சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத் திட்டுக்களை ராமர் பாலம் என்று பா.ஜ.க. உள்ளிட்டக் கட்சிகள் புது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், கடல் பகுதியை ஆழப்படுத்துவதால் தமிழ்நாட்டிற்கு நிலநடுக்க ஆபத்து ஏற்பட்டுள்ளதாக "நிபுணர்கள்" சிலர் கூறியிருப்பது அடிப்படையற்ற அச்சத்தை உருவாக்கும் முயற்சியாகத் தெரிகிறது!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் இப்படிப்பட்ட அச்சத்தை உருவாக்கியுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்துவதால், அது அப்பகுதியில் ஒரு புவியியல் ரீதியிலான சமமின்மையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனால் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உருவாகும் என்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் கோபாலாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புவியியலை பாடமாகப் படித்தவர்களுக்கும், நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை விஞ்ஞானப்பூர்வமாக நன்கு அறிந்தவர்களுக்கும் இவர் கூறுவது சற்றும் உண்மையற்றது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்வார்கள்.
webdunia photo
WD
நிலநடுக்கம் ஏற்படுவதற்குக் காரணம், கண்டங்களை (ஆசியா, ஐரோப்பா, இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்ட்ரேலியா, பசுபிக்) தாங்கியுள்ள புவிப் பெரும் பாறைகள் ஒன்றோடு ஒன்று நெடுங்காலமாக ஒரு தொடர்ந்த இயக்கத்தினால் உரசி ஏற்படும் ஒரு பெரும் அசைவாகும். கண்டங்களைத் தாங்கியுள்ள பெரும்பாறைகள் சந்திக்கும் இடங்களில் பெரும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அப்பகுதிகளை நிலநடுக்க அபாய (Earth Quake Prone Zones) பகுதிகள் என்று குறித்து, அதற்கென்றே தனி வரைபடங்களும் உள்ளன.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்வை சேது சமுத்திர திட்டத்திற்காக ஒரு 13 மீட்டர் கடலை ஆழப்படுத்துவதானால் ஏற்படும் என்றுதான் இந்த நிபுணர் அச்சுறுத்தியுள்ளார்.
நமது இந்திய துணைக் கண்டத்தை தாங்கியுள்ள பெரும்பாறை போன்று உலகம் முழுவதும் உள்ள 12 பெரும் பாறைகள் பூமியின் மேற்பகுதியில் இருந்து 65 கி.மீ. தூர கனமுடையவை. இதனைத்தான் புவியின் மேற்பகுதி (எர்த் கிரஸ்ட்) என்று அழைக்கிறோம். இந்த 65 கி.மீ. கனமுடைய பாறைகள்தான் ஒன்றோடு ஒன்று மோதி உரசுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்ட விஞ்ஞானப்பூர்வ உண்மை. ஆனால், சேதுக் கடலில் ஒரு 13 மீட்டர் ஆழத்திற்கு மண்ணெடுத்து ஆழப்படுத்துவதால் இந்தப் பெரும்பாறைகளின் மீது ஒரு சமமின்மை ஏற்படும் என்று இந்த நிபுணர் கூறுவது எப்படி என்று தெரியவில்லை.
இது குறித்து நிலநடுக்க ஆய்வாளர் (2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சுமத்ரா தீவுகளையொட்டி ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை முன்கணித்துக் கூறிய) டாக்டர் என். வேங்கடநாதனை கேட்டோம்.
webdunia photo
FILE
இப்படி கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஆரம்பித்த வேங்கடநாதன், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முன்னோடியாக உள்ள சூயஸ் கால்வாய் திட்டத்தையும், பனாமா கால்வாய் திட்டத்தையும் உதாரணம் காட்டியவர், அவ்விரு திட்டங்களுக்காக கடல் ஆழப்படுத்தப்பட்டதனால் நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார்.
இதுமட்டுமல்ல, நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் உள்ள ஜப்பானில் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு கடலிற்கு அடியில் பூமிக்குள் சுரங்கம் தோண்டி அதிவேக ரயிலை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக எந்த விவரமும் இல்லை என்று வேங்கடநாதன் கூறினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் தாக்கம் காரணமாக சென்னை நகரம் 2 செ.மீ. அளவிற்கு கிழக்காக நகர்ந்துள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள தேச புவியியல் ஆய்வுக் கழகம் (NGRI) கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய டாக்டர் வேங்கடநாதன், "அவ்வளவு பெரிய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட தாக்கம் வெறும் 2 செ.மீ.தான் என்றால், சேதுக் கடலில் 13 மீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்துவதனால் எந்த அளவிற்கு தாக்கம் இருக்கும் என்பதனை நீங்களே யோசித்துப் புரிந்துகொள்ளுங்கள்" என்றார்.
