உதவியா? உயிர் பறிப்பா? ஏன் இந்த அவலம்!

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (15:32 IST)
சென்னையில் மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக படும் அல்லல்களை அரசு நிர்வாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாகும்!

வெள்ளத்தால் வீடிழந்து வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.2,000 ரொக்கமும், 10 கிலோ அரிசியும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் அரங்கேறிவரும் இந்த நிவாரண உதவி அவலங்களின் சிகரமாக எம்.ஜி.ஆர். நகர் துயரச் சம்பவம் உள்ளது.

சென்னை நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை? பாதிப்பிற்கு உள்ளான குடும்பங்கள் எத்தனை என்று முறையாக கணக்கிட்டு வாக்காளர் பட்டியலில் ஆள் சேர்க்கும் போது செய்யும் கணக்கெடுப்பு போல, வெள்ளம் ஓய்ந்து அவர்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்கு திரும்பிய பின்னர் முறையாக கணக்கெடுத்து அவர்களுடைய வீடுகளுக்கே சென்று நிவாரண உதவியைப் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தால் இந்த துயரம் நடத்திருக்காது.

நிர்வாகத்தின் வசதிக்காக மக்களையெல்லாம் ஆங்காங்கு நிவாரண மையங்கள் என்ற பெயரில் பள்ளிகளுக்கும், மற்ற இடங்களுக்கும் வரவழைத்து அலைக்கழிக்கச் செய்து நடைபெறும் கூத்துக்கள் பார்ப்பதற்கு மிக மிகக் கேவலமாக இருந்தது. பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அம்மக்கள் படும் இன்னல்கள் கடந்த ஒரு மாத காலமாக காட்டப்பட்டும் கூட நிர்வாகம் இப்படிப்பட்ட அவலங்களைத் தவிர்ப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நிவாரண உதவி உரியவர்களுக்கெல்லாம் போய்ச் சேருகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி என்றாலும், அந்த உதவியை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்கும் முறைகள் மிக மிகக் கேலிக் கூத்தானவை.

இரவில் இருந்தே மக்கள் நிவாரண மையங்கள் முன்பு கூடுவதும், மழையைப் பொறுத்துக்கொண்டு தூக்கத்தை மறந்து 2,000 ரூபாய்க்காகவும், 10 கிலோ அரிசிக்காகவும் காத்து நிற்பதும் ஏதோ அகதிகளாக வந்தவர்கள் அடிப்படைத் தேவைகளுக்காக காத்து நிற்பது போல் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நமது நாட்டு மக்கள். இந்த அரசை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள். ஆனால், அவர்களை மாவட்ட நிர்வாகங்கள் நடத்தும் விதம் சகிக்க முடியாதது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்ட போது அதனைப் பெறுவதற்காக வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள் வட சென்னை கல்லூரி ஒன்றின் முன் காத்து நின்றபோது, கல்லூரிக் கதவுகள் திறக்கப்பட்டவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிந்தனர்.

இன்று அதிகாலையும் இதேபோல்தான் எம்.ஜி.ஆர். நகரில் நடந்துள்ளது. 25 பெண்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தது கொடுமையானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, நமது நாட்டிற்கே அவமானத்தை சேர்க்கும் சம்பவம் இது.

இப்போதும் சென்னையில் பல இடங்களில் இந்த நிவாரண உதவியை எதிர்நோக்கி பல்லாயிரக்கணக்கான குடிசை வாழ் மக்கள் காத்து நிற்கின்றனர். இதற்குப் பிறகாவது மாவட்ட நிர்வாகம் முறையாக அவர்களுக்கு நிவாரண உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண உதவிகளையே முறையாக வழங்கத் தெரியாத இந்த மாவட்ட நிர்வாகங்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய மறுவாழ்வுப் பணிகளை எப்படி சீராக செய்யப் போகிறது அரசு?

வெப்துனியாவைப் படிக்கவும்