பாலைவனமாக மாறுகிறது பவானிசாகர் அணை

Webdunia

வியாழன், 21 ஜூன் 2007 (14:29 IST)
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து விளையாட்டு மைதானமாய் காட்சியளிக்கிறது.

நீர் இன்றி அமையாது உலகு என்பது பழமொழி. போதிய நீர் இருந்தால் மட்டுமே மனிதனும் வாழ முடியும். இந்த மண்ணிலும் வளம் பெறமுடியும். ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் பஞ்சமின்றி கிடைக்கவும், எங்கு பார்த்தாலும் பசுமையின் தாக்கம் கண்களை குளிரவைப்பதற்கும் முக்கிய காரணம் பவானிசாகர் அணை.

வற்றாத ஜீவநதியாக ஓடும் பவானி ஆற்றை நம்பி ஆயிக்கணக்கான கிராமங்களும் லட்கணக்கான விளைநிலங்களும் இருந்து வருகின்றன. ஆனால் தற்போது பவானிசாகர் அணையின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.

அணையின் தண்ணீர் மட்டம் நாளொறு மேனி பொழுதொறு வண்ணமாய் குறைந்து வருவது ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 13 அடி தண்ணீர் தற்போது குறைவாக உள்ளதால் அணையின் நீர்தேக்கப்பகுதி வறண்டு விளையாட்டு மைதானமாய் காட்சியளிக்கிறது.

பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் 15 அடி சகதியை கழித்து மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நிரம்பி விவசாயிகளின் மனதை குளிர வைத்த இந்த அணையின் நீர்மட்டம் தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 74.49 அடியாக இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

வெப்துனியா
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அணையில் இருக்கும் மீன்கள் உயிர் வாழவும் இந்த அணையை நம்பி இருக்கும் ஆயிக்கணக்கான கிராம மக்கள் உயிர் வாழவும் தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விகுறியாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்