பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டதனால் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்யக்கூடிய தலைவர்(கள்) இல்லாதது அந்நாட்டின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவேன் என்ற உறுதியான முழக்கத்துடன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய பெனாசிர், ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் இப்போராட்டத்தில் ஈடுபடப்போகும் தனது உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளது என்று பாகிஸ்தான் மண்ணில் காலடி வைத்ததும் கூறினார்.
அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, அவருக்கு வரவேற்பு அளித்து நடத்தப்பட்ட ஊர்வலத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு நிரூபித்தது. பெனாசிர் காயமின்றி தப்பினாலும், அவருடைய ஆதரவாளர்கள் 143 அத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் அரசு தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பெனாசிர் வெளிப்படையாகவே கோரினார். பாதுகாப்பும் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் மிகச் சாதரணமாக பெனாசிர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.
பெனாசிர் படுகொலை இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்று, பாகிஸ்தானின் எதிர்காலம். இரண்டு, அவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சதி.
பாகிஸ்தானின் எதிர்காலம்!
webdunia photo
WD
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்ய நடைபெற்றுவந்த முக்கிய அரசியல் முயற்சிகளுக்கு பலம் சேர்ப்பதாக பெனாசிரின் வருகை இருந்தது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், ஆட்சி அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொள்ள தடையாக இருந்த நீதித் துறையைக் கட்டுப்படுத்த, உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்து மட்டுமின்றி, அவரை வீட்டுச் சிறையில் வைத்ததையடுத்து ஏற்பட்ட எதிர்ப்பு பெனாசிரின் வருகைக்குப் பிறகு மிகப் பெரிய ஜனநாயக எழுச்சியாக பலம்பெற்றது.
இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்த பெனாசிர் பேசிய கூட்டங்களுக்கு மக்கள் வெள்ளமெனத் திரண்டதை தொலைக்காட்சிச் செய்திகள் படம் பிடித்துக் காட்டின. பெனாசிர் படுகொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் சிந்து மாகாணத்தில் அவர் கலந்துகொண்டு பேசிய பேரணியில் கூடிய கூட்டம் ஜனநாயக விரும்பிகளுக்கு நம்பிக்கையையும், ஆட்சியாளர்களுக்கும், மதவாதிகளுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியதாக அந்நாட்டுச் செய்திகள் கூறின.
இப்படிப்பட்ட சூழலில்தான் பெனாசிர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டக்கூடிய இரண்டு தலைவர்களில் (மற்றொருவர் நவாஸ் ஷெரீஃப்) முதன்மையானவரான பெனாசிர் திகழ்ந்தார். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு நவாஸ் ஷெரீஃபுடன் இணைந்து போராடுவேன் என்றும் பெனாசிர் அறிவித்தார். பாகிஸ்தான் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை அதற்காக ஆயத்தப்படுத்தும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால்தான் பெனாசிரின் படுகொலை ஜனநாயக முயற்சிகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது. ராணுவ ஆட்சியாளர்களின் தற்குறித்தனமான, அடக்குமுறை ஆட்சியாலும், மத அடிப்படைவாதிகள், மதக் கொள்கையை அடிப்படையாக்க் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களின் மாற்றத்தை நோக்கிய அரசியல் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், அடையாளமாகவும் பெனாசிர் திகழ்ந்தார். எனவேதான் அவரது படுகொலை அந்நாட்டில் மட்டுமின்றி, அண்டை- அயல் நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அந்நாட்டின் பிரதமராக இருந்த லியாகத் அலி சுட்டுக் கொல்லப்பட்ட அதே இடத்தில் - அவரது பெயரிடப்பட்டுள்ள லியாகத் பாக் பூங்காவில் - தான் பெனாசிர் புட்டோவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என்ற மத குருக்களின் கோரிக்கையை ஏற்காததால்தான் லியாகத் அலி சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வரலாறு கூறுகிறது. அதுவே இப்போழுதும் நடந்துள்ளது. ஜனநாயகத்தை விரும்பாத ராணுவ ஆட்சியாளர் (முஷாரஃப்), அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறும் மதவாதிகள், இஸ்லாத்தின்படிதான் ஆட்சி நடக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவற்றின் பலமான பிடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்கத் தலைவராகத் திகழ்ந்த பெனாசிரும் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவது கானல் நீரே.
webdunia photo
FILE
நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும், இம்ரான் கானின் இன்சாஃப் கட்சியும், மேற்குறிப்பிடப்பட்ட மூன்று ஒத்த கருத்துடைய ஆயுத, அதிகார பலம் கொண்ட சகதிகளை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது மிக மிகக் கடினமானதே.
