இந்தியா- பூடான் பொருளாதார ஒத்துழைப்பு ரூ.10 ஆயிரம் கோடி - பிரதமர்!

சனி, 17 மே 2008 (14:21 IST)
பூடானுடன் தொலை தொடர்பு, உள்கட்டுமானம், கல்வி ஆகிய துறைகளில் திட்டமிட்டுள்ள திட்டங்கள் நிறைவேறும் போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ரூ.10 ஆயிரம் கோடியை எட்டும் என்று பூடான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த பூடானில், கடந்த மார்ச் மாதம்தான் முதல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பூடானுக்கு வருகை தரும் முதல் அயல்நாட்டு தலைவர் பிரதமர் மன்மோகன் சிங்தான்.

பூடான் நாடாளுமன்றத்தில் இன்று அவ‌ர் பேசுகையில், "பூடானுடனான இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு ரூ.10 ஆயிரம் கோடி என்ற அளவிற்கு உயரும். இரண்டு நாடுகளிலும் உள்ள ஆதாரங்களை பயன்படுத்திக் கொண்டு, வளர்ச்சி அடையும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். உங்கள் பிரதமர் என்னிடம் அதிக திட்டங்களை நிறைவேற்ற ஆவலுடன் உள்ளதாக தெரிவித்தார். இந்த இலக்குகளை அடைய இந்தியா உங்களுடன் இணைந்து பணியாற்றும். புதிய நான்கு நீர்மின் திட்டங்களுக்கான திட்ட அறிக்கையை இரண்டு நாடுகளும் சேர்ந்து தயாரிக்கும். இந்த திட்டங்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் நிறைவேறினால், பூடானிடம் இருந்து 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இந்தியா பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்" என்று கூறினார்.

கடந்த மார்ச் மாதம் செயல்ட துவங்கிய 1020 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் தாளா நீர் மின்உற்பத்தி நிலையத்தின் பெயர்ப் பலகையை நாடாளுமன்ற வளாகத்தில் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பூடான் பொருளாதார உறவு அமைச்சர் காண்டூ வாங்சக் பேசுகையில், டுரிக் புனின்சம் தோஷ்கபா தலைமையிலான அரசு, பூடானில் 2020 ம் ஆண்டு இறுதிக்குள் நீர் மின் திட்டங்கள் மூலம், 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உறுதி பூண்டுள்ளது என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், இந்தியாவுடனான ஒத்துழைப்புடன், 990 மெகாவாட் திறனுள்ள பனடசாஞ்சி இரண்டாவது நீர் மின் திட்டம், மன்கோடுசு என்ற இடத்தில் 720 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் திட்டம், சங்கோஷ் என்ற இடத்தில் 4060 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் திட்டம் அமைக்கப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்