புறநகர் ரயில்களின் நேர அட்டவணையை தென்னக ரயில்வே தான்தோன்றித்தனமாக மாற்றியமைத்ததனால் கோபமுற்ற பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேற்று இரவு மூன்றரை மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணிக்குச் சென்றுக் கொண்டிருந்த விரைவு மின் வண்டியை ரத்து செய்தததும், திருவள்ளூர் செல்லும் மின் ரயில் நேரத்தை மாற்றியதும், மேல் மருவத்தூரில் இருந்து அரக்கோணம் செல்லும் மின் ரயிலை திருத்தணி வரை நீட்டித்தது மட்டுமின்றி, நேரத்தை மாற்றியமைத்ததும் பயணிகளிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.
குறிப்பிட்ட நேரத்தில் வரும் ரயில் சேவையை சார்ந்தே தங்களுடைய அன்றாட பணியை திட்டமிட்டு வாழ்ந்துவரும் ரயில் பயணிகளுக்கு, தென்னக ரயில்வே இவ்வாறு முக்கியமான ஒரு ரயில் சேவையை நிறுத்தியதும், பல சேவைகளின் நேரத்தை மாற்றியதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து ஏற்கனவே புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பலமுறை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. பழையபடி நேர அட்டவணை மாற்றியமைக்கப்படும் என்று மறியல் செய்த பயணிகளிடம் தென்னக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் உறுதியளித்தவாறு எதையும் செய்யவில்லை.
ரயில்வே மேற்கொண்ட அட்டவணை மாற்றத்தாலும், அரக்கோணம் வரை செல்ல வேண்டிய ரயிலை திருத்தணி வரை நீட்டித்ததாலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ஏற்கனவே அந்த நேரத்தில் சென்றுக் கொண்டிருந்த பயணிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவே நேற்று நடந்த ரயில் மறியலாகும்.
இந்த மறியலால் மூன்றரை மணி நேரம் புறநகர் ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய நீண்ட தூர ரயில்களின் போக்குவரத்தும் 3 முதல் 4 மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்டது. மறியல் செய்த பயணிகளிடம் பேச தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளில் ஒருவர் கூட 10.30 மணி வரை வரவில்லை. ரயில்வே காவல் துறையினர் தடியடி நடத்தும் அளவிற்கு பிரச்சனையானது.
இவ்வளவிற்கும் காரணம், தென்னக ரயில்வேயின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையே என்று பயணிகள் மட்டுமல்ல, தென்னக ரயில்வே வட்டாரங்களும் கூறுகின்றன.
புதிதாக ஒரு ரயிலை அறிமுகப்படுத்துவதற்காக, ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரயில் சேவையை நிறுத்துவது எப்படி சரியான நடவடிக்கையாகும் என்று பயணிகள் கேள்வி எழுப்புவதில் நியாயம் உள்ளது. பயணிகளுக்காகத்தான் ரயில் சேவையே தவிர, தென்னக ரயில்வேயின் வசதிக்காக அல்ல.
புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அதற்குத் தேவையான அளவிற்கு பயணிகள் பெட்டிகளை தருவித்துக் கொள்ளாமலேயே சேவை துவக்கப்பட்டதே இந்த குழப்படிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் அளவிற்கு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவில்லை என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர்களின் இடங்கள் நிரப்பப்படுவதில்லை. இருக்கும் ஊழியர்களை வைத்துக் கொண்டே சேவைகளை அதிகரிக்க முயற்சிப்பதும் இந்த குளறுபடிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
தென்னக ரயில்வே என்பது மிகப் பெரிய ஒரு நிர்வாகமாகும். சென்னையைப் போன்ற ஒரு மாநகரை ஒட்டியுள்ள பல லட்சக் கணக்கான மக்கள் வாழும் புறநகர்ப் பகுதிகளுக்கு ரயில்களை இயக்குவதில் மிகுந்த கவனம் செலுத்தி அவர்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு நேர அட்டவணைகளை உருவாக்க வேண்டும்.
சென்னை மாநகருக்கு ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களுடைய தேவைகளையும், பணிக்குச் செல்லும் நேரங்களை கருத்தில் கொண்டும் ரயில் சேவையை குறித்த நேரத்தில் நடத்திட வேண்டும். இதை தென்னக ரயில்வே நிர்வாகம் இதற்குப் பிறகாவது முறையாகச் செய்திட வேண்டும்.
இது அதிகாரிகளின் குளறுபடி என்று கூறி ரயில்வே அமைச்சகம் அமைதி காக்கக்கூடாது. பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ரயில் சேவையை செம்மைப்படுத்த வேண்டும்.