நாளை முதல் வாகன உதிரிபாகங்கள் கண்காட்சி!

புதன், 18 ஜூன் 2008 (17:37 IST)
சென்னையில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் மெஷின் டூல்களின் வர்த்தக தொழில் கண்காட்சி “அக்மி 2008” நாளை தொடங்குகிறது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் வர்த்தக தொழில் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நாளை முதல் 23 ஆ‌ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடைபெறும்.

இது குறித்து சங்கத்தின் தலைவர் திலிப் கும்பத் கூறுகையில், ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.முத்தையா கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இதில் சீனா, ஹாங்காங், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, தென் கொரியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாட்டு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 40 அயல் நாட்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 420 நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.

கடந்த முறை (2006) நடந்த கண்காட்சியை விட 42 விழுக்காடு அதிகமான பரப்ளவில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் சிறப்பம்சம் கண்காட்சியில் இடம் பெறும் 80 விழுக்காடு நிறுவனங்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவை சேர்ந்தவையாகும்.

இந்த வர்த்தக கண்காட்சி இந்த பிரிவு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெற வாய்ப்பாக அமையும்.

இதில் எல்லா விதமான மெஷின் டூல்ஸ், இயந்திரங்கள் இடம்பெறும் குறிப்பாக வாகன உதிரி பாகங்கள் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள், கருவிகள் இடம் பெறும்.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மெஷின் டூல்ஸ் நிறுவனங்களான குமின்ஸ் இந்தியா லிமிடெட், சிம்சன், மிட்சுபா சிகால், லூகஸ்-டி.வி.எஸ், டெல்பி-டி.வி.எஸ், கிரிவ்ஸ் காட்டன், ரானே (மெட்ராஸ்), பிரேக் இந்தியா, டெய்கோ ப்ளோ கண்ட்ரோல், சேமி டியூட்ஜ் சாகர் இந்தியா உட்பட பல நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

பாரத் பெரிட்ஜ் வெர்னர், ஏ.சி.இ, பால்டிபாய், மைக்ரோமெடிக்ஸ், அந்நிய நாடுகளைச் சேர்ந்த ஹர்கோ, கேடர்பில்லர், உட்பட பல நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

பல்வேறு தலைப்புகளில் 19 கருத்தரங்கு நடைபெறுகிறது.

இதில் சி.என்.சி லேத், மில்லிங், பென்டிங் இயந்திரங்கள் உட்பட பல வகையான இயந்திரங்களும், ரோபட் இயக்கத்தில் உள்ள நவீன இயந்திரங்களும் இடம் பெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 10 பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் திட்ட பணிக்காக வடிவமைத்தவைகள் கண்காட்சியில் இடம் பெறும். இதில் சிறந்த வடிவமைப்புக்கு பரிசு வழங்கப்படும் என்று கும்பத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்