6 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் கருகியது! ரூ. 300 கோடி இழப்பு!!

கர்நாடகாவிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்தாண்டு மழையால் பாதிப்பு!

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த ஆண்டு நிலத்தடி நீரைக் கொண்டு 2.68 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. சம்பாவில் 7.85 லட்சம் ஏக்கரும், தாளடியில் 2.53 லட்சம் ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்த பலத்த மழை, வெள்ளத்தால் 7.5 லட்சம் ஏக்கர் பயிர் அழிவைச் சந்தித்தன. இதில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அரசு ரூ. 48.10 கோடி நிவாரணம் அறிவித்தது. இதிலும் ரூ. 41.40 கோடி தான் பட்டுவாடா செய்யப்பட்டது. இத்தொகை மொத்தம் 4.57 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டதாக அரசு அறிவித்தது.

நடப்பாண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் குறுவை பாதித்தது. இதில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பம்பு செட்டுகள், கிணற்று பாசனம் மூலம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் நீரின்றி கடைமடை பகுதிகளில் பயிர்கள் கருகி விட்டன. இது மொத்த சாகுபடியில் 60 சதவீதமாகும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்துவிடப்படும் மேட்டூர் அணை, போதிய நீர் இருப்பு இல்லாததால் நடப்பாண்டு மேட்டூர் அணை வரலாற்றிலேயே முதன் முறையாக காலம் கடந்து செப்டம்பர் 6-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். ஆனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தியதால் எதிர்பார்த்தபடி நீர்வரத்து கிடைக்கவில்லை. மேலும் இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவான 874.8 மி.மீ., மழைதான் பதிவாகியது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்களில் கடைமடை பகுதி முழுவதும் காய்ந்து கருகி விட்டன. துவக்கத்தில் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அங்கு பாதி, இங்கு பாதி என தலைப்பு பாசன பகுதிகளுக்கே சென்றுவிட்டது. இதனால் தலைப்பு பகுதி பாசன பகுதிகள் வறட்சிகளிலிருந்து தப்பின.

ஆனால் தற்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. வழக்கமாக காவிரி, வெண்ணாற்றில் 12 முறை முறைப்பாசனம் அமல்படுத்தப்படும். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் அணை திறக்கப்பட்டதிலிருந்து 4 முறைதான் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டது. இதிலும் முழுமையாக தண்ணீர் திறந்து விடப்படாமல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர், 6 ஆயிரம் கன அடி தண்ணீர் என திறந்துவிடப்பட்டது. இதனால் குடிநீர், நில உறிஞ்சும் தன்மை போக மீதமுள்ள நீர் அதிகபட்சமாக தலைப்புப் பகுதியிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது.

தற்போதுள்ள நிலைமையை சமாளிக்க இன்னும் 5 டி.எம்.சி. தண்ணீர் தேவை. ஆனால் அணையில் தற்போது 8.73 டி.எம்.சி. அதாவது 31.35 அடி தண்ணீர் உள்ளது. மேலும் கர்நாடகாவிலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து போதிய நீர் இல்லாமை மற்றும் மழை போன்ற காரணங்களால் அணை 5 முறை மூடப்பட்டது. தற்போது மூடப்பட்டுள்ள அணை வரும் 25-ந் தேதி திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலம் கடந்ததால் பயன் இல்லை!

இவ்வாறு அணை திறக்கப்பட்டால் வரும் 28-ம் தேதி தான் கல்லணைக்கு தண்ணீர் வரும். அந்த தண்ணீர் கடைமடையை சேர மேலும் 4 நாட்கள் ஆகும். தற்போதே கடைமடை பகுதியில் பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. தலைப்பு பகுதிகள் காயத் தொடங்கிவிட்ட நிலையில் இவ்வாறு மிகவும் காலதாமதமாக திறந்துவிடப்படும் நீரால் பயிர்களை காப்பாற்ற இயலாது.

