ரயில் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் அதை ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர, மறியலில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில் துணை அமைச்சர் ஆர். வேலு எச்சரிக்கை விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது!
சென்னை கடற்கரையில் இருந்தும், சென்ட்ரலில் இருந்தும் இயக்கிக் கொண்டிருந்த மின் தொடர் வண்டிகள் சிலவற்றை ரத்து செய்ததும், புறப்பாடு நேரங்களை மாற்றியமைத்ததும், சில மின் தொடர் வண்டிகளின் புறப்பாட்டு நிலையங்களை நீட்டித்ததும் ரயில் பயணிகளை மிகுந்த சிரமத்தில் தள்ளியது.
ரயில்வே நிர்வாகம் இப்படி தன்னிச்சையாக பயண நேரங்களை மாற்றியமைத்தது, ரயில்களை ரத்து செய்தது தங்களை வெகுவாக பாதிக்கிறது என்றும், குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கும், அலுவலகம் முடிந்து போதுமான நேரத்தில் இல்லத்திற்குத் திரும்புவதும் தாமதமாகிறது என்று எடுத்துக் கூறினர், கடிதங்களை அனுப்பினர், புகார்களைச் செய்தனர். எந்த நடவடிக்கையையும் ரயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. அதனால் கோபமுற்ற மக்கள் ஆங்காங்கு ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் புறநகர் ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, நீண்டதூர விரைவு ரயில்களின் போக்குவரத்தும் பாதிப்பிற்கு உள்ளானது. இன்று கூட தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர், ஏன்? தாம்பரத்தில் இருந்து தினமும் காலை 9,05 மணிக்கு கடற்கரைக்கு ஓடிக் கொண்டிருந்த விரைவு மின் தொடர் வண்டியை செங்கல்பட்டிற்கு நீட்டித்ததால் அங்கிருந்து ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் வர, தாம்பரத்தில் இருந்து சென்றுக் கொண்டிருந்த பயணிகள் ரயிலில் ஏறமுடியாமல் சிரமப்பட, அதனால் ஏற்பட்ட கோபமே அவர்களை ரயில் மறியலில் ஈடுபடச் செய்தது.
பயணிகளின் வசதிக்காகத்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்த நேரத்தில் குறிப்பிட்ட எந்தவொரு ரயிலிலாவது போதுமான பயணிகள் பயணம் செய்யவில்லையெனில் அதனை ரத்து செய்வதில் தவறேதும் இல்லை. அது நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவுதான். ஆனால், எல்லா நேரமும் முழு அளவிற்கு ஓடிக் கொண்டிருந்த மின் தொடர் வண்டிகளை ஏன் ரத்து செய்ய வேண்டும்? எதற்காக நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்? என்று பயணிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தென்னக ரயில்வே நிர்வாகம் பதிலளிக்கவில்லை. பயணிகளுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர் மறியலில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறுகிறார்.
webdunia photo
FILE
பயணிகளின் கேள்விகளுக்கு அமைச்சரால் பதிலளிக்க முடியாது. ஏனெனில் அவரால் ஏற்பட்ட குழப்படிதான் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதும், புறப்பாட்டு இடம் நீட்டிக்கப்பட்டதும், அதற்கேற்றவாறு நேரங்கள் மாற்றப்பட்டதும் ஆகும்.
புதிதாக ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பது, அறிவித்தபடி அவ்வாறு ரயிலை விடுமாறு ரயில்வே நிர்வாகத்தினரை நிர்பந்திப்பது. புதிதாக ரயில்களை அறிமுகம் செய்ய வேண்டுமெனில் அந்த அளவிற்கு ரயில் பெட்டிகள் தருவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை, இருக்கும் ரயில்களை இங்கும் அங்கும் மாற்றி ஓடவிட்டு தனது பெயரை, புகழை வளர்த்துக்கொள்ள அமைச்சர் முயற்சித்ததன் விளைவுதான் ரயில் இயக்கத்தில் ஏற்பட்ட இந்த தடுமாற்றங்கள் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
போதுமான ரேக்ஸ் (பயணப் பெட்டிகள்) தருவிக்காததே இந்த சிக்கலிற்குக் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகும். அதை அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, பயணப் பெட்டிகளை தருவிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று கூறியிருந்தால் அவரை பொறுப்புள்ளவராக பயணிகள் மதித்திருப்பார்கள்.
ஊடகங்களில் பொய்யுரை பரப்புவதால் உண்மை உறங்கப் போய்விடாது. அமைச்சர் அதனை உணர வேண்டும். செங்கல்பட்டில் இருந்தும், அதற்கு அப்பாலிருந்தும் புதிதாக மின் தொடர் வண்டிகளை இயக்கட்டும், அதற்கு முன்னர் தேவையான அளவிற்கு பெட்டிகளை தருவித்துக் கொண்டு செய்யட்டும். அவ்வாறு செய்யாமல் ஊருக்கு ஊர் சென்று புதிதாக ரயில் சேவை விடுகிறேன் என்று கூறிவிட்டு அதனை ரயில்வே நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த நிர்பந்திப்பது ரயில்வே இயக்கத்தையே முடக்கிவிடும்.
தனது பொறுப்பறிந்து அமைச்சர் வேலு செயல்பட வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளுக்காக ஒவ்வொரு நாளும் குரல் கொடுக்கும், அறிக்கை வெளியிடும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மறியிலில் ஈடுபடும் பயணிகளின் பிரச்சனைதான் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்து தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கு ஆலோசனை கூறவேண்டும்.