சீனாவுடன் வர்த்தக இலக்கு 60 பில்லியன் டாலர்: மன்மோகன் சிங்!
புதன், 16 ஜனவரி 2008 (12:17 IST)
இந்தியா - சீனா இடையேயான வர்த்தகத்தின் அளவு வரும் 2010 ஆம் ஆண்டிற்குள் 60 பில்லியன் டாலராக (1 பில்லியன் 100 கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சீன பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் ஏர் இந்தியா விமானத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். வர்த்தகம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையின் போது சீனா சந்தைப் பொருளாதாரத்தின் தங்களது நிலையையும், இந்தியா வரியில்லாத இருதரப்பு வர்த்தகத்தால் ஏற்படும் இழப்பு, விவசாய பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்தும் விவாதத்தின் போது எடுத்து வைத்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து இருநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர்களும் இது தொடர்பான மண்டல வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு செயலாக்க குழு அளித்த பரிந்துரையை ஆய்வு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா இடையே வரும் 2010 ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை, தற்போது 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாளை நடை பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர், அதுபோன்ற ஒரு அம்சம் அமைச்சரவை விவாதப் பட்டியலில் தாம் பார்க்கவில்லை என்றும், இது குறித்து இன்னும் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், விலையேற்றம் செய்ய முடிவு செய்யப்படும் முன்னர் அனைத்துக் அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.