எண்ணெய் மற்றும் இயற்கை எரியாயு கார்ப்பரேஷனின் (ஓ.என்.ஜி.சி.) வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. விதேஸ் லிமிடெட் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைச் சேர்ந்த பெட்ரோலிசோ டி வெனிசுலா என்ற பெட்ரோலிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி வெனிசுலா நிறுவனத்திற்கு சொந்தமான கிரிஸ்டோபால் என்ற பகுதியில் உள்ள பெட்ரோலிய எண்ணெய் துரப்பண கிணற்றில் 40 விழுக்காடு பங்குகளை வாங்குகிறது. மீதம் உள்ள 60 விழுக்காடு பங்குகள் வெனிசுலா நிறுவனத்திடமே இருக்கும்.
இது மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா வெனிசுலாவில் மேற்கொண்டுள்ள சுற்றுப் பயணத்தின் போது ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தம் கராகஸ் நகரில் கையெழுத்தானது. இதில் ஓ.என்.ஜி.சி. விதேஸ் சார்பில், இதன் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.புட்டோலாவும், வெனிசுலா நிறுவனம் சார்பில் எலியோகோ டில் பினோ கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி தற்போது உள்ள உற்பத்தி இரு மடங்காக உயர்த்தப்படும். இங்குள்ள பெட்ரோலிய எண்ணெய் கிணறுகளில் இருந்து தினசரி 20 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 40,000 ஆயிரம் பேரல்களாக அதிகரிக்கப்படும்.
இந்த ஒப்பந்தப்படி ஓ.என்.ஜி.சி. விதேஸ் 355.73 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.
சவுதி அரேபியாவுக்கு அடுத்து இரண்டாவதாக அதிக பெட்ரோலிய எண்ணெய் வளம் உள்ள நாடு வெனிசுலா. அத்துடன் ஒபெக் அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரே தென் அமெரிக்க நாடு.