இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

திங்கள், 2 ஜூன் 2008 (18:41 IST)
இந்தியாவின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 31.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இறக்குமதியும் 36.6 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இந்த நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் 14.40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (ரூ.57,633 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 31.5 விழுக்காடு அதிகம். சென்ற ஏப்ரலில் 10.95 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (ரூ.46,164 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. (1 பில்லியன்-100 கோடி)

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்ததது போல், இறக்குமதியும் உயர்ந்துள்ளது.

இந்த ஏப்ரல் மாதம் ரூ.24.28 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (ரூ.97,151 கோடி) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 36.6 விழுக்காடு அதிகம். சென்ற ஏப்ரலில் 17.77 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (ரூ.74,895 கோடி) இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் 8.02 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தைவிட 46.2 விழுக்காடு அதிகம். சென்ற ஏப்ரலில் 5.49 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் அல்லாத மற்ற பொருட்கள் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 32.3 விழுக்காடு அதிகம்.

இந்தியாவின் அந்நிய வர்த்தக பற்றாக்குறை 9.87 பில்லியன் டாலராக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஏப்ரல் மாதத்தில் 6.81 பில்லியன் டாலராக இருந்தது என வர்த்தக ஆய்வு மற்றும் புள்ளி விவர துறையின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பு, அதன் ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகரித்து இதனால் கிடைக்கும் உபரி வருவாய்தான் அந்நியச் செலவாணி கையிருப்பாக கணக்கிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்