நமது நாட்டு விவசாயிகளை கடுமையாக அழுத்திவரும் அதிகமான கடன் சுமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க ஒரு (சிறப்புத்) திட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இந்திய தொழில் - வர்த்தக அமைப்புகள் கூட்டமைப்பின் (FICCI) ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “விவசாயிகளின் கடன் தேவைகள் குறித்து கவனித்து வருகிறோம். 80 விழுக்காடு அளவிற்கு இத்துறையினர் (விவசாயிகள்) நமது முறை சார்ந்த நிதி (வங்கிகள்) அமைப்பிற்கு வெளியே இருப்பதும், அவர்கள் அளவிற்கு அதிகமான கடன் சுமையில் உழல்வதும் தொடரக் கூடாது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சிக்கிறோம். அது விரைவில் நடந்துவிடும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது என்றும், அது நமது பொருளாதாரத்திற்கும், அரசியலிற்கும் உகந்ததாகாது என்றும் கூறியுள்ள பிரதமர், விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டில் மிகப் பெரிய ஏற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பிரதமரின் பேச்சு, அதிலும் குறிப்பாக இன்னும் இரண்டு வாரத்தில் 2008-09 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு கொண்டு வரப்போகும் அந்தத் திட்டம் நிச்சயம் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஒரு உந்துதலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் நமது நாட்டு விவசாயிகளின் வாழ்வு கடன் சுமை அழுத்தத்தினாலும், பருவ மழை பருவம் தவறி பொழிவதாலும், அப்படிப் பொழிந்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தியதால் உண்டான அழிவினாலும் பெரும் வீழ்ச்சியில் மீள முடியாமல் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றாலும், அவருடைய பேச்சில் ஒரு உறுதியான வாக்குறுதி இல்லாததுதான் ஏமாற்றமளிக்கிறது.
மீண்டு வருவதற்கு வாய்ப்பும் இல்லாமல், மீண்டும் விவசாயம் செய்வதற்கு வழியும் இல்லாமல் தற்கொலைப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் விவசாயிகளை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் உறுதிமொழி பிரதமரின் உரையில் இல்லை.
பஞ்சாப், மராட்டியம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று விவசாயிகளின் தற்கொலை மண்டலம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டேயிருக்கையில், அவர்கள் பெற்ற கடன்கள் அனைத்திலிருந்தும் முழுமையாக விடுவிப்பதே அரசின் தலையாய கடமையாகும்.
அரசு வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள் என்று அரசு நிதி அமைப்புகள் அனைத்திலிருந்தும் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, பிரதமரே குறிப்பிட்டிருப்பதைப் போல, நமது முறை சார்ந்த நிதி அமைப்புகளுக்கு வெளியேயும் அவர்கள் பெற்றுள்ள கடன்களை (குறிப்பாக கந்து வட்டிக் கடன்கள்) அனைத்தையும் ரத்து செய்யும் (மாநில அரசுகளின் வாயிலாக) அவசர சட்டங்களை பிறப்பிக்க வேண்டும்.
அவர்களை அழுத்திக் கொண்டிருக்கும் கடன் சுமைகளில் இருந்து முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். அதுவே முதலும், முழுமையுமான முக்கியத் தேவையாகும். இதனை மாநில அரசுகளின் துணையைக் கொண்டு, மத்திய அரசின் சார்பாக மிகப் பெரும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றிட வேண்டும்.