வணிகர்கள் செலுத்த வேண்டிய பழைய நிலுவை வரி ரூ.99 கோடி தள்ளுபடி: தமிழக அரசு!
புதன், 30 ஏப்ரல் 2008 (09:58 IST)
நலிந்த வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசுக்கு வரவேண்டிய நிலுவை வரித்தொகையான ரூ.98 கோடியே 71 லட்சத்தை தள்ளுபடி செய்ய அரசு முடிவு எடுத்து உள்ளது என்று அமைச்சர் உபயதுல்லா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், வணிகவரித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதில் அளித்து வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா பேசுகையில், தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரி மற்றும் தண்டத் தொகை 1951-ம் ஆண்டில் இருந்து 2001-02 வரையிலான 50 ஆண்டுகளுக்கான ஏறக்குறைய 2 ஆயிரத்து 810 கோடி ரூபாய் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில், 1951-52-ம் ஆண்டில் இருந்து 1991 வரையுள்ள காலத்தில் மட்டும் 98 கோடியே 71 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அத்தகையை நலிந்த வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலுவைத்தொகையான 98 கோடியே 71 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்திட முடிவு எடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்த தள்ளுபடி திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்படும்.
புளி, தனியாவுக்கு வரி விலக்கு!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்வத்தல், புளி, தனியா, மஞ்சள், பெருங்காயம் போன்ற பொருட்களுக்கு விற்பனை தொகையின் அடிப்படையில், மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றுக்கு 4 விழுக்காடு வரிவிதிக்கப்படுகிறது. இந்த வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
1-1-2007 முதல் 31-3-2007 வரை உள்ள மதிப்புக் கூட்டு வரிவிதிப்புகள் அனைத்தும் சுய வரிவிதிப்பு முறையின் கீழ் வரிவிதிப்பு செய்யப்பட உள்ளது. அதே போன்று 1-4-2006 முதல் 31-12-2006 வரை உள்ள காலத்துக்கும் எளிமையான வகையில் வரிவிதிப்புகளை முடிந்ததாக கருதும் வரிவிதிப்புகளாக முடித்திட வகை செய்ய மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் உபயதுல்லா தெரிவித்தார்.