இந்திய-துர்க்மெனிஸ்தான் எரிவாயு ஒப்பந்தம் நிறைவேறியது!

சனி, 5 ஏப்ரல் 2008 (20:07 IST)
இந்தியா-துர்க்மெனிஸ்தான் நாடுகளிடையே எண்ணெய், எரிவாயு ஒப்பந்தங்களில் இன்று இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மத்திய ஆசிய நாடுகளில் ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஹ‌மீது அன்சாரி, மத்திய அயலுறவஇணை அமைச்சர் அகமது அகியோர் இன்று துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஸ்காபத்தில் அந்நாட்டு துணைப் பிரதமர் டச்பெர்டே டேகிவ்வை சந்தித்தனர்.

அப்போது, இயற்கை எரிவாயு, எண்ணெய் ஆகியவை உட்பட பல்வேறு திட்டங்கள் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில் ஹைட்ரோகார்பன், குழாய் எரிவாயு குறித்த ஒப்பந்தங்கள் குறிப்பிடத்தக்கது.

அன்சாரியின் இந்த சுற்றுப்பயணத்தில், இருநாடுகளுடனான உறவுகளில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அதிக எரிபொருள் தேவையுள்ள இந்தியாவில் அவற்றை இறக்குமதி செய்யவதற்கான இந்த சந்திப்பால், துர்க்மெனிஸ்தானின் இயற்கை பங்குதாரராக இந்தியா மாறியுள்ளது. பரந்துவிரிந்த ஹைட்ரோகார்பன் ஆதாரங்களை கொண்டுள்ள துர்க்மெனிஸ்தான் உலக நாடுகளின் எரிபொருள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று அன்சாரி குறிப்பிட்டார்.

துர்க்மெனிஸ்தான் குடியரசுத் தலைவர் குர்பங்குலி பெர்டிமுகமேதோவ் கூறுகையில், "இந்திய நிறுவனங்களின் பங்களிப்பால், துர்க்மெனிஸ்தானுடன் எண்ணெய்-எரிவாயு திட்டங்கள் இருநாடுகளுக்கும் பயன்தரும்" என்றார்.

மேலும், துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (டி.ஏ.ி.ஐ.) குழாய் எரிவாயு திட்டத்தில் ஒத்துழைப்பை உறுதிசெய்ததற்கு அன்சாரி அந்நாட்டு தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்