உருக்கு, இரும்பு தகடு, கம்பிகள் விலை டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இரும்புத் தாது, உலை கரி (கோக்), இயற்கை எரிவாயு போன்ற உருக்கு ஆலைகளுக்கு தேவையான இடுபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் உருக்கு ஆலைகள் கம்பி,தகடு, வார்பட தொழிற்சாலைகளுக்கு தேவையான மென் இரும்பு போன்றவற்றின் விலையை கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பே உயர்த்தப் போவதாக அறிவித்தன.
மத்திய உருக்குத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கும், உருக்கு ஆலை பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையால், இந்த விலை உயர்வு தள்ளிப் போடப்பட்டது.
ஏற்கனவே பணவீக்கம் 7 விழுக்காடு என்ற அளவை எட்டிவிட்டதால், உருக்கு, இரும்பு விலை அதிகரிப்பதால் பணவீக்கம் மேலும் உயரும். அத்துடன் வாகன உற்பத்தி, கட்டுமானத்துறை போன்றவைகள் பாதிக்கப்படும். உருக்கு தகடு, கம்பிகளை மூலப் பொருளாக கொண்டு இயங்கும் சிறு, குறுந்தொழில்கள், வார்ப்பட தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்.
இந்நிலையில் உருக்கு ஆலைகள் தகடு, கம்பி விலையை டன்னுக்கு ரூ.5,000 வரை அதிகரித்துள்ளன.
தனியார் உருக்கு ஆலைகளான எஸ்ஸார் ஸ்டீல், இஸ்பாட் இன்டஸ்டிரிஸ்,ஜே.எஸ்.டபிள்யூ ஆகியவை விலை அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான செயில் உட்பட மற்ற உருக்கு ஆலைகளும் விலையை அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த விலை உயர்வு பற்றி அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கருத்து தெரிவிக்கையில், தனது அமைச்சகம் உருக்கு விலை உயர்வை தடுப்பதற்கான பரிந்துரைகளை பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவித்து இருப்பதாகவும், தான் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.
உருக்கு விலையை பொதுத்துறை நிறுவனமான செயில் உயர்த்த வேண்டாம் என்று அரசு கூறுமா என்று கேட்டதற்கு ராம்விலாஸ் பஸ்வான் பதிலளிக்கையில், செயில் மட்டும் விலையை உயர்த்தாமல் இருப்பதால், சந்தையில் விலை குறையப் போவதில்லை. இதனால் இடைத்தரகர்கள் தான் இலாபம் சம்பாதிப்பார்கள். தனது அமைச்சகம் இறக்குமதி செய்யப்படும் கட்டுமான நிறுவனங்களுக்கு தேவையான டி.எம்.டி. கம்பிகள், சட்டங்கள் மீது விதிக்கப்படும் 14 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்கவும், இரும்புத் தாது ஏற்றுமதிக்கு 15 விழுக்காடு விதிக்க பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.
கடந்த வாரம் உருக்கு ஆலை உயர் அதிகாரிகள், உருக்கு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விலை உயர்வு பற்றியும், இதனால் ஏற்படும் பணவீக்கம் பற்றியும் ஆலோசனை நடத்தினார்கள்.
இரும்புத் தாதுவை அதிக அளவில் வெட்டி விற்பனை செய்யும் தேசிய தாது வளர்ச்சி கழகம் இரும்பு தாது விலை உயர்வு, உலை கரி, எரிவாயு போன்றவைகளின் விலை உயர்வே, உருக்கு விலை உயர்வுக்கு காரணம் என்று உருக்கு ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர்.