மூலப் பொருட்கள் விலையேற்றம் : டான்ஸ்டியா ஆர்ப்பாட்டம்!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (15:48 IST)
பல்வேறு தொழில் துறைகளுக்குத் தேவையான உருக்கு அலுமினியம், பிளாஸ்டிக் விலை உயர்வை கண்டித்து, டான்ஸ்டியா சங்கத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பல்வேறு உதிரி பாகங்ளை தயாரித்து வழங்குகின்றன. அத்துடன் இவை ஒப்பந்த அடிப்படையிலும் தயாரித்து வழங்குகின்றன.
சிறு, குறுந் தொழிற்சாலைகளில் இதில் 75 விழுக்காடு மூலப் பொருட்களாக உருக்கு, இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துகின்றன. இதன் விலைகள் கடுமையாக அதிகரித்து விட்டதால், இந்த தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதன் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி டான்ஸ்டியா தலைமையில் தொழில் முனைவோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் தலைவர் ஏ. சண்முக வேலாயுதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது 1,500க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
டான்ஸ்டியா விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்த தொழில் நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த தொழிற்சாலைகள் மூடவேண்டிய அபாயத்தில் உள்ளன.
அத்துடன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரியை 14 விழுக்காட்டில் இருந்து எட்டு விழுக்காடாக குறைக்க வேண்டும், உற்பத்தி வரி விலக்கை ரூ. 1.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.