குண்டூரில் மிளகாய் வர்த்தகம் துவக்க‌ம்!

சனி, 17 மே 2008 (17:44 IST)
ஆந்திராவில் உள்ள குண்டூர் மிளகாய் மொத்த வர்த்தக சந்தையில், திங்கட்கிழமை முதல் வியாபாரம் தொடங்க உள்ளது.

குண்டூரில் அமைந்துள்ள மிளகாய் மொத்த விற்பனை சந்தை, இந்தியாவிலேயே பெரியது. இங்கு உள்நாட்டு வியாபாரிகள் மட்டுமல்லாது, ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு மிளகாய் கொள்முதல் செய்கின்றனர். குண்டூரில் உள்ள விலை நிலவரத்தை பொறுத்தே, மற்ற இடங்களிலும் மிளகாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

குண்டூர் மிளகாய் சந்தையில் கடந்த 3 தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் எரிந்து நாசமாயின. சுமார் 2 லட்சம் மூ‌ட்டை மிளகாய் தீக்கிரையானது. இந்த தீ விபத்தால், பல வியாபாரிகள், மிளகாய் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்குள்ளாயினர்.

இங்கு மீண்டும் மிளகா‌ய் வர்த்தகம் நடக்க மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்காலிக கிடங்குகள், கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குண்டூர் மிளகாய் சந்தையை நிர்வகித்த விவசாய விளை பொருட்கள் சந்தை குழு, மாவட்ட நிர்வாகம், வியாபாரிகள் இணைந்து, மீண்டும் திங்கட்கிழமை முதல் மிளகாய் வர்ததகம் தொடங்குவது என முடிவு செய்தனர்.

இந்த சந்தை தீக்கிரையானதால், புதிய இடத்தில் சந்தை அமைக்க சத்தனபள்ளி, சிலாகல்யுரிபிடா உட்பட பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் பழைய இடமே எல்லா விதத்திலும் வசதியானது என்று முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் இது போக்குவரத்திற்கு வசதியாக இருக்கின்றது. அத்துடன் அருகில் குளிர்சாதன கிடங்கு, பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் ஆகிய வசதிகிள் உள்ளன.

விவசாய விளை பொருட்கள் சந்தை குழுவின் தலைவர் எல். அப்பி ரெட்டி கூறும் போது,.தற்காலிகமாக எல்லா வசதிகளும் செய்யப்படுகினறன. இந்த கோடை காலத்தில் பாதுகாப்பாக வியாபாரம் செய்ய எல்லா வசதிகளும் செய்யப்படுகின்றன. தீயணைப்பு கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. விவசாயிகள் எவ்வித அச்சமும் இன்றி, மிளகாயை விற்பனை செய்ய கொண்டுவரலாம் என்று கூறினார்.

குண்டூர் மாவட்ட ஆட்சியர் பி. வெங்கடேசன் கூறுகையில், வியாபாரம் சுமுகமாக நடக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீ விபத்தால் அழிந்த மிளகாய்க்கு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதை நிர்ணயிக்க, வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஆந்திர மாநில புகையிலை விவசாயிகள் சங்க தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் ஒய். சிவாஜி கூறுகையில், தீ விபத்து பற்றி விசாரணை முடித்து, இதன் காரணம் என்ன என்பதை அரசு அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க நீ‌ண்ட காலதாமதமாகிறது. விவசாயி விளைபொருட்கள் சந்தை நிர்வாக சட்டத்தில் உள்ள காலாவதியான பல விதிமுறைகளை மாற்ற வேண்டும். மாநில அரசு நிரந்தரமாக நவீன மிளகாய் மொத்த விற்பனை சந்தையை விரைவில் கட்ட வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்