வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ரூ.40 ஆக உயர்ந்தது.
இன்று காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் மதிப்பு ரூ.40.02/40.03 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.96/39.97
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்தது.
பங்குச் சந்தை குறியீட்டு எண் காலையில் இருந்தே குறைந்ததால்,அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் வரத்து குறைந்தது.
ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு ரூ.40 என்ற அளவிலேயே பராமரிக்க விரும்புகின்றது. இன்று ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு படி, டாலரின் மதிப்பு ரூ.40 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாணயமான யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பும் அதிகரித்தது. கடந்த பல மாதங்களாக யூரோ, யென் ஆகியவைகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜீ-7 நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட வளரும் நாடுகளுக்கும், ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் இடையிலான கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்கப்படும். இதனால் டாலரின் மதிப்பு உயர்வதாக தெரிகிறது.