தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும், வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்துவரும் ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததனால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, ஜல்லிக்கட்டிற்கு எதிராக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களில் ஒன்று ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.
webdunia photo
FILE
ஏனென்றால், நமது நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட, நமது தமிழ் நாட்டில் இருந்து வெளியிடப்பட்டு வரும் ஆங்கில நாளிதழ், ஜல்லிக்கட்டை மனித உணர்வற்ற விளையாட்டு (insensate sport) என்று தனது தலையங்கத்தில் விமர்சித்திருந்தது. ஒரு பத்திரிக்கையில் வெளியாகும் தலையங்கம் என்பது பொதுவாக அந்த நாளிதழின் நிலைப்பாட்டையும், அதன் புரிந்துணர்வையும் வெளிப்படுத்தும் சாதாரண விடயம்தான் என்றாலும், அது தமிழர்களின் தொன்மையான பண்பாட்டுடன் தொடர்புடைய ஒரு பாரம்பரிய நிகழ்வை விமர்சிக்கும் போது, அதற்குரிய பதிலையும், விளக்கத்தையும் அளிக்கவேண்டியது அவசியமாகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டை “மனித உணர்வற்ற விளையாட்டு” என்றும், “இவ்வுலகில் வீரத்தின் பேராலும், கெளரவத்தின் பேராலும் இன்னமும் நிகழ்ந்துவரும் சிந்தனையற்ற (முட்டாள்தனமான) விடயங்களில் ஓன்று” என்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அந்த நாளிதழ் விமர்சித்துள்ளது.
ஜல்லிக்கட்டை இவ்வளவு கீழ்த்தரமாகச் சித்தரிப்பதற்கு அது கூறும் காரணங்கள்:
2) இப்போட்டிகளில் இறங்கும் போட்டியாளர்களும், பார்வையாளர்களும் காளைகளினால் கிழித்து எறியப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
3) மனித உயிரைப்பற்றி கவலைப்படாத, பகுத்தறிவிற்குப் பொருந்தாத பாரம்பரியத்திற்கு (ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு) நாகரீக சமூகத்தில் இடமில்லை.
இதற்கு பதிலாக நாம் கூறுவது :
1) ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஈடுபடுத்தப்படும் காளைகள், உழுவதற்கும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும் காளைகள் அல்ல. ஜல்லிக்கட்டிற்காகவே கன்றிலிருந்தே வளர்க்கப்பட்டவை. சிறப்பாக பராமரிக்கப்பட்டு, தன்னை அடக்க முற்படுபவர்களை முட்டித் தூக்கியெறியும் பயிற்சி அளிக்கப்பட்டு, முரட்டுப் பலத்துடன் களமிறக்கப்படுபவை. இந்தக் காளைகள் சர்வ சாதாரணமாக 10 பேரை தூக்கி எறிந்துவிடக் கூடிய பலம் பெற்றவை. ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுவதால் இவைகள் துன்புறத்தல்களுக்கு ஆளாகின்றன என்று கூறவது, விவரம் தெரியாத மிகைபடுத்தலாகும். இதுவரை நடந்த ஜல்லிக்கட்டில் காளை ஒன்றின் கால் முறிந்தது என்றோ அல்லது காளை செத்துவிட்டது என்றோ கேள்விப்பட்டதுண்டா? காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் மஞ்சள் துணியை போட்டியாளரில் ஒருவர் அவிழ்த்ததும் போட்டி முடிந்துவிடுகிறது, காளை களத்திலிருந்து ஓடி விடுகிறது. இதில் காளைகள் பயங்கரமாக துன்புறுத்தப்படுவதாக கூறுவது வேரற்ற கதையாகும்.
2) போட்டியாளர்களும், பார்வையாளர்களும் காளைகளால் கிழித்து எறியப்படுவது என்பதெல்லாம் பழைய கதை. போட்டியாளர்கள் ஏராளமாக கலந்துகொள்வதாலும், பார்வையார்களுக்கும், களத்திற்கும் இடையே தடுப்பு அமைக்கப்படாததாலும் முன்பெல்லாம் அப்படி நிகழ்ந்ததுண்டு. அப்பொழுதெல்லாம், யார் பார்வையாளர், யார் போட்டியாளர் என்றெல்லாம் பிரித்து அடையாளம் காண முடியாத நிலையில் நிகழ்ந்தவை. கடந்த ஆண்டிலிருந்து தடுப்புகள் நிறுவப்பட்டு, பாதுகாப்பாக நடத்தப்பட்டது. எனவே பழைய கதையை கூறி எதிர்க் காரணம் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
3) மனித உயிரைப்பற்றி கவலைப்படாத, பகுத்தறிவிற்குப் பொருந்தாத பாரம்பரியத்தியத்திற்கு நாகரீக சமூகத்தில் இடமில்லை என்று கூறுவது நாகரீகத்தைப் பற்றியும், அதில் வீரத்திற்கு உள்ள பங்கைப் பற்றியும் சற்றும் அறியாத பிதற்றலாகும்.
