டாலர் மதிப்பு 5 பைசா அதிகரிப்பு!

செவ்வாய், 10 ஜூன் 2008 (16:07 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.42.92 / 42.93 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.87/42.88.

ரிசர்வ் வங்கி தலையிடும் என்ற எதிர்பார்ப்பில் அதிக அளவு ரூபாயின் மதிப்பு குறைவது தடுக்கப்பட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். நேற்று காலை டாலரின் மதிப்பு 24 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரூபாய் மதிப்பு குறைய காரணம்?

பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் வெளியேறும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. ரூபாயின் மதிப்பு ரூ.43 என்ற அளவுக்கும் குறைவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை விற்பனை செய்யும் என்பதால், ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறைவது தடுக்கப்பட்டது.

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் இந்த வருடம் 4.7 பில்லியன் டாலார் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 விழுக்காடு குறைந்துள்ளது.

(சென்ற வருடம் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டார்கள் 17.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தனர், இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு 12% உயர்ந்தது)

அந்நிய பங்குச் சந்தையின் வர்த்தகர்கள் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.43 என்ற அளவிற்கும் குறையாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு, பொதுத்துறை வங்கிகள் மூலம் டாலரை விற்பனை செய்கின்றது என்று கூறுகின்றனர். நேற்று 400 முதல் 500 மில்லியன் டாலர் வரை விற்பனை செய்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரிசர்வ் வங்கி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தேவையான டாலரை நேரடியாக விற்பனை செய்யும் என்று அறிவித்துள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.43க்கும் குறைவாக சரியாது என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்