உணவுப் பொருள் ஏற்றுமதி தடையை நீக்குக : வங்காளதேசம் கோரிக்கை!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (19:11 IST)
இந்தியாவில் இருந்து வங்காள தேசத்திற்கு அரிசி, கோதுமை, தாணியங்கள் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று வங்காள தேசம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா - வங்காளதேசம் இடையே வர்த்தகம் தொடர்பான இரண்டு நாள் கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் வங்காள தேசத்தின் சார்பில் அந்நாட்டு வர்த்தக அமைச்சகத்தின் இணை செயலாளர் அப்துல் வகாப் மியான் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் சார்பில் வர்த்தக அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜூல் ஹர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வங்காளதேச அதிகாரிகள், வங்காளதேசத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரிசி, கோதுமை, தாணியங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

இரண்டு நாட்டு அதிகாரிகளும் சுங்கத் தீர்வை நீக்குதல், சுங்கத் தீர்வையை குறைத்தல், சுங்க சோதனை, இறக்குமதி செய்வதற்கான அங்கிகரிக்கப்பட்ட துறைமுகம், எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்குதல் ஆகியவை பற்றி விவாதித்தனர். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான வழிமுறைகளை பற்றி விவாதித்தனர்.

வங்காளதேசத்தில் இருந்து பாக்கு, ஜமீன்தானி ரக சேலைகள், பேட்டரி, பெண்களுக்கான ஒப்பனை பொருட்கள், சோப்பு போன்ற குளியலறை பொருட்களை இறக்குமதி செய்ய விதிக்கப்படும் வரியை நீக்க வேண்டும். இந்தியாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க வங்காளதேச தர நிர்ணய அமைப்பு வழங்கும் தரச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும்.

வங்காள தேசத்தில் இருந்து மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடையாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இரு நாட்டு எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடியின் உள்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும். வங்காளதேசத்தில் இருந்து சாலை வழியாக லாரிகளின் மூலமாக இந்திய எல்லையில் நுழைய அனுமதி வழங்க வேண்டும் என்று வங்காளதேச அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

இத்துடன் எல்லைப் புறங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்க புதிய சுங்கச் சாவடிகளை ஏற்படுத்துவது, வங்கி வசதிகளை அதிகப்படுத்துவது உட்பட பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தற்போது இந்தியாவில் இருந்து 200 கோடி டாலர் மதிப்பிற்குகான பொருட்களை வங்காளதேசம் இறக்குமதி செய்கிறது.

ஆனால் வங்காளதேசத்தில் இருந்து 30 கோடி மதிப்பிற்கான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்கிறது.
இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வங்காளதேசம் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு வசதியாக இறக்குமதி வரி நீக்குதல், போக்குவரத்து வசதிகளை அதிகரித்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் படி கோரிவருகிறது.













தற்போது இந்தியாவைச் சேர்ந்த லாரிகள் வங்காளதேச எல்லையில் இருந்து 500 மீட்டர் உள்ளே செல்ல வங்காளதேச அரசு அனுமதி அளித்துள்ளது.













வெப்துனியாவைப் படிக்கவும்