கோதுமை இறக்குமதிக்கு சர்வதேச விலைப்புள்ளி!

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:59 IST)
மத்திய அரசின் நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி.) 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமை இறக்குமதி செய்வதற்காக சர்வதேச அளவில் விலைப்புள்ளியை கோரியுள்ளது.

இதற்கான விலைப்புள்ளி அறிவிப்பில் கோதுமையை அடுத்த வருடம் ஏப்ரல் 15ந் தேதிக்குள் இந்திய துறைமுகங்களில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

முந்த்ரா துறைமுகத்தில் 65 ஆயிரம் டன், காகிநாடா துறைமுகத்தில் 50 ஆயிரம் டன், கன்ட்லா துறைமுகத்தில் 45 ஆயிரம் டன், சென்னை, விசாகப் பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களில் தலா 40 ஆயிரம் டன், கொச்சி, மும்பை துறைமுகங்களில் தலா 35 ஆயிரம் டன் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான விலைப்புள்ளி டிசம்பர் 17 ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். அன்றே விலைப்புள்ளி திறக்கப்படும். இறுதி முடிவு 22 ந் தேதி எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதில் எஸ்.டி.சி. எதிர்பார்‌க்கும் விலைக்கு கோதுமை கிடைத்தால், மேலும் 5 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படும் என அரசு அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் (2007-08) மத்திய அரசு 23 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஒரு டன் 325.5 டாலர் என்ற விலையில் 5.11 லட்சம் டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதே போல் 1 டன் 389.45 டாலர் என்ற விலையில் 7.95 டன் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

மத்திய உணவு அமைச்சகம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமைக்கு நியாயமான விலை கொடுக்காமல் அந்நிய நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் கட்சிகள், விவசாய சங்கம் உட்பட பல பிரிவுகளில் இருந்து பரவலாக எழுந்தது. இதனால் தற்போது கோதுமை இறக்குமதி செய்யும் பொறுப்பு உணவு அமைச்சகத்திடம் இருந்து வர்த்தக அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சகம் அதன் கட்டுபாபாட்டில் உள்ள எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி., பி.இ.சி. ஆகிய நிறுவனங்களிடம் 10 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

இதில் எம்.எம்.டி.சி. 1 டன் 400.19 டாலர் என்ற விலையில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 500 டன் கோதுமை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் பி.இ.சி. 1 டன் 396.9 டாலர் என்ற விலையில் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்