உலகின் தொன்மையான தமிழரின் நாகரீகத்தைப் பற்றி அதனுடன் சம்மந்தப்படாதவர்கள் கூறியதற்கு பதிலளிப்பதற்கு முன்னர், வீர விளையாட்டைப்பற்றிய நமது பாரம்பரிய அடிப்படையைப் புரியவைப்போம்.
webdunia photo
FILE
“உயிரைப் பணயம் வைத்து இப்படிப்பட்ட விளையாட்டில் ஈடுபடவேண்டுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வீரம் என்பது நியாயத்திற்கு வேலியாக நிற்கும் துணிச்சலே தவிர வேறில்லை. அப்படி நிற்கும் போது ஆயுதத்திற்கோ, தன்னை விட மேலான பலத்தையோ கண்டு பின் வாங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போர்கலைகளை கற்றல் ஒரு இளைஞனின் (தமிழனின்) வாழ்வில் இன்றியமையாததாகிறது. ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, அடிமுறை, குத்து வரிசை, சிலம்பாட்டம், வாள் வீச்சு, புரவியாட்டம் என்பதெல்லாமும், அதையும் தாண்டி எந்த வயதிலும் எத்தனை பேர் வந்தாலும் எதிர்கொள்ளும் திறமையை, திராணியைத்தரும் வர்மக் கலையும் போர்க் கலைதான். இவையாவும் தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாகும்.
மேலும் இப்படிப்பட்ட போர்ப் பயிற்சியின்றி, வெறும் ஏட்டுக் கல்வியைக் கற்றுச் சம்பாதனை வாழ்க்கைக்கு தேர்ச்சி பெறுபவன் சாதாரண மிரட்டலுக்கு அஞ்சுபவனாகவும், இரத்தத்தைக் கண்டால் மயக்கமேற்பட்டு விழுபவனாகவும், சமூக சிந்தனை, கூட்டு மனப்பான்மை அற்றவனாகவுமே இருப்பதைக் காணலாம். இதெல்லாம் ஏதோ முரட்டு விளையாட்டு என்று விவரம் தெரியாமல் பிதற்றிக் கொண்டிருப்பவர்களின் பிரதிபலிப்புத்தான் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த பொது நல வழக்காகும்” என்று உச்ச நீதிமன்றம் தடை அளித்தபோதே விளக்கியிருந்தோம்.
வீரமும் விவேகமும்!
தமிழரின் வாழ்வில் அறிவிற்கும், அனைத்தையும் உணரவல்ல ஞானத்திற்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு ஈடாக வீரத்திற்கும் இணையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை தமிழரின் இலக்கியங்களிலிருந்து அறிகின்றோம்.
எதையும் கண்டு அஞ்சாத, எதிர்ப்பைக் கண்டு - அது எவ்வளவு பலமானதாகவிருப்பினும் - உடற்பலமும், அயராத நெஞ்சுரமும் இருந்ததால்தான் எத்தனையோ சீற்றங்கள், பேரழிவுகளுக்குப் பின்னரும் தனது நிலையிழக்காத, ஈடிணையற்ற உன்னத சமூகமாக, மானுட நாகரீகத்தின் முதன்மைத் தொட்டிலாக தமிழினம் திகழ்ந்திருந்தது.
வீரத்திற்கும், விவேகத்திற்கும், காதலுக்கும், ஞானத்திற்கும் உரிய இடத்தைத் தந்ததால்தான் தமிழனின் படைப்புகள் பேசப்படுகின்றன, தமிழினமும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் உன்னதமானதாக வாழ்வியலாளர்களாலும், வரலாற்றியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, உயிர், நாகரீகம், பகுத்தறிவு பற்றியெல்லாம் தமிழனுக்கு எவரும் கதை சொல்லவும் தேவையில்லை, காது குத்தவும் தேவையில்லை.
உயிரின், வாழ்வின் மதிப்பைப் பற்றி இவ்வளவு உயர்வாக்க் கூறிடும் இவர்கள், நமது அண்டை நாட்டில் அந்நாட்டு அரசு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான இன ஒழிப்பை கண்டுகொள்ளாதது மட்டுமின்றி, அந்நாட்டு அரசு கொடுத்த விருதையும் பெற்றுக்கொண்டு அதற்கு ஆதரவான பிரச்சாரக் கருவியாகவும் செயல்பட்டு வருவது ஏன்?