ஆட்சி மாறியும் தடைபட்டு இருக்கும் ரயில் திட்டம்

Webdunia

வியாழன், 21 ஜூன் 2007 (14:27 IST)
தமிழகத்தில் ஆட்சி மாறிபின்னும் சாம்ராஜ்நகர் முதல் சத்தியமங்கலம் வரை தொடங்கப்பட்ட ரயில்வே திட்டம் கிடப்பில் இருப்பது இப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாம்ராஜ்நகர் முதல் சத்தியமங்கலம் வரை ரயில்வே திட்டம் கொண்டவருவதுதான் தன் முதல்கட்ட பணி என்று கூறினார்.

இதை மக்கள் நம்பும் வண்ணம் பண்ணாரியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை வரவழைத்து ரயில் திட்ட ஆய்வு பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதை பார்த்த இப்பகுதி மக்கள் சத்தியமங்கலத்திற்கு ரயில் வந்துவிட்டதாகவே நினைத்தனர். ஆனால் இந்த ஆய்வு பணி தமிழக வனப்பகுதியில் மட்டும் தடைபட்டது.
இதற்கு மத்திய இணஅமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அப்போது கூறிய காரணம் தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்பதற்காக வனப்பகுதியில் ஆய்வு செய்ய அனுமதி மறுக்கின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்

தமிழக வனத்துறையினர் அனுமதி கொடுத்துவிட்டால் ஓரிரு ஆண்டுகளில் ரயில் வந்துவிடும் என்றார். ஜெயலலிதாவின் திட்டமிட்ட சதி என குற்றம் சொன்னதை மறுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என மத்திய இணை அமைச்சர் சவால் விட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி வந்ததும் சாம்ராஜ்நகர் - சத்தியமங்கலம் ரயில்வே திட்டம் மீண்டும் சூடுபிடிக்கும் என இப்பகுதி மக்கள் நம்பினார்கள். இதற்கு முக்கிய காரணம் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன், இந்த திட்டம் தடைபட்டதிற்கு முழு காரணம் ஜெயலலிதா என கூறியதே ஆகும்.

ஆனால் தற்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடங்கி ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் ரயில்வே திட்டம் கிணற்றில் போட்ட கல்லாய் இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு ரயில்வே திட்டம் நிறைவேறுமா என்பதில் நம்பிக்கை போய்விட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அமைத்த ஆய்வு குழுவினர் இந்த வனப்பகுதிக்கு வந்து முழு ஆய்வு செய்து சென்றுள்ளனர். இவர்களின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இத்திட்டம் குறித்து தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது:

கேள்வி: சாம்ராஜ்நகர் - சத்தியமங்கலம் ரயில் திட்டம் தடை குறித்து தங்கள் கருத்து என்ன ?

பதில்: சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் எங்களுக்கு ரயில் வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இப்பகுதிக்கு சம்பந்தம் இல்லாத சிலர் இந்த ரயில் திட்டம் நிறைவேற கூடாது என்று நீதிமன்றம் சென்றுள்ளனர்.

கேள்வி: வனப்பகுதிக்குள் ரயில் பாதை சென்றால் வனவிலங்குகளுக்கு ஆபத்து என்று வன ஆர்வாளர்கள் கூறுகிறார்களே ?

பதில்: ஏற்கனவே இந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை 209 சென்று கொண்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக செல்லும் இந்த பாதையினால் வனவிலங்குகளுக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதுதவிர இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதைகாட்டிலும் அடர்ந்த வனப்பகுதியில் ரயில்பாதை உள்ளது. இதில் ரயில்களும் செல்கிறது.

கேள்வி: இதில் அரசியல் பிண்ணனி உள்ளதா?

பதில்: கட்டாயம் உள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்படுத்திய பிரச்சனையை தற்போது தீர்த்து வருகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் நீங்கள் மட்டுமே தி.மு.க.வை விமர்சித்து பேசுவதும் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வருவதாலும் தமிழக முதல்வரே இந்த திட்டத்தை முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறதே ?

பதில்: நிச்சயம் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றி தருவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்