வங்கி ரொக்க கையிருப்பு விகிதம் அதிகரிப்பு!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (11:44 IST)
பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை, ரிசர்வ் வங்கி நேற்று அரை விழுக்காடு அதிகரிப்பதாக அறிவித்தது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு வங்கி நிறுவனங்களுக்கு இடையேயும், நிதிச் சந்தையிலும் நிலவியது.

ரிசர்வ் வங்கி வருகின்ற 29ஆ‌ம் தேதி அறிவிக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரிசர்வ் வங்கி நேற்று வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு அதிகரிப்பதாக அறிவித்தது.

தற்போது வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 7.5 விழுக்காடாக உள்ளது. இது தற்போது 8 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சந்தையில் பணப்புழக்கம் ரூ.18,500 கோடி குறையும். ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக பணவீக்கம் 5 விழுக்காடுக்கு மேல் உயராது என கணித்து இருந்தது. ஆனால் சில வாரங்களாக தொடர்ந்து பணவீக்கம் 7 விழுக்காடுக்கும் அதிகமாக இருப்பதால், இதை கட்டுப்படுத்தும் விதத்தில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு உயர்த்தியுள்ளது.

இதன் படி ஏப்ரல் 26 ஆ‌ம் தேதி முதல் கால் விழுக்காடும், மே 10ஆ‌ம் தேதி முதல் கால் விழுக்காடு ரொக்க கையிருப்பு விகிதம் அதிகரிக்கப்படும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள பொருளாதார நிலைமையில், பணத்தேவை மற்றும் பணப் புழக்கத்தின் அளவை கணக்கிடும் போது, பணவிக்கம் அதிகரிக்காமல் தடுக்க உடனடியாக தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டியதுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த வருடம் அக்டோபரில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 7 விழுக்காட்டில் இருந்து 7.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த உயர்வால், வங்கிகள் நிதி திரட்டுவதற்கான செலவு கூடுதலாக 0.4 விழுக்காடு அதிகரிக்கும் என வங்கிகள் கருதுகின்றன.

வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரிப்பது பற்றி அடுத்த வாரம் தான் தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்