பணவீக்கம் 7.82 விழுக்காடு!

வெள்ளி, 23 மே 2008 (15:41 IST)
பணவீக்க வீக்கத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், மே 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை.

மத்திய அரசு அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்ட புள்ளி விவரப்படி, மே 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.82 விழுக்காடாக உள்ளது. இது சென்ற வாரத்தை விட 0.01 விழுக்காடு மட்டுமே குறைவு.

சென்ற வாரத்தில் (மே 3 ந் தேதி) பணவீக்க விகிதம் கடந்த 44 மாதங்களாக இல்லாத அளவு 7.83 விழுக்காடாக அதிகரித்தது.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.62% ஆக இருந்தது.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்று தெரிவதால், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு பணவீக்கம் அதிகளவிலேயே இருக்கும். இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் சில பொருளாதார, நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி.ரெங்கராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதுள்ள நிலவரப்படி அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பணவீக்கம் அதிக அளவு இருக்கும். அதற்கு பிறகு 6 விழுக்காடு என்ற அளவிற்கு குறையும். இந்த நிதி ஆணடின் முடிவில் 5.5 விழுக்காடாக குறையும் என்று கூறினார்.

இன்று வெளியிடப்பட்ட பணவீக்கம அளவை கணக்கிடும் வாரத்தில் (மே 4-10 ) விமான பெட்ரோல் விலை 10% அதிகரித்து இருந்தது. இதே போல் மற்ற எரி பொருள், மின்சாரம், உராய்வு எண்ணெய் போன்றவைகளின் விலை 0.1% விழுக்காடு அதிகரித்து இருந்தது.

அதே நேரத்தில் பழங்கள், காய்கறிகள், தா‌னிய வகைகளின் விலை குறைய தொடங்கியது. சிமெண்ட், உருக்கு, இரும்பு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருந்தது. பழங்களின் விலை 0.4%, காய்கறி விலை 3.2%, தா‌னியங்களின் விலை 0.7 குறைந்து இருந்தது.

மத்திய அரசு அதிகார பூர்வமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வெளியிடும் பணவீக்கம் முன்மதிப்பீடே. இதன் சரியான பணவீக்க விகிதம், சில வாரங்களுக்கு பிறகு வெளியிடப்படும். உதாரணமாக மார்ச் 15 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் முன்மதிப்பீடு தகவலின் படி பணவீக்கம் 6.68 விழுக்காடாக இருந்ததாக அறிவித்தது. ஆனால் இறுதியான தகவலின் படி அந்த வாரத்தில் (மார்ச் 15) பணவீக்கம் 8.02 விழுக்காடாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்