ஏற்றுமதி சலுகை நீட்டிப்பு!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (19:44 IST)
ஏற்றுமதியாளர்கள் கட்டும் உள்நாட்டு வரியை திரும்ப கொடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று அயல் வர்த்தக கொள்கை ஆய்வறிக்கையை புது டெல்லியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது.

ஏற்றுமதியாளர்கள் கட்டும் உள்நாட்டு வரியை திரும்ப வழங்கும் சலுகை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதே போல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, சலுகை வட்டியில் கடன் வழங்கும் திட்டம் அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு துறைக்காக புதிய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும். வருமான வரி சட்டம் 10 பி பிரிவின் கீழ் 100 விழுக்காடு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வருமான வரி விலக்கு சலுகை, 2009 ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கப்படும்.

பொம்மை, விளையாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடன் தொகை உயர்த்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரு‌ம் அளவை விட கூடுதலாக 5 விழுக்காடு வழங்கப்படும்.

சென்ற நிதி ஆண்டில் (2007-08) ஏற்றுமதி இலக்கு 1550 கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டது. சென்ற நிதி ஆண்டின் ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகரித்துவிட்டது.

இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 2000 கோடி டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டிய நாடுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக 10 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை மங்கோலியா, போஸ்னியா-ஹெர்ஜிகோவினா, அல்பேனியா, மெக்டோனியா, குரோட்டியா, ஹோன்டுரஸ், டிஜிபிடி, சூடான், கானா, கொலம்பியா ஆகியவைகளாகும் என்று கமல்நாத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்