ரூபாயின் மதிப்பு 24 பைசா சரிவு!

வியாழன், 13 மார்ச் 2008 (12:54 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 24 பைசா சரிந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.45/40.47 என்ற அளவில் இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 1 டாலர் ரூ.40.57/40.58 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 0.24 பைசா சரிவு. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.33/40.34.

இந்திய பங்குச் சந்தையிலும், மற்ற அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் இன்று காலை குறியீட்டு எண்கள் சரிந்தன.

அத்துடன் தொழில்துறை உற்பத்தி இந்த ஜனவரியில் 5.3 விழுக்காடாக குறைந்தது என்று நேற்று மத்திய அரசு அறிவித்தது. இது சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் 11.6 விழுக்காடாக இருந்தது.

தொழில் துறை உற்பத்தி பாதிப்பு என்ற அதிகாரபூர்வ தகவல் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அந்நிய செலவாணி சந்தையிலும் பாதிப்பை உண்டாக்கியது.

நியூயார்க் சந்தையில் நேற்று பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 110.20 டாலராக உயர்ந்தது. இந்தியா உள்நாட்டு தேவையில் 70 விழுக்காடு பெட்ரோலிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இதன் விளைவாக பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் பங்குச் சந்தையையும், அந்நியச் செலவாணி சந்தையையும் பாதித்தன.

பெட்ரோலிய நிறுவனங்களுக்காக வங்கிகள் அதிக அளவு டாலர்களை வாங்கியதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, டாலரின் மதிப்பு அதிகரிக்க காரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்