வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது.
இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.41.51/ 41.53 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.41.35.
பிறகு வர்த்தகம் ஆரம்பித்தபோது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 1 டாலர் ரூ.41.50 முதல் ரூ. 41.71 என்ற அளவில் விற்பனையானது.
அந்நிய செலாவணி சந்தையில் கடந்த சில நாட்களாக பெட்ரோலிய நிறுவனங்களும், அந்நிய நாட்டு வங்கிகளும் தினசரி டாலரை வாங்கி வருகின்றன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்குகின்றன. இந்தியாவின் தேவையில் 70 விழுக்காடு பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை வாங்குகின்றன.
பொதுத்துறை வங்கியின் உயர் அதிகாரி கூறுகையில், நேற்று மட்டும் பெட்ரோலிய நிறுவனங்கள் அந்நிய செலாவணி சந்தையில் 50 கோடி டாலரை வாங்கியதாக தெரிவித்தார்.
நேற்று பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 122.73 டாலராக அதிகரித்தது.