இந்தியாவில் இருந்து வங்காள தேசத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் கடந்த மாதம் 15 ந் தேதி கடுமையான புயல் தாக்கியது. இதனால் சுமார் 3,500 பேர் கொல்லப்பட்டதுடன், கடுமையான சேதம் ஏற்பட்டது. சிதார் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாதிப்பிற்குள்ளான வங்காள தேச மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கியது.
இந்த உதவிகளை நேரில் கொடுப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு நாள் பயணமாக வங்காள தேசத்திற்கு சென்றுள்ளார். இன்று டாக்காவில் ஜியா சர்வதேச விமான நிலையத்தில் அடையாள பூர்வமாக உதவிப் பொருட்களை வங்க தேச வெளியுறவு ஆலோசகர் இப்தார் சவுத்திரியிடம் வழங்கினார்.
அப்போது பிரணாப் முகர்ஜி வங்காள தேசத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்ய விதித்துள்ள தடையை இந்தியா நீக்கும் என்று அறிவித்தார்.
அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, புயலால் பாதிக்கப்பட்டுள்ள வங்காள தேசத்திற்கு இந்தியா ஏற்கனவே ரூ.6 கோடி மதிப்புள்ள மருந்து, போர்வைகள், உடனடியாக உண்ணும் உணவு, தற்காலிக முகாம் அமைப்பதற்கான டென்ட், குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
இந்தியா எப்போதுமே வங்காள தேசத்துடனான உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் புயலின் தாக்குதலால் சீர்குலைந்துள்ள வங்காளதேசத்தை புனரமைப்பதற்கு எல்லா உதவிகளையும் இந்தியா செய்யும். பாதிக்கப்பட்டுள்ள 10 கிராமங்களை தத்து எடுத்து கொண்டு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும்.
இந்தியா ஏற்கனவே 50 ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இப்போது மேலும் 5 லட்சத்து 50 ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தியாவின் உணவு உற்பத்தி குறைந்துள்ள காரணத்தினால், அக்டோபர் மாதம் பாசுமதி அரிசி தவிர மற்ற சன்னரக அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.