காவிரி டெல்டாவில் கேள்விக்குறியான வேளாண் சாகுபடி!

கடந்த 7 ஆண்டுகளில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பொருளாதார இழப்பு!
காவிரி டெல்டா பகுதியிலிருந்து எமது சிறப்புச் செய்தியாளர்

உரிய காலத்தில் மேட்டூரில் இருந்த தண்ணீர் திறந்து விடாததால் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காத காரணத்தால் - காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. சம்பா சாகுபடி செய்து நட்டத்திற்கு உள்ளாகி இருக்கும் டெல்டா விவசாயிகள் மத்திய மாநில அரசுகள் தரப்போகும் நிவாரண தொகையை மட்டுமே முற்றிலுமாக நம்பியிருக்கின்றனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 12 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தாளடி மற்றும் சம்பா சாகுபடி செய்யப்படும் 12 லட்சம் ஏக்கரில் இந்த ஆண்டு 8 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுமொத்த சாகுபடி வசதியுள்ள 1ஙூ லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விவசாயிகள் முழுமையாக அறுவடை செய்ய உள்ளனர். மீதமுள்ள நிலப்பரப்புகளில் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெற்பயிர்கள் கருகி, காய்ந்தும் பதராகி பல இடங்களில் முற்றிலும் அழிந்து போய் உள்ளன.

இந்த ஆண்டு ஒரு ஹெக்டேர் சாகுபடி செய்ய விவசாயிகள் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இந்நிலையில் 7 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

பயிறு வகை சாகுபடியும் பாதிப்ப

நடப்பாண்டில் காலம் கடந்து சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் சரியான பருவத்தில் உளுந்து, பயறு போன்ற தானியங்களை விதைக்க முடியவில்லை. பம்பு செட் பாசன பகுதிகளில் விதைக்கப்பட்டிருந்த உளுந்து பயிர்களும் பொங்கல் சமயத்தில் பெய்த மழையால் சேதமடைந்தன. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு கணிசமான லாபத்தைத் தரும் உளுந்து பயறு சாகுபடி இந்த ஆண்டு பெரும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிப்புக்குள்ளான காரணத்தினால் கால்நடைகளின் முக்கிய உணவான வைக்கோலின் விலையும் தற்போது சரசரவென உயரத் துவங்கியுள்ளது. தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.100க்கு விற்கப்படுகிறது. வரும் காலத்தில் இது மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது. மேலும் விவசாயிகளிடம் உள்ள கால்நடைகளுக்கு தேவையான அளவு வைக்கோலும் நம்மிடம் கிடையாது.

எனவே இந்த ஆண்டு வைக்கோலுக்காக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் கையேந்தும் நிலையிலேயே டெல்டா விவசாயிகள் உள்ளனர். அதுபோல கோடை காலங்களில் கால்நடைகள் குளிப்பாட்டுவதற்கும் குடிப்பதற்கும் கூட குளம் குட்டைகளில் தற்போது தண்ணீர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

15 விவசாயிகள் சாவு! ரூ.3,000 கோடி நட்டம்!

காவிரி டெல்டா விவசாயிகள் தங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் விவசாயத்தில் முதலீடு செய்ததோடு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கியும் அதுபோதாமல் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெற்று சாகுபடி செய்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். போட்ட முதலை எடுக்க முடியவில்லையே, எதிர்காலத்தில் என்ன செய்வது என்ற வேதனையால் மற்றும் அதிர்ச்சியினால் மாரடைப்பு போன்றவைகளால் விவசாயிகள் 15 பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்த வேதனைச்சாவுகளை எவரும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் வறட்சி பகுதிகளை பார்வையிட்டு வரும் மத்திய குழுவினரிடம் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு வறட்சி பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரின் சுற்றுப்பயணம் பெயரளவிற்கு இல்லாமல் பயனுடையதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழு நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்பதே.

சென்ற ஆண்டு வந்த குழுவினரிடம் மாநில அரசு கேட்ட தொகையை அவர்கள் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவில்லை. மாநில அரசு கேட்ட தொகையில் 10 சதவிகிதத்தையே பரிந்துரை செய்தனர். அப்படி இல்லாமல் தற்போது விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்க இந்த குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியில் 3 ஆயிரம் கோடிவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை முழுமையாக ஈடு செய்யும் அளவிற்கு நிவாரணம் வழங்க இந்த குழுவினர் பரிந்துரை செய்யவேண்டும்.


