நாமக்கல் மண்டலத்தில் 850-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 2 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மணிப்பூர், இம்பால் பகுதியில் கோழிகளை பறவை காய்ச்சல் நோய் தாக்கியது. இதனால் துபாய் மற்றும் வளைகுடா நாடுகள் முட்டை இறக்குமதிக்குத் தடை விதித்தன.
தற்போது இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து குவைத், ஏமன், கத்தார், ஈராக், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் முட்டை இறக்குமதிக்கு விதித்திருந்த தடையை விலக்கி வருகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் வளைகுடா நாடுகளுக்கு 10 கண்டெய்னர்களில் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
துபாய் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இந்திய முட்டைக்கு தடையை நீக்கவில்லை. துபாய்க்கு முட்டை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைக்கும்பட்சத்தில் முட்டை விலை உயரும் என கோழி பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.