புதிதாக அமையும் தொழிற்பேட்டைகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 16.2 விழுக்காடு, பழங்குடியினருக்கு 6.6 விழுக்காடு தொழிற் கூடங்கள் கட்ட மனை ஒதுக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநில தொழில் துறை அமைச்சர் ஜே.கீதா ரெட்டி ஹைதரபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் புதிதாக உருவாக்கும் தொழில் பேட்டைகளில், தொழிற் கூடங்களை தொடங்கும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு 16.2 விழுக்காடும், பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 6.6 விழுக்காடு மனைகள் ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகளில் காலி மனைகள் இருந்தால், அங்கும் தாழ்த்தப்ட்ட பிரிவு, பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள் தொழிற்கூடங்கள் தொடங்க மனை ஒதுக்கப்படும்.
இதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பிக்கும் முன்னரே இநத பிரிவை சேர்ந்த 45 பேருக்கு தொழிற் கூடங்கள் அமைக்க மனைகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான உத்தரவு பிறப்பிக்கபட்ட பின்னர் மேலும் 45 பேருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் ஜே.கீதா ரெட்டி, ஆந்திர மாநில நிதி உதவி கழகத்தின் பணிகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நிதி உதவி கழகம் கடந்த மூன்று மாதங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 77 பேருக்கு பல்வேறு அளவுகளில் தொழிற் கூடங்களை கட்டி தரும் திட்டங்களை பரீசீலித்து வருகிறது. இதன் மொத்த செலவு ரூ.96.68 கோடி.
இதில் தொழில் முனைவோர் சார்பில் வழங்கப்படும் ஆரம்பகட்ட முதலீடு ரூ.10.53 கோடி. மாநில அரசு சார்பில் மானியமாக ரூ.18.23 கோடி வழங்கப்படும்.
இந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு, மாநில அரசு பொறுப்பேற்றுக் கொள்ளச் சம்மதித்து உள்ளது.
சுய உதவி குழுக்குகளுக்கு வழங்குவது போல், இவர்களுக்கும் 3 விழுக்காடு என்ற அளவில் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வழங்குவது பற்றி மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மானிய வட்டியில் கடன் வழங்குவது பற்றி அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று கீதா ரெட்டி தெரிவித்தார்.