முன்பேர வர்த்தக தடையால், உணவுப் பொருட்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. (விலை குறையவில்லை) இதனால் முன்பேர வர்த்தக தடையில், மற்ற பொருட்களை சேர்க்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உணவு துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசு முன்பேர வர்த்தகத்தில் கோதுமை அரிசி போன்ற உணவு தானியங்களுக்கு தடை விதித்துள்ளது.
சென்ற 7 ந் தேதி முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வர்ட் மார்க்கெட்டிங் கமிசன் உருளை கிழங்கு, சோயா எண்ணெய், கொண்டைக் கடலை, ரப்பர் ஆகியவற்றின் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு நான்கு மாதங்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் புதுடெல்லியில் இன்று மத்திய உணவு அமைச்சர் சரத்பவார் பேசுகையில், உணவுப் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இவற்றின் விலையில் பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் நான்கு பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்கும் முடிவை, பார்வர்ட் மார்க்கெட் கமிசன் எடுத்தது.
இதனால் விலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்பது எனக்கு தெரியும். இந்த மாதம் முன்பேர வர்த்தக தடையில் மற்ற பொருட்கள் சேர்க்கப்படாது என்று நம்புகின்றேன் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த வருடம் அரசு விவசாயிகளிடம் இருந்து ஏற்கனவே 185 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்யப்பட்டுள்து. இதனால் இந்த வருடம் கோதுமை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இருக்காது.
நான், மாநில அரசுகளிடமும், இந்திய உணவு கழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். இதில் இருந்து கோதுமை கொள்முதல் செய்ய வேண்டிய இலக்கான 150 லட்சம் டன்னைவிட, கொள்முதல் தாண்டிவிடும் என்று தெரிகிறது. இந்த வருடம் 200 லட்சம் டன் வரை கொள்முதல் செய்யப்படும் என தெரிய வந்துள்ளது. எனவே இந்த வருடம் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
உணவு உற்பத்தியை சவாலாக எடுத்துக் கொண்டு, இதை சாதித்த பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
சென்ற வருடம் அரசு 150 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்தது. ஆனால் 111 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதி செய்யப்பட்டது.
மத்திய அரசுக்காக, இந்திய உணவு கழகம் கோதுமை, நெல் கொள்முதல் செய்கிறது. இது பொது விநியோக திட்டத்தின் (ரேஷன் கடைகள்) வாயிலாக, சலுகை விலையில் விநியோகிக்கப்படுகிறது என்று சரத்பவார் தெரிவித்தார்.
இந்த வருடம் இறுதியலில் சில மாநிலங்களின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் அடுத்த வருடம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.