2011-ல் சில்லரை வர்த்தகம் ரூ.23.60 லட்சம் கோடியாக அதிகரிக்கும் : பாஸ்கர் ராவ்!
சனி, 16 பிப்ரவரி 2008 (16:26 IST)
இந்தியாவின் சில்லரை வர்த்தகம் வரும் 2011 ஆம் ஆண்டில் 23 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாம்தாரி ஃப்ரஸ் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் பொது மேலாளர் பி.டி.பாஸ்கர் ராவ் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த, வேளாண்மைப் பொருட்களின் சில்லரை வணிக புரட்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பாஸ்கர் ராவ், சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியதால் நாட்டின் சேவைத்துறை மிகப்பெரிய ஆற்றலைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சில்லரை வர்த்தகத் துறையும் உத்வேகத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதைக் கண்ட சிறு மற்றும் நடுத்தர சில்லரை வணிகர்கள் பயப்படத் தேவையில்லை என்றும், பெரிய நிறுவனங்களின் வருகையால் எந்தவித விளைவும் ஏற்படப்போவதில்லை என்றும் பாஸ்கர் ராவ் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் ரிலையன்ஸ், ஸ்பென்ஸர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் தங்களது தடத்தைப் பதிக்க குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும் என்றும், இந்த காலக்கட்டத்தில் சில்லரை வணிகர்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடலாம் என்றும் பாஸ்கர் ராவ் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களின் தேவையின் தரம், மிதமான விலை, நடந்து செல்லும் தொலைவில் பொருள் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
காய்கறிகள், பழவகைகளை அதன் புத்துணர்ச்சி கெடாமல் பாதுகாப்பது என்பது அண்மையில் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்துள்ள பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையாகும். சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்களுக்கு தேவையான இடம், திறமைமிக்கவர்கள் தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளதாகவும் பாஸ்கர் ராவ் தெரிவித்து உள்ளார்.