இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக சிறிலங்க அரசு அறிவித்துள்ளது இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் ஏற்பட்டுள்ள திருப்பம் மட்டுமின்றி, இனப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் அமைதித் தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி வந்த உலக நாடுகளுக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சிறிலங்க அரசின் இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், இம்முடிவு வன்முறைக்கே வழிவகுக்கும் என்றும், இனப் பிரச்சனைக்கு தீர்வைத் தராது என்றும் கூறியுள்ளது மட்டுமின்றி, பேச்சு வார்த்தையின் மூலம் காணப்படும் அரசியல் தீர்வே நீடித்த தீர்விற்கும், நிரந்தர அமைதிக்கும் வழிவகுக்கும் என்று தங்கள் நிலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இதே கருத்தை இந்தியாவும் பிரதிபலித்துள்ளது. இனப் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசிற்க்கும் இடையே அனுசரணையாளராக பணியாற்றிய நார்வேயும், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த நார்டிக் நாடுகளும் சிறிலங்க அரசின் இம்முடிவிற்கு கவலை தெரிவித்துள்ளன.
ஏனெனில் இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான (பேச்சுவார்த்தை மூலமான) வாய்ப்புக்களை தொடர் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் திறம்பட தவிர்த்து வந்த சிறிலங்க அரசு, போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதின் மூலம் அமைதி முயற்சிகளுக்கான கதவுகளை முற்றிலுமாக அடைத்துவிட்டது.
வேடத்தைக் கலைத்த சிறிலங்க அரசு!
இலங்கை இனப் பிரச்சனையை கவனித்துவரும் எவருக்கும் சிறிலங்க அரசின் இம்முடிவு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளித்திருக்காது.
webdunia photo
FILE
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் நிரந்தரத் தீர்வை எட்ட உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக்கொள்ளவதாக அறிவித்திருப்பது, இனப் பிரச்சனைக்கு ராணுவ வழியில் தீர்வு காண வேண்டும் என்கின்ற அந்நாட்டு அரசின் (நீண்ட கால) உள் திட்டத்தின் நிதர்சனமான வெளிப்பாடாகும்.
சிறிலங்க அரசின் இந்த முடிவு ஏதோ தற்பொழுது அங்கு தீவிரமடைந்துள்ள மோதலின் எதிரொலியானது அல்ல. மாறாக, எந்த அன்னிய நாடுகளின் தலையீடுமின்றி, “இராணுவ பலத்தைக் கொண்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்” என்ற சிங்கள மேலாதிக்க கொள்கையைக் கொண்ட அரசியல் எண்ணத்தின் வெளிப்பாடே சிறிலங்க அரசின் இந்த முடிவாகும்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நார்வே தலைமையிலான சர்வதேச கூட்டமைப்பு முயற்சி மேற்கொள்ளத் துவங்கிய நாள் முதலே அதனை தொடர்ந்து எதிர்த்துவரும் ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமயா உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே, அமைதிப் பேச்சு வார்த்தையில் நாட்டம் காட்டவில்லை. ராணுவ பலத்தை அதிகரிப்பதிலும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதிலுமே கவனம் செலுத்தினார்.
“விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டிய பிறகே இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்” என்று ராஜபக்சேயின் இளைய சகோதரரும் அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே பேசியதெல்லாம் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் குரல்தான் என்பது இலங்கைப் பிரச்சனையை தொடர்ந்து கவனிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
உள் நாட்டுப் போரினாலும், ஆழிப் பேரலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவினாலும் பாதிப்படைந்த (தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான) வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் தென் இலங்கையின் மேம்பாட்டிற்காக உதவ முன்வந்த நார்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட கொடை நாடுகள் (Donor Nations) அமைப்பு அளித்த அழுத்தத்தின் காரணமாக பேச்சுவார்த்தையில் தொடர்ந்து பங்கேற்ற சிறிலங்க அரசு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியது.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டத்தை உருவாக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்து உலக நாடுகளின் கண்களை மிகச் சாமர்த்தியமாக மறைத்த அதிபர் ராஜபக்சே, தனது அயலுறவு அமைச்சரை இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்ய நாடுகளுக்கு அனுப்பி ராணுவ பலத்தைக் கூட்டுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
ராணுவ ரீதியான “தீர்வை” நோக்கி முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையே மணலாறு பிரச்சையாகும். தமிழர் பகுதிகளை தவிர்த்துவிட்டு, மற்றப் பகுதிகளுக்கு குடி நீர்த் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டதன் காரணமாகவே 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிகளை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் மேற்கொண்ட அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வெடித்த மோதலே இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
எனவே இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பது அதிபர் ராஜபக்சேயின் திட்டமல்ல என்பது என்றோ தெளிவாகிவிட்டது. ராணுவத் தீர்வை நோக்கியே தனது அரசு நடைபோடுகிறது என்பதனை தனது சொல்லாலும், செயலாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்து வந்த ராஜபக்சே, அதுவே சரியான வழியென்றும் கூறியுள்ளார்.
ராணுவத் தீர்வு என்றால் என்ன?
webdunia photo
FILE
ஒரு வாரத்திற்கு முன்னர், டிசம்பர் 26 ஆம் தேதியன்று, தென்னிலங்கையில் உள்ள மத்தாரா என்ற இடத்தில் நடந்த சுனாமி பேரழிவு நினைவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்சே, “புலிகளுக்கு எதிராக இதுவரை பெறாத வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இதன்மூலம் இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு காணும் வழி பிறந்துள்ளது. இதில் சந்தேகத்திற்கு இடமில்லை” என்று கூறினார். அதனைத் தொடர்ந்துதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை சிறிலங்க அரசு எடுத்தது.
இவ்வாறு கூறுவதற்கு முன்னர் மற்றொரு கருத்தையும் ராஜபக்சே கூறியுள்ளார். அதுவே மிகவும் கவனித்தக்கது. “இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவே நாம் விரும்பினாலும், பயங்கரவாதத்தை முறியடிக்காமல் அது குறித்துப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை”. அதாவது விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக முறியடித்து ஒழித்துக்கட்டியப் பின்னரே அரசியல் தீர்வு என்று கூறுகிறார்.
முதலில் கூறியது: இனப் பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு காணும் வழி பிறந்துள்ளது என்பது, அதன் பிறகு கூறியிருப்பது: அரசியல் ரீதியான தீர்வு காணவேண்டுமெனில் புலிகளை முறியடிக்காமல் அது சாத்தியமில்லை என்பது. இவை இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பதுபோலத் தோன்றினாலும், வேறுபாடு ஏதுமில்லை. ராஜபக்சேயைப் பெறுத்தவரை ராணுவத் தீர்வு என்பதும், அரசியல் தீர்வு என்பதும் ஒன்றுதான். அதாவது இலங்கைத் தமிழர்களின் அடையாளமாக, உரிமை, பாதுகாப்பு அரணாக இருந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டுவதே ராஜபக்சேயைப் பொறுத்தவரை “இனப் பிரச்சனைக்கு தீர்வு” என்பது.
எனவே அவர் தீர்வு என்று கூறுவது முற்றிலும் பொருளற்றச் சொல்லாகும். இதைதான் உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, சுயாட்சி என்கின்ற எதுவும் சிறிலங்க அரசின் திட்டத்தில் இல்லை. இலங்கையின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் உட்பட்டு தமிழர்களின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இதுநாள்வரை இந்தியா கூறிவந்ததற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதையே சிறிலங்க அரசின் முடிவு தெளிவுபடுத்தியுள்ளது.
நாளை : இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?