ஆக, சேது சமுத்திர திட்டத்தினால் புவியியல் ரீதியாக பெரும் தாக்கம் ஏற்பட்டுவிடும் என்று கூறுவதெல்லாம் அறியாதவர்களை ஏமாற்றும் பூதக் கதைதான்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்துவதால் அங்கு நிலவும் உயிரியல் சூழல் பாதிப்படையும் என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளார்.
எந்தவொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் அதனால் சுற்றுச் சூழலில் ஓரளவிற்கு தாக்கம் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. சென்னை துறைமுகத்தை உருவாக்குவதற்காக கரையில் இருந்து அந்த வளைவுச் சுவர் கட்டப்பட்டதன் காரணமாகத்தான் மெரீனா கடற்கரை உருவானது. அதே நேரத்தில், துறைமுகத்தின் வடபகுதியில் திருவொற்றியூர், எண்ணுர் ஆகிய பகுதிகளில் கரையை அரித்துக் கொண்டு கடல் பெரும் அளவிற்கு நிலங்களை மூழ்கடித்தது. இதற்காக சென்னை துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்டதா? இல்லையே. மாறாக, எண்ணூரிலும் மற்றொரு துறைமுகம் கட்டப்பட்டது. அதனால்கூட சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்பட்டது. அதற்காக அத்திட்டம் கைவிடப்படவில்லையே.
webdunia photo
WD
மனிதன் மேற்கொள்ளும் தொழில் ரீதியான, பொருளாதார ரீதியான ஒவ்வொரு முயற்சியும் இயற்கையின் மீது குறிப்பிட்ட அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பொருளாதார வளத்தைக் கொண்டுவரும் திட்டங்களை கைவிட முடியாது.
இன்றைக்கு விவசாய நிலங்கள் என்று நாம் பார்ப்பதெல்லாம், ஒரு நேரத்தில் காடுகள்தானே. காடுகளை அழித்துத்தானே நிலமமைத்தோம். எனவே, சேது சமுத்திர திட்டப் பணிகளால் உயிரியல் சூழலில் குறிப்பிட்ட அளவிற்கு தாக்கம் இருக்கவே செய்யும் என்பதை அந்த திட்டப் பணிக்காக ஆய்வு நடத்திய தேச சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (நீரி) கூறியிருந்ததே. எந்த அளவிற்கு அந்த தாக்கத்தை குறைத்து செய்ய முடியுமோ அந்த அடிப்படையில்தான் அத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று அரசு பலமுறை கூறியுள்ளதே.
அதற்குப் பிறகும் நிபுணர்கள் என்று கூறிக்கொள்கின்ற இப்படிப்பட்ட அடிப்படையற்ற அல்லது மிகச் சாதாரண காரணங்களைக் கூறி ஒரு மாபெரும் திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க நினைப்பது நேர்மையான மனப்பான்மை அல்ல.
எதை வேண்டுமானாலும் பிரச்சனையாக்கி அரசியல் கட்சிகள் லாபம் தேடலாம். அதனைப் புரிந்துகொண்டு முறியடிப்பது இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மக்களின் சிந்தனையைப் பொறுத்த விஷயம். ஆனால், மக்களை சிந்திக்கத் தூண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நிபுணர்கள் எந்த விஞ்ஞானத்தால் பயன்பெற்று முன்னிலைக்கு வந்தார்களோ, அதனையே கருவியாக்கி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பலனை புதைக்க நினைப்பது வடிகட்டிய நேர்மையின்மையாகும்.
ஆன்மீகம் அரசியலாகலாம், ஆனால் விஞ்ஞானம் அரசியலானால் அந்த சமூகத்திற்கு ஆபத்தாக அமையும்.
சேது சமுத்திரத் திட்டத்தை சிறிலங்கா அரசு எதிர்க்கிறது என்றால் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், சேதுக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து துவங்கம் போது, கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் இழக்கும். அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மாறாக, தூத்துக்குடி துறைமுகம் முக்கியத்துவம் பெறும். தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கும். தென் தமிழ்நாட்டின் தொழில், வணிக மேம்பாட்டிற்கு உந்துதலாக அமையும். எனவே, தமிழர்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.