சுலபமாக நடந்த படுகொலை!
லியாகத் அலி பாக் பூங்காவில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, மேடையிலிருந்து இறங்கி தனது வாகனத்தை நோக்கி பெனாசிர் நடக்கும்போது, இருபக்கமும் மக்கள் திரள் அவரை நெருக்கியது. தனது கட்சியின் பொறுப்பாளர்கள் அவர் நடப்பதற்கு வழி ஏற்படுத்தித் தர, கையசைத்துக் கொண்டே தனது வாகனத்திற்குச் சென்றார் பெனாசிர். அவருக்கு அருகே ஒரு பாதுகாவலரும் இல்லை!
பெனாசிர் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் காட்டப்பட்ட இக்காட்சிகளை கண்ட அனைவருக்கும் இது நிச்சயம் ஆச்சரியமளித்திருக்கும். தன்னை காப்பாற்ற அருகே ஆயுதமேந்திய ஒரு மெய்க்காப்பாளரும் இல்லாததை அறிந்தும் வாகனத்தில் ஏறிய பெனாசிர், வாகனத்தின் உள் சென்று மேற்பகுதிக்கு வந்து தன்னைக் காண காத்திருக்கும் மக்களை நோக்கி கையசைத்தபோதுதான் அவர் சுடப்பட்டார்.
இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த அவருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படாததே அவரை மிகச் சுலபமாக தீர்த்துக்கட்டுவதற்கு வழியேற்படுத்திவிட்டது.
“நாங்கள்தான் பெனாசிரை சுட்டுக் கொன்றோம்” என்று அறிவித்ததன் மூலம் அல் கய்டா பயங்கரவாத இயக்கமே பெனாசிரை சுட்டுக் கொன்றது என்று உலகிற்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது (சற்று முன் கிடைத்த செய்தி: பெனாசிரை சுட்டுக் கொன்றது தாங்கள் அல்லவென்றும், இதனைச் செய்தது பாகிஸ்தான ராணுவமே என்று அல் கய்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது).
ஆனால், அவரை மிகச் சுலபமாக, மிக அருகில் இருந்து சுட்டுத்தள்ள (பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தாததன் மூலம்) பாகிஸ்தான் அரசே வழி ஏற்படுத்திவிட்டது என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே
webdunia photo
FILE
புரிந்துவிடும். பெனாசிர் சுட்டுக் கொல்லப்பட்டதும் நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொல்லப்பட்டதைப் போன்றுதான் நடந்துள்ளது (நடத்தப்பட்டுள்ளது). முக்கியப் பிரமுகர்களுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பல நடவடிக்கைகள் ராஜூவ் படுகொலையில் எடுக்கப்படவில்லை என்பதை அது குறித்து விசாரித்த நீதிபதி ஜெயின் விசாரணை ஆணையத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்த நீதிபதி வர்மா ஆணையத்தாலும் சுட்டிக் காட்டப்பட்டதாகச் செய்திகள் வந்தன.
எனவே, உரிய பாதுகாப்பைத் தவிர்த்தன் மூலம் பெனாசிரின் படுகொலைக்கு முஷாரஃப் அரசு வழிவகுத்துக் கொடுத்துவிட்டது என்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியின் குற்றச்சாற்றில் நிச்சயம் அடிப்படையுள்ளது.
எனவே, பெனாசிர் படுகொலை ஏதோ அல் கய்டா இயக்கம் நடத்திய தாக்குதல்களில் ஒன்றுதான் என்று எண்ணத்தக்கதாக இல்லை, இல்லவே இல்லை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட பெரும் அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன, நடத்தப்பட்டுள்ளன. இவைகளின் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணர்வதின் மூலமாக மட்டுமே, மீண்டும் அவைகள் நிகழ்த்தப்படாமல் தடுக்க உதவும்.