சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்வதில் மத்திய அரசு காட்டி வரும் தயக்கமும், அது தொடர்பாக மத்திய அமைச்சர்களும், சில காங்கிரஸ் தலைவர்களும் ஊடகங்களுக்கு தரும் செய்திகளும், அத்திட்டத்தை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்திவிடவே மத்திய அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது.
சேதுக் கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஏதுவாக ஆழப்படுத்தப்படும் பகுதியில் உள்ள (தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான) நிலத்திட்டுக்கள் ராமர் பாலமே என்று மதவாத சக்திகள் கூற, அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அப்பகுதியில் மனிதரால் கட்டப்பட்ட எந்த அமைப்பும் இல்லை என்றும், ராமர் பிறந்ததற்கோ அல்லது இராமயணம் நடந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும் தொல்லியல் துறை சார்பில் (உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத அமைப்புகள் காட்டிய எதிர்ப்பையடுத்து அதனை திரும்பப்பெற்ற மத்திய அரசு, வேறொரு பதில் மனு தாக்கல் செய்வதில் மிகுந்த தயக்கம் காட்டி வருகிறது.
சேது கடற்பகுதியில் உள்ளது இயற்கையாக அமைந்த மணல் திட்டுக்களே என்று இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையளித்தப் பிறகும், மேலும் மேலும் கால அவகாசம் கேட்டு காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
webdunia photo
FILE
இந்த நிலையில்தான், இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதில் முக்கிய பங்காற்றவேண்டிய பண்பாட்டுத் துறையின் அமைச்சர் அம்பிகா சோனி, சேது கால்வாய் ஆழப்படுத்தப்படும் இடத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்று கூறி அதிர்ச்சியை அளித்தார்.
அதனால் உண்டான சர்ச்சை அடங்குவதற்குள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங், சேது கடற்பகுதியில் மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும், அதற்கு மேலும் 6 வருடங்களாவது ஆகும் என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளெல்லாம் ஏதோ தனிப்பட்ட முறையில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளாகத் தெரியவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்கான முன் ஆயத்தமாகவே தெரிகிறது.
இப்படி நினைப்பதற்கு காரணம், இரண்டு வாரங்களுக்கு முன் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூடவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டிய மனுவிற்கான முன்வடிவத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தயாரித்திருந்ததாகவும், ஆனால் அதற்கு அமைச்சர் அம்பிகா சோனி தலைமையிலான பண்பாட்டுத் துறை ஏற்க மறுத்ததால் கூடடம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வந்தன.
webdunia photo
FILE
அதனைத் தொடந்துதான் மேலும் 4 வார கால அவகாசத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பெற்றது. இந்த அளவிற்கு சர்சையான பின்னரும் பிரதமரோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியோ எந்த கருத்தும் தெரிவிக்காதது மத்திய அரசின் போக்கு சேது திட்டத்தை முடக்கத்தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.
சேது திட்டத்தை கிடப்பில் போட 2 முக்கிய காரணங்கள் உள்ளதென அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது:
1) மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு நடந்த பஞ்சாப், உ.பி., குஜராத், ஹிமாசலப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தொடர் படுதோல்விகள் அக்கட்சியை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது. மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்து மத நம்பிக்கைக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டு தனது வெற்றி (?) வாய்ப்பை கெடுத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. அதனால்தான், ஆட்சிக்கு முக்கிய பலமாக இருந்துவரும் தி.மு.க.வின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சேது திட்டத்தை முடக்கும் முயற்சியில் மன்மோகன் அரசு ரகசியமாக தீவிரம் காட்டி வருகிறது.
2) சேது சமுத்திரத் திட்டத்திற்கு சிறிலங்க அரசு காட்டிவரும் எதிர்ப்பு. சேது கால்வாய் முழுமைப் பெற்று கப்பல் போக்குவரத்து நடந்தால் அது கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவத்தையும், வருவாயையும் பெரும் அளவிற்குப் பாதிக்கும். அதனால்தான் இராமயணம் நடந்தது உண்மையே என்று கூறி, அதற்கு ஆதாரமாக ஒரு குறுந்தகட்டை டெல்லியில் சிறிலங்கத் தூதரகம் வெளியிட்டது. அதனை சிறிலங்க அரசு செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. இது வெளியிடப்பட்ட நோக்கும், நேரமுமே (அப்பொழுது உச்ச நீதி மன்றத்தில் விசாரணக்கு வரும் நேரம்) அது சேது சமுத்திரத் திட்டத்தை சாய்ப்பதற்காகவே என்பது விவரமறிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்துதான் இருந்தது.
இந்தப் பின்னனிகளில்தான் நமது கப்பற்படைத் தளபதியும் சேது சமுத்திரத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் பொழுது அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
எனவே இவையெல்லாம் ஏதோ தன்னிச்சையான, ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற செயல்களாகத் தெரிந்தாலும், அனைத்தும் ஒரே இலக்கையே கொண்டுள்ளன. அது: சேதுத் திட்டம் புதைக்கப்பட வேண்டும் என்பதே.
webdunia photo
FILE
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அதனை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. எல்லாவற்றிற்கும் பதில் கொடுத்தாகிவிட்டது. “கடலிற்குள் மூழ்கிக் கிடக்கும் நிலத்திட்டுக்களை எவ்வாறு தேச சின்னமாக அறிவிப்பது” என்று கூட உச்ச நீதிமன்றம் கேட்டுவிட்டது.
ஆயினும், அப்பாவி இராமர் பெயரால் தமிழரின் கனவுத் திட்டம் கடலிற்குள் மூழ்கப் போவதை தடுத்து நிறுத்த முடியுமா என்ன?