ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தியை பாலியல் திரிபு காரணங்களைக் கூறி நோகடித்தன் விளைவாக அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்கின்ற செய்தி நமது நாட்டிற்கும், உலக ஒலிம்பிக் இயக்கத்திற்கும் அவமானமாகும்.
இயற்கையில் ஆண், பெண் என்பது மட்டுமின்றி, இப்படிப்பட்ட ஆணுமற்ற, பெண்ணுமற்ற எந்த பாலியலும் சாரா திரிபும் பிறப்பில் ஏற்படுவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தும், அதையே பெரிய காரணமாக்கி அவர்களுக்கு சமூக அடையாளமே தராமல் ஒதுக்கி வைக்கும் துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது பிறவியிலேயே பாலியல் திரிபு எனும் பால்சாரா நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தும், அதையெல்லாம் தாண்டி எந்தத் துறையில் அவர்கள் முன்னேற முயற்சித்தாலும் சமூகம் அவர்களை அதே குறையைக் காட்டி ஒதுக்கித் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு தடகள வீராங்கனை சாந்தியும் ஆளாக்கப்பட்டிருப்பது கொடுமையிலும், கொடுமையாகும்.
ஆசிய தடகள போட்டிக்குச் செல்லும் முன்பே அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. எல்லா தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பொதுவாக நடத்தப்படும் சோதனைகள் அனைத்திற்கும் சாந்தியும் உட்படுத்தப்பட்டார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவருடைய பாலியல் நிலை குறித்த எந்த சர்ச்சையும் எழவில்லை. ஆனால் போட்டியில் வென்றதற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவர் பாலியல் நிலை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை என்று கூறி அளிக்கப்பட்ட பதக்கத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பும், அதற்கு எவ்வித எதிர்பபும் இன்றி இசைவளித்த இந்திய ஒலிம்பிக் சங்கமுமே சாந்தியை விரக்தியின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன.
சென்னையில் தடகள பயிற்சிக்காக சாந்தி வந்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிய பின் இத்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அவர் இங்கிருந்தபோது அவருடைய பாலியல் நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மனம் புண்படக்கூடிய அளவிற்கு எவரும் அவரிடம் தவறாக நடந்து கொண்டிருப்பார்களோ என்கின்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
webdunia photo
FILE
இப்பிரச்சனையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை கடுமையான பயிற்சிக்குப் பிறகே ஆசிய அளவில் அல்லது ஒலிம்பிக் அளவில் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு திறனை வெளிப்படுத்த முடிகிறது. அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட திறன், பாலியல் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதனால் எவ்வாறு தகுதியற்றதாக்கப்படுகிறது என்பதுதான் அந்தக் கேள்வி.
உதாரணத்திற்கு சாந்தியையே எடுத்துக்கொள்வோம். அவர் பால்சாரா நிலையில் உள்ளார் என்பதையும் வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். அந்த நிலைதான் அவரது வெற்றிக்கு காரணமா? இதனை மருத்துவ அல்லது விளையாட்டு மருத்துவ ஆய்வுகள் எந்த இடத்திலாவது நிரூபிக்கின்றதா? இதற்கு பதில் தேடவேண்டும்.
பாலியல் திரிபு அதற்கு உட்பட்ட நபருக்கு எந்தவிதத்திலாவது கூடுதல் பலத்தைத் தருகிறதா? அதாவது, பெண் தன்மை கூடுதலாக உள்ள அரவாணிகள், சராசரிப் பெண்களை விட அதிக பலம் படைத்தவர்களா? அல்லது ஆண் தன்மை அதிகம் உள்ள அரவாணர்கள், சராசரி ஆண்களை விட பிறவிலேயே கூடுதல் பலம் கொண்டவர்களா? என்பது எப்பொழுதுதாவது நிரூபிக்கப்பட்டுள்ளதா? இல்லை.
அது உண்மையாயிருப்பின், இவ்வுலகிலேயே சக்தி மிக்கவர்களாகவும், ஆற்றலை அதிகம் வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் பால் திரிபு இயற்கை உடையவர்களே அதிகமாக இருக்க முடியும். ஆனால், அவ்வாறு இல்லை. உண்மை இவ்வாறு இருக்கும் போது பாலியல் திரிபின் காரணமாக அவர் தொடர்ந்து பயிற்சி செய்து அதனால் கிட்டிய பரிசை அவருக்கு மறுப்பது எப்படி நியாயமாகும்? இந்திய ஒலிம்பிக் சங்கம் பதில் கொடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவதில் சாந்தி முதல் நபர் அல்ல. தடகள விளையாட்டுக்களை நீண்ட காலம் ரசித்து வருபவர்களுக்குத் தெரியும் : முன்பு அனுசுயா பாய் என்றொரு வீராங்கனை இருந்தார். கட்டுமஸ்தான உடல் தேகத்துடன் குறைந்ததூர ஓட்டங்களிலும், நீளம் தாண்டுதலிலும் அதிக இந்திய அளவில் சிறப்பாக பிரகாசித்த அவரை இப்படித்தான் பாலியல் திரிபு சர்ச்சையைக் கூறி புறக்கணித்தனர். எனவே, இது புதிது அல்ல. ஆனால், பதில் காணாமலேயே இவ்வளவு காலம் தொடர்வதுதான் வேடிக்கை, விநோதம், வேதனை.
கலைஞரைப் போன்ற பரந்த மனப்பான்மை தேவை!
webdunia photo
FILE
சாந்தியின் மீது பாலியல் சர்ச்சை எழுப்பப்பட்டபோது, அதனை சற்றும் பொருட்படுத்தாமல், தான் அறிவித்தபடியே தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.15 லட்சம் கொடுத்தது மட்டு்மின்றி, ஒரு லட்சம் ரூபாய் பெருமானமுள்ள ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும் அளித்து சாந்தியை ஊக்கப்படுத்தினார் தமிழக முதலமைச்சா கருணாநிதி.
இப்படிப்பட்ட எண்ணப் போக்கு எல்லோருக்கும் தேவை. ஆழ்ந்த சிந்திக்க வேண்டும். ஒரு வீரரின் சாதனை என்பது இயற்கை சார்ந்த பலத்தாலோ அல்லது பிறப்பு ரீதியிலான திரிபு சமாச்சாரங்களினாலோ கிடைத்துவிடுவது அல்ல. அது நீண்டகால பயிற்சியுடன் கனவை நனவாக்க வேண்டுமென்கின்ற வெறியுடன் தங்களை வருத்திக்கொண்டு முன்னேறும் போராட்ட குணத்தின் விளைவு.
அதன் பலனே பதக்கங்களாய் கிடைக்கின்றது. அதனை மறுப்பதற்கும், பறிப்பதற்கும் எவனுக்கும் உரிமை இல்லை. ஒலிம்பிக் சங்கம் பாலியல் திரிபு குறித்த தனது நிலைப்பாட்டை பிரகடனப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், சாந்திக்கு ஏற்பட்ட நிலை தொடரும். அப்படி தொடர்ந்தால் நாம் நாகரீக சமூகம்தானா என்கின்ற கேள்வி எழும்.