சிறு அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகை தொடரும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஏ.ராஜா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வருமான வரி விலக்கு சலுகை அடுத்த ஆண்டுடன் (2009) முடிவடைகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 14 மாதங்களில் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு போன்ற பணிகளை கொடுக்கும் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இங்குள்ள தகவல் தொழில்நுட்ப துறை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது.
இந்நிலையில் வருமான வரிச் சலுகையும் நீக்கப்பட்டால், இந்நிறுவனங்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க வேண்டியதிருக்கும். இதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு வருமான வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோரி வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் ராஜா, மத்திய அரசு அடுத்த ஆண்டிற்கு பிறகும் வருமான வரிச் சலுகையை நீட்டிக்கலாம் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து பேசியுள்ளேன். அவர் சலுகைகளை வழங்க விரும்புகின்றார். நாங்கள்.சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதை விரும்பிவில்லை.
நான் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து அடுத்த 10 வருடத்திற்கு வருமான வரிச் சலுகையை நீட்டிப்பது தொடர்பாக பேசியுள்ளேன். இதற்கு அவர் தயக்கம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே வருமான வரிச் சலுகையின் பலன்களை அனுபவித்து நன்கு வளர்ச்சி அடைந்த நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க கூடாது என சிதம்பரம் நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
நிதி அமைச்சர் அடுத்த மூன்று வருடங்களுக்கு வருமான வரிச் சலுகையை நீட்டிக்கலாம் என கருதுவதாக தெரிகிறது.
தகவல தொழில் நுட்ப நிறுவனங்களின் அமைப்பான நசோசெம், வருமான வரிச் சலுகையை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய துவங்கிவிடும் என்று கூறுகின்றது.