வியாபாரிகள் கடன் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல : உச்சநீதி மன்றம்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (18:04 IST)
வியாபாபார நிறுவனங்கள் அவர்களுக்கு சரக்குகளை வழங்குபவர்களுக்கு கடன் அல்லது முன்பணம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல. அத்துடன் இது கடன் வழங்கல் சட்டத்தின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் வைகுந்தா செனாய் அண்ட் கோ. இது கொட்டை பாக்கு மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தொடர்ந்து கொட்டை பாக்கு வழங்கும் பி. ஹரிசர்மா என்பவருக்கு ரூ.72,044 முன்பணமாக வழங்கியது. இவர் முன்பணம் வாங்கிக் கொண்டு கொட்டை பாக்கை வழங்கவில்லை. இவரிடம் இருந்து பணத்தை திருப்பி வாங்குவதற்காக, நிறுவனம் வைகுந்தா செனாய் அண்ட் கோ விசாரணை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில், வியாபார நிறுவனங்கள் அவர்களுக்கு சரக்கு சப்ளை செய்பவர்களுக்கு கடன் கொடுப்பது (முன்பணம் வழங்குவது) 1961 ஆம் ஆண்டு கர்நாடக கடன் வழங்கல் சட்டத்தின் கீழ் வரும் என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து வைகுந்தா செனாய் அண்ட் கோ உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மாத்தூர், நீதிபதி மார்க்கெண்டய கட்ஜு ஆகியோரை கொண்ட நீதிமன்ற அமர்வு மேல்முறையீட்டை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

“வியாபாரிகள் அவர்களுக்கு சரக்குகளை வழங்குபவர்களுக்கு வழங்கும் முன் பணம் அல்லது கடனை சட்ட விரோதமானதாகவோ, கடன் வழங்குல் சட்டத்தின் கீழ் வருவதாகவோ கருதக்கூடாது. வியாபாரிகள் அவர்களின் வியாபாரம் சுமுகமாக நடப்பதற்கு இது மாதிரியான வழிகளை கடைபிடிக்கின்றனர” என்று நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.


வெப்துனியாவைப் படிக்கவும்