இருப்பினும் பம்புசெட், கிணற்று பாசனம் மூலமும், ஆற்று ஓரங்களில் ஏரி ஓரங்களில் தேங்கி நிற்கும் நீரை இறைத்தும் சுமார் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

இதில் மயிலாடுதுறை, நாகை, மன்னார்குடி, கீழ்வேரூர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அறுவடையும் துவங்கிவிட்டது. எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் உடனடியாக தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தொடர்ந்து 10 நாட்கள் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால்தான் கருகி வரும் பயிர்களில் 20 அல்லது 30 சதவிகித பயிர்களையாவது காப்பாற்ற இயலும். இதற்கு கர்நாடகாவிலிருந்து உடனடியாக தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் தற்போதைய கோரிக்கை.


6 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் கருகியது! ரூ. 300 கோடி இழப்பு!!

தற்போது காய்ந்து வரும் 6 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களாலும், குறுவை முற்றிலும் சாகுபடி செய்யப்படாததாலும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பில் நஷ்டம் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் அமல்படுத்தாததால் தீர்ப்பை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதற்கு 7 ஆண்டு காலம் பிடித்தது. ஆனால் இதில் ஒரு ஆண்டு கூட கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்றுத் தர காவிரி ஆணையம் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்தும் அரசியல் கட்சிகள் அரசியல் லாப கணக்கு அடிப்படையில் காவிரி பிரச்சனையை அணுகுவதால் காவிரி வறண்டது. இதை புரிந்து கொள்ளாமல் காவிரியை நம்பிய உழவர்கள் வாழ்வு இப்போது தீய்ந்துவிட்டது.

விவசாயிகள் பட்டினி சாவு!

ஒருவர் இறந்ததை பெரிய பிரச்சனையாக தூண்டிவிட்டு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்தது. ஆனால் திருபுவனத்தில் வீரையன், நாகை மாவட்டம் கீழையூர், வாழக்கரையைச் சேர்ந்த பத்மாவதி, என வரிசையாக வறட்சி காரணமாக ஏராளமானவர்கள் இறந்து வருகின்றனர். இதனை மாநில அரசு மூடி மறைக்கிறது.

உணவுக்கு பதில் அரிசி!

எனவே மாநில ஆட்சியாளர்கள் அனைத்து கட்சியினர் தங்களது அரசியல் சார்புகளை மறந்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் பின்னால் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டும் காவிரி உரிமையை நிலை நிறுத்த வேண்டும். கடன் முழுவதையும் அரசு ரத்து செய்ய வேண்டும். மற்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டுடன் காவிரி டெல்டா மாவட்டங்களின் இழப்பீட்டை ஒப்பிடக் கூடாது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் நகை கடன்களில் நகைளை ஏலம் விடுவதை அரசு நிறுத்திவைக்க வேண்டும். மதிய உணவுக்காக ஒருவருக்கு 200 கிராம் வீதம் வழங்கப்படும் அரிசியை உணவாக இல்லாமல் அரிசியாகவே கொடுக்க வேண்டும். முடிவு எடுத்துவிட்டோம் என்பதற்காக தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள்தான் என விதண்டாவாதம் பேசக்கூடாது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தற்பொழுது இந்திய உணவுக் கழக முறையில் நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதில் தெளிவான வரை முறைகள் இல்லை. எனவே அரசு குறைந்தபட்ச விலையை அறிவிக்க வேண்டும்.

உயர்மட்டக் குழு வேண்டும்!

காவிரி டெல்டாவில் பொருளாதார சீரழிவு காரணமாக வறுமையில் வாடும் விவசாயிகளைக் காப்பாற்ற டெல்டா மாவட்ட விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும். இதில் ஐ.ஏ.எஸ்., ஓய்வு பெற்ற நீதிபதி, வேளாண் பொருளாதார நிபுணர்கள் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய இக்குழுவின் ஆலோசனை கருத்துக்கள் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்