வைகை நதியை சீரமைத்து அது வரும் வழிகளை செம்மைப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
மதுரை நகருக்குள் வைகை ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள் கான்கிரீட் கட்டிடங்கள் எழுந்தன. இந்த கட்டிடங்கள் வாடகைக்கும் விடப்பட்டன. இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட வைகை நதி அழகு இழந்தது மட்டுமின்றி, நீர் ஆதாரமும் கெட்டது. இதனை கருத்தில் கொண்டு வைகை நதி சீரமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.
வைகை நதி மதுரை நகருக்குள் பாயும் இடங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் சில மாதங்களுக்கு முன் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான கான்கிரீட் கட்டிடங்கள் இடித்து தடைமட்டமாக்கப்பட்டன. எவருக்கும் எந்த காரணம் கொண்டும் இரக்கம் காட்டப்படவில்லை. மதுரை நகரின் கிழக்கு பகுதியான செல்லூர், வைகை வடகரை ஒட்டிய பகுதிகள் ஆழ்வார்புரம் போன்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அதன் பின் வைகை கரையோரம் செம்மண் மூலம் சுவர்கள் எழுப்பினர். அதை சாலையாக மாற்றவும் செய்தனர். நகருக்குள் 10 மைல் தூரத்திற்கு ரோடுகள் எழுப்பியதால் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்புகள் ஒழிந்தது. இது மத்திய அரசின் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அரசும் மதுரையை புராதான நகரம் என்று பாதுகாக்க நிதியும் ஒதுக்கியது.
தற்போது மதுரை வைகை ஆற்று சுவர்புறங்களில் கருங்கற்கள் பதிக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி வைகையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சென்ற சில மாதங்களுக்கு முன் தொடங்கவேண்டிய பணியை தற்போது தாமதமாக தொடங்கினாலும் வெகு வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. கருங்கற்கள் மிக வலுவானதாக பதிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு அடிக்கு ஒரு அடி கன அளவுள்ள கற்கள் பதிக்கப்படுகின்றன. இதுபோன்ற கன அடி கற்கள் அணைப்பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆனால் மதுரை வைகை கரைகளில் பதிப்பதன் நோக்கம். . . சில ஆண்டுகளுக்கு முன் 1994-ல் வெள்ளம் மதுரைக்குள் நுழைந்தபோது மதுரையின் வட பகுதி முழுவதும் நீர் நுழைந்து மதுரையின் ஒரு பகுதியை முழுவதுமாக முழ்கடித்தது. அதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தற்போது கற்கள் பதிக்கப்படுகின்றன. தொடக்கமாக 800 மீட்டர் தூரத்திற்கு கற்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
பின்னர் மற்ற இடங்களிலும் கற்கள் பதிக்கும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவத்தனர்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. வைகை நதியில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரங்கள் கெடுகின்றன. இப்படி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை நதியில் பல கோடி மதிப்புள்ள மணல் அள்ளப்பட்டதால் அக்டோபரில் வைகையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் ராமநாதபுரம் பாசனத்திற்கு சென்றடையாமலேயே மண்ணிற்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிவிட்டது.
இப்போதும் வைகையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் ராமநாதபுரம் பாசனத்திற்கு சென்றடையாமலேயே வைகையின் குழிகளில் தேங்கிவிட்டது. தற்போது இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாவண்ணம் இருக்க வைகை ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பதோடு மணல் அள்ளும் லாரியும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது :
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீர் திட்டம், நீh ஆதார அமைப்புகளை கருத்தில் கொண்டு ஆற்றுக்குள் மணல் குவாரிகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கோச்சடை, கருமாத்தூர், கவரிமான் ஆகிய இடங்களில் ஆற்றுப் படுகையில் மணல் குவாரி அமைத்து மணல் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி குவாரி அமைக்க உதவிய பட்டா உரிமையாளர்கள் 35 பேருக்கு 4 கோடியே 35 லட்சம் அபாராம் விதிக்கப்பட்டது. இதேபோல வாடிப்பட்டி, சோழவந்தான், தென்கரை ஆகிய பகுதிகளில் மணல் குவாரி ஏற்படுத்தி மணல் திருடிய 34 நில உரிமையாளர்களுக்கு 53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மணல் குவாரி அமைப்பவர்களை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மணல் கடத்த பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சில தினங்களுக்கு முன் 227 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு லாரி மூலம் மணல் கடத்தியவர்களுக்கு 45 லட்சத்து 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் சேது. ராமசந்திரன் கூறினார்.
தற்போது நவீனமாக வைகை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அமைந்துள்ள கிணறுகளிலிருந்து வியாபார நோக்கில் தண்ணீர் கடத்தப்படுகிறது. இதனால் வைகை பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மிக மிக குறைந்து கொண்டே செல்கிறது. அரசு விதித்திருக்கும் தடையை மீறி கள்ளத்தனமாக விவசாய நீர் வியாபார நோக்கிற்காக கிணற்று நீர் பம்ப் மூலம் உறிஞ்சப்பட்டு தங்கும் விடுதிகள், உணவகங்கள், மண்டபங்கள் மற்றும் மினரல் வாட்டர்களுக்காக கடத்தப்படுகின்றன.
மதுரை அருகேயுள்ள உத்தரங்குடியில் நள்ளிரவில் கிணற்று நீர் பம்ம் மூலம் உறிஞ்சப்பட்டு கடத்தப்பட்டபோது ஊர் பொதுமக்களே லாரியையும், ஓட்டுநரையும் மடக்கி ஒத்தக்கடை காவல் நிலையத்தல் கடந்த 27 ஆம் தேதி ஒப்படைத்தனர். ஆகவே வைகையாற்று கரையோரம் உள்ள கிணறுகளில் நீர் கடத்தும் கும்பல்களை அரசு தக்க நடவடிக்கை மூலம் நீர் திருட்டு நடக்காமல் காக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர், மணல் திருட்டு ஆகியவற்றின் மூலம் சுலபமாக கொள்ளை கும்பல்கள் பெரும் பணம் சம்பாதிப்பதை அரசு உடனே கடும் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தினால்தான் நீர் ஆதாரங்கள் காக்கப்படும். இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.
வைகை நதியைப் போல பிற நதிகளையும் அரசு காக்க தக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.