடாக பிரகடணம் செய்ததில் உள்ள நியாயத்தை உணர்வார்கள்.
இன ரீதியாக பெரும்பான்மை செர்பிய அரசால் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்ட அல்பேனிய இன மக்கள், யூகோஸ்லாவியாவிற்கு எதிராகவும், பிறகு செர்பியாவிற்கு எதிராகவும் தங்கள் உரிமைகளைப் பெற அமைதி வழியில் போராட முற்பட்டபோது கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.
தங்களுடைய உரிமைகளைப் பெற அமைதி வழியில் போராடிய கொசோவோ மக்கள் மீது மிக அதிகபட்ச ஒடுக்குமுறையை செர்பிய அரசு பிரயோகித்துள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு பேரவை தீர்மானம் போட்டு கண்டித்தது. அந்த தீர்மானம் எண்:1160 (1998, மார்ச் 31). இந்த தீர்மானத்தை வசதியாக மறைத்துவிட்டு ஒரு தீர்மானத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறது சிறிலங்க அரசு.
தனது நாட்டு மக்கள் மீது அந்நாட்டு அரசு இன ஒடுக்கலை கட்டவிழ்த்துவிட்டதை கண்டித்த அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், 1998 இல் ஒரு கூட்டுப்படையை கொசோவோ பகுதிக்கு அனுப்பி, செர்பிய படைகளை விரட்டி அடித்தன. அதன் பிறகு அங்கு ஐ.நா. அதிகாரத்திற்குட்பட்ட இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டு, முக்கால் சுதந்திரத்துடன் தனியரசாக இயங்கிவந்த கொசோவோ, கடந்த ஞாயிற்றுக் கிழமை செர்பியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக இயங்குவது என்கின்ற தீர்மானத்தை தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, சுதந்திர பிரகடனம் செய்தது.
இந்த சுதந்திரப் பிரகடனத்தை அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பெரும்பான்மை நாடுகளும் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்துள்ளன.
இந்த நிலையில்தான் சிறிலங்க அரசு - ஏதோ இதன் நிலைப்பாட்டை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததைப் போல - கொசோவோ பிரகடனத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முதல் பத்தியில்,”செர்பிய நாட்டு பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறாமல் செய்யப்பட்ட பிரகடனம்” என்று கூறியுள்ளது. பெரும்பான்மை செர்பிய மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு அரசால் இன ஒடுக்கலுக்கு ஆளான சிறுபான்மை இன மக்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு - தங்களுடைய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி - சுதந்திரப் பிரகடனம் செய்துள்ள நிலையில், அவர்கள் பெரும்பான்மையினரின் “ஒப்புதலைப் பெறவில்லை” என்று கூறுவது எவ்வளவு நகைப்பிற்கிடமானது? தங்களை ஒடுக்கும் பெரும்பான்மை மக்களின், அரசின், ஒப்புதலைப் பெற்று பிரகடனம் செய்வதற்குப் பேர்தான் சுதந்திரமோ? இப்படி உலக சரித்திரத்தில் எங்காவது நடந்ததுண்டோ?
சிறலங்க அரசு கூறியுள்ள இரண்டாவது காரணத்தைப் பாருங்கள். “ஐ.நா. உறுப்பு நாடுகளின் இறைமையையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் அதன் விதிமுறைகளுக்கு இப்பிரகடனம் எதிரானது” என்கிறது.
உறுப்பு நாடுகளின் இறைமையும், அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பூகோளப் பகுதியின் ஒற்றுமையும் எதற்காக? சொந்த நாட்டு மக்களையே ராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவதற்காகவா? ஒரு நாட்டின் பெரும்பான்மை இன ஆதரவை அரசியல் ஆதிக்கத்திற்கான கருவியாக்கி, தொன்றுதொட்டு தாங்கள் வாழ்ந்துவரும் நிலப்பகுதியிலேயே அவர்களை கொன்று குவிப்பதற்காகவா? அப்படித்தான் என்று சிறிலங்க அரசு நினைக்கிறது போலும்!
தமிழர்களை இன ரீதியாக இன்றுவரை ஒடுக்கிவரும், அவர்களுடைய பாரம்பரிய நிலப்பரப்பை அங்கீகரிக்க மறுத்து, அவர்களை ராணுவத்தை ஏவி விரட்டி, சொந்த மண்ணிலும், நாட்டைவிட்டு விரட்டி உலக நாடுகளிலும் அகதிகளாக திறியவிட்டுள்ள சிறிலங்க அரசிற்கு சுதந்திரத்தைப் பற்றி இந்த அளவிற்குத்தான் புரிந்திருக்கும்.
சுதந்திரம் என்பது மானுடனின் பிறவிச் சொத்து. அதை நிர்ணயிக்கவோ அல்லது வரையறை செய்து பிடிங்கிக்கொள்ளவோ எந்த அரசிற்கும் அதிகாரம் கிடையாது. தனது சுதந்திரத்தையும், சுதந்திரமான கூட்டுச் சமூக வாழ்வையும் உறுதிப்படுத்திக் கொள்ளவே அரசமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அடிப்படை உரிமைகளை கட்டிக் காத்துக் கொள்ள அந்தந்த நாட்டு மக்களும் தங்களுக்கு அளித்துக் கொண்ட உரிமைதான் இறைமை என்பதும், தாங்கள் வாழும் நிலப்பரப்பின் ஒற்றுமை என்பதும். இதனை எந்த நாடும் மற்றொரு நாட்டிற்கு தருவது அல்ல.
அடிப்படை மானுட உரிமை எங்கு மறுக்கப்படுகிறதோ அங்கு நிச்சயம் விடுதலைப் போராட்டம் வெடிக்கும். அப்படித்தான் இந்தியாவிலும் வெள்ளையனுக்கு எதிராக வெடித்தது. இன்னும் ஏராளமான நாடுகளில் வெடித்தது.
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னும், புரட்சிக்குப் பின்னும் அமைந்த அரசுகளால் அந்த உரிமை மறுக்கப்படும் போதும், பறிக்கப்படும் போதும், தங்கள் அரசாலேயே ஒடுக்கலுக்கு உட்படுத்தப்படும் போதும் மீண்டும் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். இதனை தவிர்க்க இயலாது. இதுதான் இலங்கையிலும் ஏற்பட்டது.
இதனைப் புரிந்துதான் உலக சமூகம் சுதந்திரத்தை நிபந்தனையற்ற அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. சுதந்திரமின்றி சகோதரத்துவம் ஏது? சுதந்திரமின்றி வாழ்கை ஏது? வாழ்வுரிமை ஏது? கருத்துரிமை ஏது?
சுதந்திரம் மனிதனின் பிறவிச் சொத்து. அதனை உறுதி செய்யாத எந்த ஒரு நாடும் - அது தன்னை எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும் - உண்மையான நாடாக இருக்காது, இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.