நடப்பாண்டில் காரிப் (குறுவை) பருவத்தில் விவசாயிகள் வாங்கிய வங்கி கடனுக்காக வட்டி தள்ளுபடி செய்யப்படுமென நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்துள்ளார். காவிரி டெல்டாவை பொறுத்தவரையில் விவசாயிகள் காரிப் பருவத்தில் வங்கி கடன் அதிகமாக பெறவில்லை. சம்பா பருவத்தில் தான் அதிகமாக கடன் பெற்றுள்ளனர். எனவே சம்பா மற்றும் குறுவை பருவங்களில் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய குழுவினர் பரிந்துரை செய்யவேண்டும்.

ரூ.6 ஆயிரம் கேடிக்கு பொருளாதார இழப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தவிர மீதியுள்ள 7 ஆண்டுகளில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகளுகு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று மாவட்டங்களையும் இயற்கை சீற்றத்தால் தொடர் பாதிப்படைந்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் அனைத்து கடன்களையும் மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும். அதற்கு மத்திய குழுவினர் பரிந்துரை செய்யவேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலாதாரமான காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டு 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த குழுவினர் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் கருத்த

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும். நில வரியை ரத்து செய்து அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்யவேண்டும். விவசாயிகளுக்கு வருவாய் அடிப்படையில் நிலத்தை அடமானம் வைத்து பெற்ற கடன்களுக்குரிய வட்டி, அபராத வட்டி முழுவதையும் ரத்து செய்வதோடு கடன் தவணை தொகை செலுத்தலை ஓராண்டுக்கு ஒத்தி வைக்கவேண்டும். குத்தகை பாக்கி அனைத்தையும் ரத்து செய்திட வேண்டும். நில வெளியேற்றத்தை உடன் நிறுத்தி வருவாய் நீதிமன்றங்களில் நடவடிக்கை தடை செய்திட வேண்டும்.

வறட்சி நிவாரண உதவிகள் ஆளும் கட்சியினரின் தலையீடு இன்றி பயனாளிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் கிடைத்திட உறுதி அளிக்கவேண்டும். வேலையில்லாமல் பட்டினி சாவை நோக்கியுள்ள விவசாய தொழிலாளர்கள் 13 லட்சம் பேருக்கும் உரிய உதவிகளை உடன் செய்திட வேண்டும். விவசாய தொழிலாளர்கள் குடும்பம் ஒன்றிற்கு மாதம் ரூ.500ம் 25 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கவேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள அனைவருக்கும் இலவச வேஷ்டி சேலை வழங்கிட வேண்டும். சலுகை மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பம் கொடுத்துள்ள அனைவருக்கும் மின் இணைப்பு உடன் கொடுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக உளுந்து, பயறு, கடலை, பருத்தி விதைகள் உடன் வழங்கிடவேண்டும்.

வறட்சி நிவாரணப் பணிகள் தூர் வாரும் பணிகள் அனைத்திற்கும் பயனாளிகள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்த கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும். வறட்சிப்பணிகள் ஆளும் கட்சியினரின் ஒப்பந்த பணிகளாக மாறவிடக்கூடாது.

நிபந்தனையின்றி விவசாய கடன்கள், பயிர் கடன்கள், டிராக்டர் ஆயில் என்ஜின், வண்டி, வண்டி மாடு, மின் மோட்டார், ஆழ் குழாய் கிணறு ஆகியவற்றிற்கான கடன் உடன் வழங்கிட வேண்டும். காவிரி நீர் பிரச்சினைக்கு காலம் கடத்தாமல் உடனடி முடிவு எடுத்திட வேண்டும்.

வறட்சி நிலையில் இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் மாடு ஒன்றிற்கு ரூ.3 ஆயிரமும், ஆடு ஒன்றிற்கு ரூ.1000மும் வழங்கிட வேண்டும். வறட்சி நிலையில் பட்டு போன தென்னை மரம் ஒன்றிற்கு தலா ரூ.1000 வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

நீரின்றி கருகிய பயிர்களை நிலை குலைந்து போயுள்ள விவசாயிகளின் துயர் துடைக்க நிதி தந்து உதவிடுமா மத்திய அரசு?

வெப்துனியாவைப் படிக்கவும்